Pages

Thursday, November 18, 2021

பனைமரச்சாலை - காட்சன் சாமுவேல்

இந்நூல் அடிப்படையில் ஒரு பயணக்கட்டுரை நூல்.  மும்பையில் தொடங்கி குமரியில் முடிந்த மோட்டார் பைக் பயணக் குறிப்புகளின் தொகுப்பு இந்நூல். பனை மரங்களை பின் தொடர்ந்தே, புல்லடில், மும்பையில் தொடங்கி ஆந்திரா வழி தமிழகம் வந்தடைந்து கிழக்கு கடற்கரை யோரம் பயணப்பட்டு குமரி வந்தடைகிறார் காட்சன் சாமுவேல் அவர்கள். புல்லட் பயணம் புதினம் இல்லை எனினும் தேர்ந்தெடுத்த பாதையும் பயணம் நெடுக விரிவடையும் பனை உலகமும் இந்நூலை முக்கியமான ஒன்றாக்குகிறது. 


ஆதி பனை

இன்னதென்று அறிய தொடங்காத பருவத்தில் இருந்தே நமக்கு ஒரு விஷயம் குறித்தோ பொருள் குறித்தோ ஒரு பிடித்தம், நிறைவு, தேடல் இருக்கும், ஒவ்வொருவருக்கும் மாறுபடும் அந்த பொருளோ விஷயமோ இன்ன காரணத்தால் பிடிக்கும் என்று கூற இயலா வண்ணம் மிக சிறு வயதில் அரும்பி நாம் வளர மனதளவில் ஒரு நீங்காத இடத்தில் இருக்கும். சூழலோ, வளர்ப்போ, சமூக விழுமியமோ, சாதியோ, மதமோ, நிறுவனமோ, சுற்றமோ நம்மை பாதிக்க தொடங்கும் முன்னரே அமைந்திருக்கும் ஆதி ஊற்று. காட்சன் அவர்களின் மனதில் அவ்வகையில் அரும்பியதே இந்த ஆதி பனை ஊற்று. பனையை சுற்றி தனது விஷயங்களை ஒருங்கிணைக்க தொடர்ந்து எத்தனிக்கையில் அமைந்த ஒரு பயணம் இது.பனையை பற்றி மட்டுமல்லாது நம்மை சுற்றி அமைந்துள்ள நிகர் உலகின் சம காலத்தின் விழுமியங்களை மக்கள் மனதின் அபிலாஷைகளை மேலும் நெருங்கி அறிய ஒரு வாய்ப்பாகவும் இந்நூல் அமைந்துள்ளது. காட்சன் அவர்களின் பனைக் கனவு நாம் இதுவரை கண்டடைந்துள்ள மெய்யியல் சார்ந்த பொருளாதார அரசாங்க நிறுவன அமைப்புகளின் விழுமியங்களை மீள்பார்வை காண ஒரு சந்தர்ப்பம்.


பனை மெய்யியல்

நூல் நெடுக பனை சார்ந்த  விவிலிய குறிப்புகள் ஏராளம் உள்ளன. அனைவரும் அறிந்த குருத்தோலை ஞாயிறு முதல் அறியாத பல பக்கங்களில் பனை குறித்த குறித்த குறிப்புகளுடன் விரவியுள்ளது இந்நூல், சைவ திருமுறைகளில் இருந்தும் சைவ தல புராணங்களில் இருந்தும் திருக்குறளில் இருந்தும் பல குறிப்புகள் கொண்டது இந்நூல், திருச்சபை குறித்த திறந்த மனம் கொண்ட விமர்சனங்கள் அடங்கிய புத்தகம் இது. பண்டு தொட்டு வழங்கப்படும் நூல்கள் என்றளவில் முக்கியம் பெற்றாலும் இருப்பதோராம் நூற்றாண்டின் பனை மெய்யியல் அமைய எவ்வாறான அடித்தளம் தேவைப்படும், பண்டைய நூல்களின் மறு கூறல்களுக்கு இணையாக இன்றைய பனை மெய்யியல் அடித்தளம் அமைய வேண்டும்,  சமூக சடங்குகள், பனை புராணம்,  பனை கிராமம், சூழியல் பார்வை, உடல் உழைப்பு, உணவு பழக்கம் இவை சுற்றி பின்னப்பட்ட ஒரு மெய்யியல் உலகம் அமையலாம் 


பனைப பொருளாதாரம்

பனை பொருளாதாரத்தை புரிந்து கொள்ள மேலிருந்து கீழும் கீழிருந்து மேலும் சம வாய்ப்புகள் உள்ளன. பனையில் இருந்து கிடைக்க கூடிய பட்டியல் கீழிருந்து மேல் என்றால், பனை பொருட்களுக்கான சந்தை உருவாக்கம் மேலிருந்து கீழ். சந்தை பொருளாதாரம் நீடித்த ஒரு தொடர் தேவையை உறுதி செய்யும் அமைப்பாகவும், பல பனை பொருட்களை தயார் செய்ய தேவைப்படும் உடல் உழைப்பு சுரண்டாமல் பெறப்பட கீழிருந்து மேலாக ஒரு இடதுசாரி சங்க அமைப்பும் இணைந்து செயலாற்ற பனை பொருளாதார அமைப்பு ஒரு வாய்ப்பு, சந்தையில் பிற பொருட்களின் நூதனம் முன், எண்ணிக்கையின் முன் பனை சார் பொருட்களின் வலிமை எத்தகையது ? பனை கோரும் உடல் உழைப்பும் பிரதிபலனும் இதர விவசாய அல்லது சேவை நிறுவனங்களில் வேலை அமைகையில் எவ்வாறு ஒப்பு நோக்கி பார்க்கப்படும் ? இந்நூலில் ஆசிரியருடன் பயணிக்கையில் அவர் கூறிய தகவல்கள் அனுபவங்களை தொகுக்கையில் மேல் கூறிய வரிகள் அமைந்தன. ஆசிரியர் கூறுவது போல் கள்ளை முன்னிலை படுத்தாது பதநீர் கருப்பட்டி யை முன்னிலை படுத்தியே சந்தை அமைய வேண்டும்


பனை அரசாங்கம் 

பனை காதி கிராம நிர்வாக அமைப்பின் கீழ் வருகிறது. அரசாங்க முன்னெடுப்புகள் காயும் பழமுமாக தான் எப்போதும் அமைகின்றன , முழு தோல்வியான அரசாங்க அமைப்பு பல இடங்களில் உள்ளது தான், பனை விஷயத்தில் கடலூர் அருகே ஒரு பேய் பங்களா போல் நம் மாநிலத்தின் பனை ஆராய்ச்சி நிறுவனம் அமைந்திருப்பதை ஆசிரியர் வருத்தத்தோடு பகிர்கிறார்.எளிதாக அரசின் செலவீனங்களின் ஒரு பகுதி பனையை ஒட்டி அமைய வாய்ப்பிருக்கிறதா ? அரசாங்க ரேஷன் பொருட்களில் பாமாயில் கூட இன்னும் அதிகமாக பனை சார் பொருட்கள் கொடுக்க  வாய்ப்புள்ளதா ? அரசாங்க பள்ளிகளில் பனை கைவினை ஒரு பயிற்று வகுப்பாக இருக்க வாய்ப்புண்டா ? காட்சன் அவர்களுடன் பயணிக்கையில் அரசு நிறுவனங்களின் வீழ்ச்சியை நாம் காண்கிறோம். மீண்டும் ஒரு புதிய நிறுவனம் காயா பழமா என்பதற்கு முன் அரசின் சொந்த தேவையை பனை வழி பூர்த்தி செய்ய இயலுமா என்கிற எண்ணம் தோன்றியது. 


பனைத் தொழில்நுட்பம்

பனை பொருட்கள் உருவாக்கத்தில் மரம் ஏறுதல் உயிர் கவசம் தொடங்கி பதப்படுத்தல், சந்தை போக்கு வரை நவீன தொழில்நுட்பம் எந்த அளவிற்கு சீண்டி இருக்கிறது என தெரிந்து கொள்ள ஆவல், நூலில் ஆசிரியர் காட்டும் சித்திரம் எந்திரவியல் பெரிதும் அண்டாத ஒரு செய்முறை தற்போதும் நடைமுறையில் உள்ளதாக தெரிகிறது. உடல் உழைப்பை உயிர் பாதுகாப்பை கோரும் சூழ்நிலையும் நாகர்கோவில் விழாவில் பெண்கள் நின்ற வண்ணம் பனை சீவுவது போன்ற பனைகளை பற்றிய குறிப்பும் ஒப்பு நோக்கி பார்க்க கூடியவை. இயற்கை பொருட்கள் குறித்த புரிதல் கூடி வரும் இக்காலங்களில் அவை பல் வேறு App வழி சந்தையை கண்டடைகின்றனர் ,பனை சார்ந்த பொருட்கள் எவ்வளவு இவ்வாறான App வழிகளில் சந்தையை அடைகின்றன என்று தெரியவில்லை.


பனைக் கனவு

ஒரு அத்தியாயத்தில் நிலவின் மடியில் பனை மரம் கூட்டம் நடுவே அமைந்த பயணம் குறித்து அற்புதமான ஒப்புவமைகளோடு காட்சன் எழுதியிருக்கிறார், இலக்கிய தரத்தில் அமைந்த குறிப்பு அது. வெட்டி வீழ்த்தப்பட்ட பனைகளை காணுகையில் மிகுந்த மன வருத்தம் கொள்கிறார். பனையில் யானையை காண்கிறார். சடையன் சிவனை காண்கிறார் காளியை காண்கிறார்,முளை விடும் சிறு பிள்ளைகளை பனையில்  காண்கிறார்.  வழி நெடுக கண்டு கொண்டே "பனை பனை" என்று அவர் உற்சாகத்துடன்  செல்கையில் நாமும் அத்திவலைகளில் கால் நனைத்து மகிழ்கிறோம். பனை வழி அவர் ஒரு கனவு உலகத்தை காண முயல்கிறார். காட்சன் எவ்வாறு தனது பயணத்திற்கு பனையை தேர்ந்தெடுத்தாரோ அதே போல் வாசகன் தனக்கான ஆதி பனையை கண்டு கொண்டு எவ்வாறு நிறைவடைவது என்பதற்கான கையேடாகவும் இந்நூல் அமைந்திருக்கிறது. சிறுவர் முதல் பெரியவர்கள் வரை உறவைப் பேண ஒரு தொடர்பு ஓலையாக பனையை கொண்டிருக்கிறார். அமிர்தராஜ் அவர்களின் புகைப்படங்களுடன் செம்பதிப்பு எதிர்பார்க்கிறேன். நண்பர் பரிந்துரைத்த ஆ சிவசுப்பிரமணியன் அவர்களின் "பனை மரமே பனை மரமே" நூல் நிறைய படங்களை கொண்டு அமைந்து உள்ளது. நண்பர் மேலும் கார்த்திகை மாவளி குறித்து விவரிக்கையில் பணம்பூ குறித்து உற்சாகமாக உரையாடினார், இறுதியில் முத்தாய்ப்பாக  "பனை மரம் ஒரு டிராகன்" என்றார்.

2 comments: