Sunday, March 26, 2023

ஹிட்ச்காக் தொகுத்த ஏழு சவால்கள்



1. பொருட்களின் உலகம் - " நேரடி சாட்சி" 

ஒரு சிறு அரை உண்மையை நீங்கள் கூறி, மீதி அரை உண்மையை நீங்கள் மறைத்தீர்கள் என்றால் சின்ன வயதிலிருந்து நீங்கள் ஆசைப்பட பல்வேறு பொருட்கள் உங்களுக்கு கிடைக்கும் - உங்கள் முடிவு என்ன ? 

2. மனோராஜ்யம்  - "பதினான்காவது அறை " 

ஆழ்மனத்தின் சாகசங்கள் உங்கள் கண்களுக்கு மட்டுமே புலப்படுவன. உங்களுக்கு உள்ளேயே நிகழும் இந்த சாகசங்கள் குறித்து மற்றவர்களுக்கு எந்தக்  கவலையும் இல்லை - தொடர்ந்து உங்கள் வழியில் சாகசங்களை தொடர்வீர்களா இல்லை இப்படியான சாகசங்களை கைவிடுவீர்களா ? 

3. பழியின் பாதை  - " கருப்பு தொப்பி" 

நல்லவர்களின் சிலுவையை சுமப்பவர்களின் பெயர் என்ன? கெட்டவர்களா ? உங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டால் நீங்கள் எதை தெரிவு செய்வீர்கள் - எல்லாரும் போற்றும் நல்லவர்களின் சிலுவையையா இல்லை நல்லவரின் சிலுவையை காப்பாற்ற யாருமறியாத பழியின் பாதையையா ? 

4. அறிவின் ஒப்பனை - " வங்கிக் கொள்ளை"

அறிவை ஒப்பனை என்று என்றாவது கருதி இருக்கிறீர்களா ? நம் அத்தனை திட்டங்களின் பின்னாலும் அறிவின் ஒப்பனை அடியாழமாக இருக்கிறது - தன்னைத் தானே மெச்சிக் கொள்ளும் அறிவின் ஒப்பனை அறிவாலேயே களையப்படும் தருணங்களை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா ? 

5. எதிர்காலத்தின் நிழல் - " கால எந்திரம் "

நம் தற்கால முனைப்புகள் எல்லாமே எதிர்காலத்தின் நிழல்கள் குறித்த அச்சத்தில் விளைபவையா ? எதிர்காலம் குறித்த நிச்சயம் நம் முனைப்புகளை கூர்மழுங்க செய்திடுமோ ? கால எந்திரம் கையில் கிடைத்தப் பிறகும் ஏன் நாம் அதிகம் கடந்த காலங்களுக்கு செல்வதில்லை ? எதிர் காலத்தில் அப்படி என்ன விசேஷம் ? என்றும் வராத எதிர்காலம் . உங்கள் கைகளில் கால எந்திரம் கிடைத்தால் நீங்கள் செல்ல விரும்பும் இடம் எது ? எதிர்காலமா ? கடந்த காலமா ? - இல்லை நீங்கள் அந்த எந்திரத்தின் நாற்காலியிலிருந்து இறங்கி விடவே விரும்புகிறீர்களா ? ஞானிகள் செய்ததை போலவா ? 

6.ஒழுக்கமான விலங்கு எந்திரம்   - " விலங்கு பயிற்சியாளர்" 

நீங்கள் செய்யும் அத்தனை வேலைகளிலும் ஒழுங்கு மிளிர்கிறது - நீங்கள் அத்தகைய ஒழுங்கையே உங்களை சுற்றி உள்ளவர்களிடமும் எதிர்பார்க்கிறீர்கள் - விலங்கிலிருந்து ஒழுங்கை தருவிக்கும் அத்தனை யுத்திகளையும் நீங்கள் நன்கு அறிந்து வைத்துள்ளீர்கள். உபயோகம் கருதி பழக்கப்பட்ட அத்தனை விலங்குகள் சார்பில் ஒரு கேள்வி ?   மனிதனை எந்த உபயோகம் கருதி பழக்கப்படுத்தி வைத்துள்ளோம் ? உணவின் தேவை பூர்த்தியான பிறகும் ஒழுங்கின் வட்டத்திற்குள் வர மனிதர்களும் துடிப்பதன் காரணம் என்ன ? 

7. உடைமையும் ஒழி முனைப்பும்  - " மரண மணி " 

 உங்களுக்கு பிடித்த ஒருவர் பிடிக்காத செயலை செய்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் - பிடித்த நபர் உங்கள் உடைமையா ? - உங்கள் வட்டத்தில் தொடர அவர் உங்களுக்கு பிடித்த விஷயங்களை மட்டுமே செய்ய வேண்டுமா ? உங்களை பிடித்தவர் விரும்பியவற்றை மட்டும் தான் நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்களா ? பிடிக்காததை ஒரு போதும் நீங்கள் செய்ததில்லை என்று கூற முடியுமா ? வட்டத்திற்கு புறம்பானவையை ஒழிக்க கோரும் மனதின் கேள்விகளை என்ன செய்தீர்கள் ? 

-------

பதினான்காவது அறை

ஆல்ஃபிரட் ஹிட்ச்காக்  தொகுத்த மர்மக் கதைகள் , யூமா வாசுகி (தமிழில்)

Wednesday, March 01, 2023

பவதுக்கம் - இவான் கார்த்திக்

 




இப்பிறவி,

இத்தனை வலிகளை அறிய வேண்டியா

இத்தனை அவலங்களை  காண வேண்டியா

இத்தனை உடைமைகளை பதுக்க வேண்டியா

இத்தனை கீழ்மைகளை உணர வேண்டியா

இத்தனை இத்தனையையும் விலகி ஓட வேண்டியா

ஆம் ஆம் ஆம் 

பவதுக்கம் பவதுக்கம் பவதுக்கம்

இத்தனை கோரம் இங்கேயா நடக்கிறது

இத்தனை அழகு இங்கேயா நிலவுகிறது 

ஒருவரை ஒருவர் பிண்ணி பிணைந்து உண்டு முடிக்கும் அழகின் கோரம்  

தாங்க முடியாத பெண் தெய்வமாக

தாங்க முடியாத ஆண் சொன்ன சொல் 

பவதுக்கம் பவதுக்கம் பவதுக்கம்