Tuesday, March 29, 2016

கானகன் - லக்ஷ்மி சரவணக்குமார்

கானகன்

காட்டில் நடந்த கதை – இன்றளவும் நடந்து கொண்டிருக்கும் கதை. காடு வாழ் உயிரினங்கள், மரங்கள், தாவரங்கள், காட்டின் பூர்வகுடிகள் – பளியர்கள், இடையர்கள், கருமாண்டிகள், விவசாய குடியானவர்கள், மரம் வெட்டும் வியாபாரிகள், ஜமீன்தார்கள், கஞ்சா தோட்டமுதலாளிகள், தொழிலாளிகள், காடுஇலாகா, தொண்டுநிறுவனங்கள், கம்யூனிஸ்ட், அரசாங்கம், தேர்தல், ஓட்டு என மொத்தச் சூழலையும் மனத்தில் கொண்டு எழுதப்படிருக்கும் ஒரு புதினம். பளியர் குடி, கருமாண்டி தங்கப்பனின் வீடு, காடு இவை மூன்றும்தான் முக்கியமான கதைக்களங்கள்.


காட்டை நன்கு தெரிந்து வைத்திருப்பவர்களே கருமாண்டிகள். தங்கப்பன் என்கிற கருமாண்டி பூர்வகுடிகளான பளியர்களுக்கு நிகராக காட்டை தெரிந்து வைத்திருப்பவன். வெள்ளையருக்கு பின்பு இப்போதைய ஜமீன்தார்களுக்கும் முதலாளிகளுக்கும் வேட்டைக்கும் காடு தொடர்பான வேலைகளுக்கும் துணை. தங்கப்பனின் மனவோட்டம் தெளிவாக ஆசிரியரால் வர்ணிக்கப் படுகிறது. காட்டை பற்றியும், பளியர்களைப் பற்றியும் காட்டைக் காண வெளியிலிருந்து வரும் அந்நியர்கள் பற்றியும் திட்டவட்டமான அபிப்ராயம் உடையவன். காட்டின் வலிமை அறிந்தவன். காட்டிலிருந்து தன்னை வேறுபடுத்திக் கொள்ள தொடங்கிய ஒரு தனி மனிதனின் துவக்கப் புள்ளி.

பளியர்களின் தெய்வம் பளிச்சி. காட்டின் அனைத்து உயிர்களின் ஆன்மாவும் இறந்த பின்பு அவளையே அடையும் – காட்டின் முழு தெய்வம் பளிச்சி – காட்டிலிருந்து தங்களைப் பிரித்துப் பார்க்காத பளியரிகளின் முழு நம்பிக்கை பளிச்சி. ஆசிரியரால் இந்த விஷயம் பல முறை திரும்பத் திரும்ப சொல்லபடுகிறது. அதே நேரத்தில் பளியர் குடியின் புற விவரிப்பும், அவர்களது தினப்படி வேலைகளும், பளியர்களின் கதைகளோ பாட்டுகளோ சடங்குகளின் விவரிப்போ இப்புதினத்தில் இடம் பெறவில்லை. பொடவு (குகை) உள்ளே உள்ள ஓவியங்கள் என்ன, பளியர்களின் திருவிழாவில் என்ன நடக்கும் – இவ்வாறு பூர்வகுடிகளின் வாழ்வின் விவரிப்பை நீடித்திருக்கலாம். புற விவரிப்புகள் பளியர்களின் நம்பிக்கையை இயல்பாக எடுத்துணர்த்தி புதினத்திற்கு வலு சேர்த்திருக்கும்.

தங்கப்பனின் மனைவிகள் இடையே நடக்கும் உரையாடல்கள் நெகிழ்ச்சி. உணர்வுகளை வெளிப்படையாக இயல்பாக சொல்லிச் செல்லும் விதம் அழகு. நாகரிக உலகில் நாம் இழந்த விஷயங்களில் இதுவும் ஒன்று.

தங்கப்பன் வேட்டைக்கு செல்லும் தருணங்களே நாவலின் உச்சம். ஆசிரியர் நொடிக்கு நொடி தனது எழுத்தின் மூலம் இந்த வேட்டைத் தருணங்களை நிகழ்த்திக் காட்டுகிறார். ஒரு திரைப்படக் காட்சிக்கு ஒப்பான சித்திரங்கள் இந்தப் பகுதிகளைப் படிக்கும் வாசகர்களுக்கு கிடைக்கிறது.

காட்டு மிருகங்கள் தங்களுக்கு பாதிப்பு என்றால் மட்டுமே தாக்கும். ஆனால் மனிதன்? பளியர்களின் கண்ணாடி சொர்க்கத்தில் அந்நிய மனிதர்கள் கல் எறிவது போல அமையப் பெற்று இருக்கிறது இந்த நாவலின் தொனி. காட்டுக்கு துளியும் சம்பந்தப் படாத மனிதர்கள் காட்டை தங்கள் முதலின் வட்டியாய் மட்டுமே காண்கின்றனர். பூர்வகுடிகள் தங்கள் எளிய தூய நிலையை தொடர்ந்தாலும் கால சுழற்சியில் நிலபிரபுத்துவ மற்றும் முதலாளித்துவ விசைகளுக்கு பணிந்து தங்கள் உயர் நம்பிக்கைகளை வெறும் சடங்காகச் சுருக்கிக் கொள்வதும் இயல்பாக இந்தப் புதினத்தில் பதிவாகி இருக்கிறது.

இது எப்படி நடந்தது? விவேக் ஷன்பெக்கின் “வேங்கைச் சவாரி” சிறுகதையில் இறுதியில் எதைச் சொல்லி அந்த ஆப்பிரிக்க தேசத்தவனை சமரசம் செய்து ஆட்டத்தைத் தொடர்ந்தார்கள் என ஒரு கேள்வி வரும். அதே போல் ஏன் பளியர்கள் தங்கள் சொர்க்கம் விடுத்து தரை இறங்கினர்? இந்தப் புதினத்தில் இந்தக் கேள்வி பெருமளவு ஆராயப்படவில்லை. காடு சூறையாடப்படுகிறது என்ற ஒற்றை வாக்கியம், காட்டு மூலிகைக்கு வெளிநாட்டில் நல்ல மார்கெட் என பொதுவான வாக்கியங்கள் இருப்பினும் உலகமயமாக்கல் தொடர்பான கண்ணிகளை சற்றே தெளிவுபடுத்தியிருக்கலாம்.

மரியோ வர்கோஸ் லோசவின் “ கதை சொல்லி” ( The Story Teller) கானகன் போன்றே பூர்வ குடிக்கும் நாகரீக மனிதனுக்கும் நடக்கும் உரசல்தான். The Story Teller புதினத்தின் வடிவமும், உட்பொருளும் வாசிப்பு அனுபவமும் முற்றிலும் வேறானவை.

வன்முறைக்கு வன்முறை தீர்வாகுமா? அத்துமீறலை தடுக்க எளியவர்களின் கையில் உள்ள ஆயுதம் என்ன? வாசிமலையான் தங்கப்பனின் வாரிசு. தங்கப்பனுக்கு அமைந்த அத்தனை வாய்ப்புகளும் தருணங்களும் வாசிக்கும் அமையப்பெறும். வாசி தேர்ந்தெடுப்பது எதை?

ஒரு நல்ல தரமான புதினம் – நிறைவான வாசிப்பு அனுபவம்.

– மணிகண்டன்

http://mathippurai.com/2014/12/04/kaangan/

No comments: