Tuesday, March 29, 2016

பள்ளிப்பருவம் - தொகுப்பு: ரவிக்குமார்

பள்ளிப்பருவம்

தமிழ் நாட்டில் பல்வேறு பகுதிகளில் பல்வேறு காலகட்டங்களில் பள்ளிப்பருவம் எப்படி இருந்தது எனத் தெரிந்துகொள்ள ஆறு குறிப்பிடத்தக்க ஆளுமைகள் எழுதியுள்ள கட்டுரைகளின் தொகுப்பு.

1930-40களில் மாயவரம் கும்பகோணம் (இந்திரா பார்த்தசாரதி, ஞானகூத்தன்) சுற்றி, 1950-60களில் மதுரை, திருநெல்வேலி, ராஜபாளையம், திண்டுக்கல் (அ. ராமசாமி, பேரா. கல்யாணி, க. பஞ்சாங்கம்) தொட்டு, 1980களில் விருத்தாசலம் (இமையம்) அடைகிறது இந்தப் கட்டுரைப் பேருந்து.



பள்ளிப்பருவம், தொகுப்பு: ரவிக்குமார், மணற்கேணி பதிப்பகம், ரூ. 80

மாணவர்களின் குடும்ப சூழல், ஊரின் பொது மற்றும் சாதி அமைப்பு, பள்ளி செல்வதற்கான ஊக்கம், பள்ளியின் அருகாமை, நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதிப்பு, அரசாங்கத்தின் பங்கு, பள்ளிப்பருவத்து சுவையான நிகழ்வுகள் என பல்வேறு தளங்களில்கட்டுரைகள் அமைந்துள்ளன. அதே நேரத்தில் தீவிரக் கட்டுரைக்கான இறுக்கம் இல்லாது நனவோடை போல் உரையாடல் போல் எழுதப்பட்டுள்ளதால் கட்டுரைகளுடன் நன்கு ஒன்றி விட முடிகிறது.

—–

க. பஞ்சாங்கம் தனது கட்டுரையில் அவரது கணக்கு வாத்தியாரின் வசனத்தை நினைவு கூர்கிறார்.

“எவனொருவன் வகுப்பில் குறும்பு செய்கிறானோ, வீட்டுக் கணக்கு போடாமல் வருகிறானோ அவன் ஒருவன் முகட்டிலே தலைகீழாகத் தொங்கவிடப்பட்டுக் குண்டி சிவக்கச் சிவக்க அடிக்கப்படுவான்.”

ஆசிரியர்கள் மாணவர்களை அடி பின்னி எடுப்பது ஒரு சர்வ சாதாரண நிகழ்வாக இருந்திருக்கிறது. ஒரு சிலரைத் தவிர அடிக்காமல் இருந்த ஆசிரியர்கள் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்திருக்கிறது. தற்போதைய நிலைமை இந்த விஷயத்தில் வெகுவாக மாறியிருக்கிறது.

‘தலை வாரி பூச்சூடி உன்னை,
பாடசாலைக்கு போ என்று சொன்னாளே அன்னை.
சிலை போல ஏன் இங்கு நின்றாய்?
நீ சிந்தாத கண்ணீரை ஏன் சிந்துகின்றாய்?’

என்று அடிக்கத் தொடங்கும் என் தமிழ் வாத்தியார் திரு. காத்தமுத்து (1990களில்) அவர்களின் குரல் கேட்கிறது.

——

இமையம் தனது கட்டுரையில் ஒரு கிராமத்துச் சிறுவன் செய்யவேண்டிய வேலைகள் என்று ஒரு பக்கத்திற்கு பட்டியல் இடுகிறார். மலைக்க வைக்கும் பட்டியல். தான் எப்போதுமே ஒரு சிறுவனாக தன்னை உணர்ந்ததில்லை என்று ஆதங்கப்படுகிறார்.வீட்டு வேலை, காட்டு வேலை என ஓய்வில்லாது இயங்கிக்கொண்டிருக்கும் கிராமத்தின் சித்திரம் இவரது கட்டுரை மூலம் கிடைக்கிறது.

படிப்பு ஏறாது மக்கு என்றாகப்பட்ட மாணவர்கள் ஆசிரியர்களின் வீட்டு வேலைகள் முதல் காடு வேலை வரை செய்யவேண்டிய சூழல் இருந்திருக்கிறது. இதுபோக நெல், தானியங்கள், கீரை, தோட்டக் காய்கறிகள் என பெற்றோர்களிடமிருந்து கூட தனி வரவு. இது அபிமானத்தின் காரணமாகவும் இருக்கலாம். குருகுலம், பிரபுத்துவ காலகட்டத்தை வைத்து இதைப் புரிந்துகொள்ளலாம்.

“பாடத்தை விட எனக்கு ஆசிரியர் முக்கியம். படிப்பை விட எனக்கு பையன் முக்கியம் – நண்பர்களாக இருக்கும் ஆசிரியர்களுக்கு வணக்கம்” என்கிறார் இமையம்.

இமையம் இந்தக் கட்டுரையை எந்தவித தோரணங்களுமின்றி மிக வெளிப்படையாக எழுதி இருக்கிறார். தொகுப்பின் சிறந்த கட்டுரை என் கணிப்பில் இவருடையதே.

——

இ.பா வின் கட்டுரையில் அவருக்கே உரிய அங்கத நடையில் வகுப்பில் நடந்த ஜமீன்தார் மகனின் பாட்டுக் கச்சேரியை விவரிக்கிறார். ஹிட்லருக்கு உறவு என்று நினைத்துக்கொள்ளும் ஸ்ரீனிவாச ராகவ அய்யங்கார் முதல் கணித மேதை ராமானுஜனின் வகுப்புத் தோழனான அவரது ஆசிரியர் வரை பல ஆசிரியர்களைப் பற்றி சுவையாகச் சொல்லிச் செல்கிறார்.

தமிழ் வழிக் கல்வி சிறப்பாகச் செயல்பட்டதையும் ஆங்கிலம் ஒரு மொழிப் பாடமாக மட்டுமே கற்றுத் தரப்பட்டதையும், தனியார் மயம், வியாபார மயம் ஆன பின்பே தமிழ் ஆங்கிலம் என இந்த இரட்டைக் கல்வி முறை வளர்ந்து குளறுபடியான சூழல் உருவானதாக நினைவு கூர்கிறார்

பேராசிரியர் கல்யாணியும் தாய்மொழிக் கல்வியின் அவசியத்தைப் பற்றி தனது வாழ்வையே உதாரணம் காட்டி முன் வைக்கிறார். ஆங்கிலம் அறியாத தமிழ் வழிக் கல்வி மாணவர்கள் தாழ்வு மனப்பான்மையால் தன்னம்பிக்கையை இழக்க நேரிடுவது பற்றியும் குறிப்பிடுகிறார். தாய்மொழியில் படிப்பதே சாலச் சிறந்தது எனவும் தன்னம்பிக்கையை அதுவே வளர்க்கும் என்பதும் இவரது கருத்து. இது உண்மையும் கூட.

என் கல்லூரிக் காலங்களில் (2000களில்), வகுப்பில் வாயையே திறக்காத விடுதி மாணவர்கள் – விடுதியை அடைந்த உடன் பேசும் விஷயங்களும் உற்சாகமும் கிண்டலும் இந்தக் கட்டுரையைப் படித்ததும் நினைவுக்கு வந்தது. ஆங்கிலம் இன்றைய அறிவு மொழி. ஆங்கிலம் புரியாத காரணத்தால் கல்லூரி வகுப்பில் நடக்கும் பாடம் இயற்பியலா? இல்லை கணிதமா என்று புரியாது போனதாக இமையம் குறிப்பிடுகிறார்.

——

சிறுவனோ சிறுமியோ வலது கையால் இடது காதை பிடித்துக் காட்டிவிட்டால் தலைமை ஆசிரியர் நினைத்த தேதியை பிறந்த நாளாக குறித்துக்கொண்டு பள்ளியில் சேர்த்துக் கொள்வது, ஞானக்கூத்தன் வெண்பா எழுதி உதவித்தொகை பெற்றது, சாரங்கபாணி தெருவில் உள்ள அத்தனை அம்மாக்களும் தங்கள் மகன்களை ராமானுஜங்களாக்க ஆசைப்பட்டது, இரவு முழுதும் ஆற்று மணலில் கபடி விளையாடிய நினைவுகள், அ. ராமசாமியின் பயண நினைவுகள், விடுதி நினைவுகள், சனிக்கிழமை சாப்பிட்டு படுத்தான் என்னும் விளையாட்டுப் பாடல் பற்றிய குறிப்பு என பல இனிமையான விஷயங்கள்.

——

விராட பருவம் படிக்கத் தெரியும் அளவுக்குப் படித்தால் போதுமானது என்பது அ. ராமசாமியின் குடும்ப நம்பிக்கையாக இருந்திருக்கிறது. “எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான் பாடியவன் பாட்டைக் கெடுத்தான்” என்று சொல்லி வளர்ந்தார் இமையம். கூடப்பிறந்த ஒருவரோ தாயோ தந்தையோ அவர்களது அசாதாரண உழைப்பு மற்றும் கல்வியின் மீதுள்ள நம்பிக்கை காரணமாகவே ஒரு குடும்பத்தின் முதல் பட்டதாரி உருவாகியிருக்கிறார். ஒரு தலைமுறை பட்டதாரிகள் உருவாக காரணமாக இருந்திருக்கிறது நம் குடும்ப அமைப்பு. பள்ளிக்குச் செல்ல அடம் பிடிக்கும் பிள்ளைகளை அடித்து இழுத்துச் செல்லும் பெற்றோர், வீடு வீடாகச் சென்று வேட்டை நடத்தி வகுப்பில் சேர்த்த ஆசிரியர்களும் நினைவு கூரத்தக்கவர்கள். மூன்று தலைமுறையாய் மெல்ல மெல்ல முயன்று உருவான சூழல் இன்று வணிகக் கருவியாய் இருப்பது சோகம் என்கிறார் க. பஞ்சாங்கம்.

——

அனைத்துக் கட்டுரைகளுக்கும் பொதுவான சரடு சாதி. ஆறு பேரும் தம் ஆசிரியர்களின் சாதியை தெளிவாகத் தெரிந்து வைத்துள்ளனர். அவர்களது ஊரின் சாதி அமைப்பையும் நன்கு அறிந்துள்ளனர். நகர்ப் புறத்தில் வளர்ந்த எனக்கு இது ஆச்சர்யமாக இருந்தது. இந்த விஷயம் அவர்கள் காலத்தின் பிரதிபலிப்பாக இருக்கக்கூடும். கிறிஸ்துவ மிஷனரிகளின் பங்களிப்பு குறித்தோ பெண் கல்வி குறித்தோ பெரிதாக யாரும் எதுவும் சொல்லவில்லை. ஓர் இரு வரிகளைத் தவிர.

பள்ளிக்கல்வி, கிராம சாதி கட்டுமானத்தை விடுத்து நகரங்களுக்கு ஏராளமானோரை இடம் பெயரச் செய்திருக்கிறது. ஓரளவுக்கு சாதியின் பிடியிலிருந்து விலக்கி இருக்கிறது. பொருளாதார விடுதலை அளித்திருக்கிறது. இருப்பினும் “யார் சார் இன்னிக்கு சாதி பாக்கறாங்க?” என்ற கேள்விக்கான விடை நாம் செல்லவேண்டிய தூரத்தை கசப்பாக நினைவுறுத்தும்.

அவசியம் படிக்கவேண்டிய கட்டுரைத் தொகுப்பு.

— மணிகண்டன்

http://mathippurai.com/2014/12/19/pallipparuvam/

No comments: