வர வர ஊஞ்சலைக் கண்டாலே பயமாக இருக்கிறது.அதன் மீது ஏறி கால்களால் முடிந்த அளவு எத்தி அது உயர உயர ஆ ஊ ன்னு கத்தி இப்ப நினைத்து பார்த்தாலும் எனக்கு சற்றும் பொருந்தாததாய்! எனது தவிப்பு உங்களுக்கு என்ன தெரியும் வீட்டின் நடுவே பெரியதாய் அமைந்திருந்தது அந்த ஊஞ்சல்.என்ன கம்பீரம் ! என்ன தோற்றம் ! ஊஞ்சல் செய்ய எவ்வளவு நாள் ஆகி இருக்கும்? அதை செய்ய எவ்ளோ பெரிய மரம் வெட்டபபட்டிருக்கும்?.எவ்ளோ பெரிய யானை அதை தூக்கி சாய்த்து நிமிர்த்தி அப்ப்பா ! யானை மற்றும் அந்த பெரிய மரம் இரண்டும் சேர்ந்த கம்பீரம் அதை செய்தவன் வேலைப்பாடு எல்லாம் கலந்து ஊஞ்சல் உயிருடன் என் கண் முன் ! இந்த ஊஞ்சல் இதை மடக்கி வைக்க நாலு பேர் தேவை அவ்வளவு கனம் ! அதுவும் குழந்தைகள் அதன் மீது குதூகலமாய் ஆடும் போது பார்ப்பவரை சொக்க வைக்கும் ! ஆனால் இப்போது ?
அந்த ஊஞ்சல் மீது இப்போது தடை உத்தரவு ! அதன் மீது யாரும் ஆட கூடாதாம் ! என்ன மடத்தனம் ! யாருடைய முட்டாள்தனமா உத்தரவு ! என்ன நியாயம் ! யாருமில்லாத ஊஞ்சலை வெறித்து பார்த்தபடியே நான் எவ்ளோ நேரம் உட்காருவது. எனக்கும் ஆட வேண்டும் என்று ஆசை தான் ஆனால் பயம். கீழே விழுந்துவிடுவோமோ என்று பயம். மற்றவர்கள் அப்படி இல்லை. தடையை மீறாது காப்பதிலே பெருமகிழ்ச்சி கொள்பவர்கள்! ஊஞ்சலில் ஆடும் சந்தோஷம் பற்றி மறந்து போனவர்கள் ! நான் ! எனக்கு பயம்! தடையை ஒரு பொருட்டாக கூட நான் மதிப்பது கிடையாது. என் ஆசை பயத்தை வெல்லும் வரை ஊஞ்சலை வெறித்து பார்த்து கொண்டா இருப்பது ! என் வீட்டு குழந்தைகள் வர மாட்டார்கள் ! பெரியவர்களின் கூட்டு சதி ! குழந்தைகள் ஊஞ்சல் பக்கம் வருவதில்லை ! வேறு யார் ஆடுவார்கள் ! யாரும் இல்லாத ஊஞ்சல் ! தடையை மீறி பயத்தை மீறி யார் ஆடுவார்கள் ! வருடம் பல ஆகியும் தடை நீங்கவே இல்லை ! வீட்டில் உள்ளவர்கள் ஊஞ்சல் என்ற ஒன்றை மறந்து விட்டிருந்தார்கள். என் வீட்டு குழந்தைகள் பெரிய மனிதர்கள் ஆனார்கள் ! அவர்கள் குழந்தைகளுக்கு ஊஞ்சல் என்றால் என்ன என்றெ தெரியவில்லை. யார் மறந்தாலும் ஊஞ்சலை நான் மறக்க மாட்டேன் ! தினம் தினம் யாரும் ஆடாது அழுது வடிந்து கொண்டிருப்பதை .... செய்வதறியாது நான் பார்த்து கொண்டு தானிருக்கிறேன்.ஊஞ்சலை வெறுமென பார்க்க என்னவோ போல இருக்கிறது.
-------------------------------
நடு ரோட்டில் இங்கே தான் ! அதோ அவர்கள் ! சிவப்பு பச்சை விளக்கு பகுதியில் மூன்று குழந்தைகள்,ஒரு ஆண்,ஒரு பெண் ! குடும்பமோ ! சேர்ந்து தானே வாழ்கிறார்கள் ! சண்டை போடுகிறார்கள் ! மஞ்சள் துண்டு விற்கிறார்கள் ! பிச்சை எடுக்கிறார்கள் ! குழந்தைகளின் வயது முறையே பத்து, நாலு,மூன்று!
படீர் ! படீர் !
ஏம்பா அடிக்கர ?
இது என் பையன் தான் ஸார் !
அதுக்கு இப்படி தான் அடிக்கறதா! இப்படி தான் பிச்சை எடுக்க உடரதா!
இல்ல சார் இவனா தான் வாரான் !
நான்தான் அடிச்சி வீட்டுக்கு கூட்டிட்டு போறேன் ஸார்!
பக்கத்தில் நாலு பேர், இல்ல ஸார் இவன் பொய் சொல்றான் ஸார் தினமும் அடிக்காரன் ஸார் !
பிச்சை எடுக்க சொல்றான் ஸார் !
சத்தியமா என் புள்ள ஸார் !
இவன எல்லாம் போலீசில் புடிச்சு குடுக்கணும் ஸார்!
இவங்க எல்லாரும் ஒரே கூட்டம் சார் ஒண்ணும் பண்ண முடியாது
- இது போலீஸ்
நான் இத நாளைக்கு ஹிந்தூக்கு எழுத போறேன் !
அதெல்லாம் சுத்த வேஸ்ட் ஸார் !
இவங்க பின்னாடி ஒரு சர்வதேச கும்பல் இருக்கு ஸார் !
கடவுள் தான் இவங்களுக்கு ஒரு தண்டனை குடுக்கணும் !
சத்தியமா என் புள்ள ஸார் !
சிவப்பு விளக்கு,
எதுவும் நடக்காதது போல குழந்தைகள் பிச்சை எடுக்க போக.. அடித்தவன் மஞ்சள் துண்டு விற்க..... எனக்கு தெரியும் இவர்கள் தான் ! இந்த குழந்தைகள் தான் ! இவர்களை இரவு வரை காத்திருந்து வீட்டிற்கு கூட்டி சென்று ஊஞ்சலில் ஆட வைக்க வேண்டும். எனக்கு தெரியும் இவர்களுக்கு பயம் கிடையாது ! தடை பற்றியும் கவலை இல்லை ! தடை இவர்களுக்கு கெடையாது வீட்டு குழந்தைகளுக்கு மட்டும் தான் !
--------------------------------
இரவில், மூன்று குழந்தைகளும் ஊஞ்சல் முன் அதை பார்த்தபடியே நின்றன! எனக்கு இன்னும் பயம் போகவில்லை ! ஊஞ்சல் மேலாய் எழும் போது தூக்கி விசீ விடுமோ என்று பயம்.பின் செல்லும் போது கீழாய் தள்ளி விடுமோ என்று பயம்.
எனக்கு தெரியும் இவர்கள் இந்த ஊஞ்சல் மீது ஏறி ஆடிப்பாடி அந்த காட்சி இன்னும் சிறிது நேரத்தில் என் கண் முன் நடக்க போகிறது ! எவ்வளவு நாள் கனவு ! இப்போது நிறைவேற போகிறது ! குழந்தைகள் ஆ ஊ என கத்துவார்கள் ! ஆடி பாடுவார்கள் !
குழந்தைகள் பயந்தன ! ஊஞ்சல் இருக்கும் ஸ்மரணை கூட அவர்கள் இடத்தில் இல்லை. சொல்ல போனால் அவர்கள் ஊஞ்சலை தொட கூட இல்லை ! எனக்கு ஆச்சரியம் ! வலுக்கட்டாயமாக குழந்தைகளை இழுத்து ஊஞ்சலில் அமர்த்த முயன்றேன் ! குழந்தைகள் பயத்தில் பின் வாங்கின ! வேண்டாம் ! பயம் வேண்டாம் ! தடை உங்களுக்கு கிடையாது ! குழந்தைகள் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்தன ! எனக்கு பெருத்த ஏமாற்றம் !
ஊஞ்சல் காற்றில் லேசாக அசைய " யாராவது இதில் ஆடுங்களேன் "! எனக்கு ஓ வென்று கத்த வேண்டும் போல இருந்தது ! ஊஞ்சல் மீது யாரும் இல்லாமல் பார்க்கவே முடியவில்லை.யாரும் ஆடாத இந்த ஊஞ்சலும் ஒரு ஊஞ்சலா ?யார் ஆடுவார்கள் ! ஊஞ்சல் இப்போது பார்ப்பதற்க்கு என்னவோ போல் ! ஒரு மனிதனின் கை கால் இரண்டையும் மேலே கட்டி தொங்க விட்டது போல் ஒரு விகாரமான தோற்றம் ! யாருக்கும் பிடிக்கவில்லை இந்த ஊஞ்சலை ! இப்போது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை இந்த ஊஞ்சலை !
ஊஞ்சலாம் ஊஞ்சல் !