Thursday, October 05, 2023

நல்ல பாம்பு - நீல அணங்கின் கதை - ரமேஷ் பிரேதன்

இந்த நாவலை வாசிக்கையில் ஏற்பட்ட மனப்பதிவுகளை உறுதிப்படுத்தவே இந்தப்பதிவு.



இந்த நாவல் என்னை கடுமையாக  பாதித்தது. பொதுவாக எந்த ஒரு நாவலையும் வாசிக்கையில் கதையின் வீச்சோ, நாவலின் கட்டமைப்போ, சம்பவங்களின் தாக்கமோ, நடையின் சுவாரஸ்யமோ தான் பெரும்பாலும் நம்மை பாதிக்கும். மேலும் நாவலின் முதன்மை கதாபாத்திரங்களுடன ஒன்றுவதன் மூலம் நாவல் நமக்கு நெருக்கமானதாகி விடும். நான் இந்த நாவலை வாசிக்கையில் இவ்வழிகளில் அல்லாது முற்றிலும் நேரடியாக மிகுந்த சஞ்சலமும் அதிர்ச்சியும் அடைந்தேன். பிரதியின் நேரடி தாக்கம் குறித்து மேலும் அறியவே இதை எழுதுகிறேன்.


ஒரு வகையில் இந்த நாவலின் முதன்மை கதாப்பாத்திரங்கள் என்னுடைய பகல் கனவுகளின் தப்பிக்கும் ஆசைகளின் ஸ்தூல வடிவங்களாக இருக்கின்றன. செம்புலி காலங்காலமாய் செறிந்து வரும் காலத்தின் விடுதலையின் மௌனத்தை நமக்கு உணர்த்துகிறார். நேரெதிராக இருபதாம் நூற்றாண்டில் விடுதலையான அம்பிகா நாம் பேச மீதி உள்ள விஷயங்களை உணர்த்துகிறார்.

இவ்விருவரும் இணையும் இடமாக 'தன்னந்தனிமை' இருக்கிறது.


பிரதியை வாசிக்கையில் நான்  கண்ட இந்த 'தனிமையின் பாலை' எனக்கு மிகுந்த தொந்தரவை அளித்தது. என் பகல் கனவுகளில் உள்ள தனிமை இனிமையானதாக  இருந்தது. ஆனால் நாவல் உணர்த்திய 'தன்னந்தனிமை' மிகுந்த நேரடியாக, தாங்க முடியாத அளவில் இருந்தது. எனது மனவலிமையின் போதாமையை, என் தனிமை கனவுகள் வெறும் தப்பிக்கும் உத்திகளே என்று நாவலை வாசித்து முடிக்கையில் தோன்றியது. தனிமையின் பக்கத்தை அடைய வெவ்வெறு வழிகளில் நாவலின் ஆப்த வாக்கியங்கள் நம்மை சுழற்றி அடித்து அழைத்து செல்கின்றன.  


இந்நாவல் வழி ,ஆப்த வாக்கியங்களை வாசிக்கையில் கிடைத்த மனநிறைவும், கதாபாத்திரங்களின் தனிமை ஸ்திதி உணர்த்திய உண்மைகளும் எனக்கு அமைந்தவை.