Tuesday, March 29, 2016

காலகண்டம் – எஸ். செந்தில்குமார்

காலகண்டம் – எஸ். செந்தில்குமார்

வை. மணிகண்டன்

நூற்றைம்பது கால விஸ்தீரணத்தில் ஆசாரிமார் சமூகத்தின் வாழ்க்கை வரலாறாக, ஒரு காலப் பனுவல் போல் அமைந்திருக்கும் புதினம். பென்னி குக் அணை கட்ட தொடங்குவதற்கு முன்னாலிருந்து, நாடெங்கும் சுயராஜ்ய அலை எழுந்து, ‘வெள்ளையனே வெளியேறு’ என்று அறைகூவி, சுயராஜ்யம் பெற்று, எம்ஜியார், சிவாஜி, ரஜினி என்பது வரையிலான கால வரையறையில், தென் மாவட்டத்தில் போனூர் என்னும் சிறு கிராமத்தையும் அதைச் சுற்றியுள்ள ஊர்களையும் களமாக கொண்ட புதினம்.  கிருஷ்ணப்ப ஆசாரி என்னும் பத்தொன்பதாம் நூற்றாண்டு ஆசாரி வழி வந்த குடும்பத்தின் கதை.

சாமான்யர்களின் வரலாறு என்ற புள்ளியிலிருந்து இந்த நாவலை அணுகத் தொடங்கலாம்.  சாமானியன்   என்று சொல்லத் தொடங்கும் பொழுதே அரசியல் இருக்கக் கூடும் என்ற சந்தேகம் இருப்பினும் நாவலின் இலக்கு முற்றிலும் வேறான ஒன்றாக இருக்கிறது. படிக்கையில் திடீரென “இந்தச் சீட்டை எடு” என்று வாசகனைச் சீண்டும் அரசியல் இந்த நாவலில் இல்லை. இருப்பதெல்லாம் தினப்படி நிகழ்வுகள், வருடாந்திர திருவிழாக்கள், கொண்டாட்டங்கள், துக்கங்கள், பல்வேறு கதைமாந்தரின் ஆயுட்கால தினப்படி பரிவர்த்தனைகள், இருபதுக்கும் மேற்பட்ட கதைமாந்தர்தம் கனவுகள், ஆசைகள், தவறுகள், முடிவுகள், வலிகள்.

நாவலின் பலம் அதன் புறவய சித்தரிப்பு. மூன்று வெவ்வேறு காலகட்டங்கள், ஆசிரியரின் அற்புதமான விவரிப்பின் வழி காட்சியாக புலனாகின்றன.

காலையில் எழுவது தொடங்கி, ஆற்றுக்குச் செல்லுதல்,  மந்தைக்குச் செல்லுதல், பல் விளக்குதல், குளியல், காலை உணவு, பட்டறை வேலை,  வேலை சம்பந்தப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள்,  இளைப்பாறல், மதிய உணவு, மாலைப் பொழுது, டீக்கடைப் பேச்சு, இரவு உணவு, சினிமா, கறி  எடுத்தல், நட்பு உரையாடல், நகைக் கடை விவகாரங்கள்  என தினப்படி காரியங்களின் விவரிப்பு. இவை வட்டம் ஒன்று. திருமணம் தொடங்கி பிள்ளைப்பேறு, பள்ளிக்கூடம், பெண் சடங்கு ஆகுதல், திருமணம், ஆண் பிள்ளைகளுக்கு பட்டறை வேலைப் பயிற்சி, புதிய பட்டறை அமைத்தல், தொழில் கருதி ஊர் மாறிச் செல்லுதல், திருவிழா, மூப்பு, மரணம் இவை அனைத்திற்குமான சடங்குகளின் விரிவான விவரணை – இது வட்டம் இரண்டு – இவ்விரண்டு வட்டங்களில்  ஏதோ ஒரு புள்ளியில்தான் இப்புதினத்தின் எந்த ஒரு பக்கமும் நின்றுக் கொண்டிருக்கிறது. கதைமாந்தரின் வாழ்வின் அட்டவணையைச் சொல்லியபடி செல்கிறது இந்தப் புதினம்.

தினப்படி வாழ்வில் ஒரு சடவு  வரும் பொழுது  கெஞ்சியோ, சண்டை போட்டோ, விலகியோ, வேறோர் துணைக் கொண்டோ அச்சடவை நீக்கப் பெரும்பாடு படும் சாமான்யர்களின் கதை. உழைப்பு, உழைப்பு என்று வேறு எதுவும் அறியாத கதை மாந்தரின் கனவுகள் மிகவும் எளியன.  அந்த எளிய கனவுகள் நிறைவேறாது போய்விடுமோ என்று தவிதாயப்படுகிறார்கள் – இந்தத் தவிதாயம் என்ற சொல்லை எத்தனை முறை இந்நாவலில் படித்தேன் என நினைவில்லை. தனி மனிதனின் குரலாக இல்லாமல் ஒட்டுமொத்த ஆசாரி சமூகத்தின் வலி மிகுந்த பயணத்தை பிரதிபலிப்பதாக உள்ளது. தேர்ந்த கைவேலைக்காரர்களாக இருந்தும், நாளொரு மேனி பொன்னையும் வெள்ளியையும் கொண்டு உறவாடினாலும், ஆசாரி சமூகத்தினரின் சமூக அந்தஸ்திலோ, பொருளாதார நிலையிலோ பெரியதொரு மாற்றம் நிகழவில்லை. தொழில் வழி ஜமீன் மற்றும் மணியக்காரர்களிடம் இருந்த அதிகாரம் நகைக் கடை செட்டிமாருக்கும் கணக்குப் பிள்ளைக்கும் கை மாறி இருக்கிறது. ஒவ்வொரு பாகத்தின் துவக்கத்தில் வரும் வசனக் கவிதைகள் அருமை – இறைஞ்சும் தன்மை உடையதாய் அச்சமூகத்தின் ஆற்றாமையை வெளிப்படுத்துகின்றன.

“உமியோட்டில் உருகி கண் விடும் பத்தரைமாத்துப் பொன்னென
பெயருக்கு உண்டானது உருகியோடும் இவ்வாழ்வு
கம்மாளனுக்கு எப் பிறவியிலும் காலகண்டம் கேளாய் காலகண்டம் கேளாய்”

“சூரியன் மறைகிறது தினமும் அழகாய்
சூரியன் மறைமுகமாய் சொல்கிறது
வாழ்வில் எதுவுமில்லாததை”

“உங்களுக்காக எங்களை வாழச் செய்த குற்றத்திற்காக
கடவுளுக்கு கண்மலர் சாத்திக் குருடாக்குகிறோம்
“கண்மலர் கொண்டு பார்வை தந்தவனே
திரையிட்டு எட்டு திசையையும் மறைக்கிறான்”

சுயராஜ்ய போராட்டம், பணக் கஷ்டம், உறவு விரிசல்கள், திடீர் மரணம்  என பல உணர்ச்சிகரமான தருணங்கள் அமையப்பெற்றிருந்தும் நாவலின் தொனி எதையும் மிகைப்படுத்தாது அடுத்தது, அடுத்தது என்று காலப் பிரவாகம் அடித்துச் செல்ல அடுத்த நிகழ்வுகளுக்கு நாவல் விரைகிறது.  அதே நேரத்தில் கிருஷ்ணப்ப ஆசாரி (பென்னி குக் காலம்), வெள்ளையப்பன் (காந்தி, தியாகராஜ பாகவதர் காலம்) மற்றும் நம்பி (எம்ஜிஆர் ,சிவாஜி காலம்)  இம்மூவர்தம் பாத்திர அமைப்புடன் வாசகன் ஒன்றிவிட முடிகிறது இந்த மூன்று கதை நாயகர்களில் கிருஷ்ணப்ப ஆசாரி தன்னளவில் சுதந்திரம் அதிகம் கொண்டவராக தெரிகிறார். வெள்ளையப்பன் சமூகம் கிழித்தக் கோட்டைத் தாண்ட முயன்று தோற்றவர் . நம்பி சமூகத்தின் கோடுகளைத் தாண்ட எந்த நாளும் முயலாதவர்.

பெரிய வீட்டின் பொன்னுருக்கு விழா முதல் பத்த வைப்பு திருகாணி வேலைகள் வரை பட்டறை வேலைகளின் நுண் விவரிப்பு நாவலின் நம்பகத்தன்மையை கூட்டுகிறது. “பச்சை மண்ணை கொண்டா பங்காரு வேல செய்து காட்றேன்” – பூர்வீகமாய் ஆந்திராவிலிருந்து தென் மாவட்டங்களுக்கு குடிப் பெயர்ந்த மக்களின் கதை – நாவலின் நெடுகே சுந்தரத்  தெலுங்கின் ரீங்காரம். வீருசின்ன அம்மனின் கதை, குந்தியின் கண்ணீர், கௌரவர்களின் தங்கைகள் கதைகள் புதுமையாக இருந்தன.

“Boyhood” திரைப்படம் நீங்கள் கண்டிருக்கக்கூடும். ஒரு சிறுவனின் பதின் பருவம் வரையிலான வாழ்க்கையை  உன்னதமாக படமாக்கி இருப்பார்கள். பன்னிரண்டு வருட கூட்டு முயற்சி. ஒரு குடும்பத்தின் நூற்றைம்பது கால வரலாற்றை, தனி ஒருவர், நாவல் வடிவில் எழுதுவது லேசான விஷயம் இல்லை.   செந்தில் குமார் அவர்களின் அர்ப்பணிப்புக்கு நன்றி. நாவலில் சில இடங்களில் ஏற்படும் தொய்விற்கும் சலிப்பிற்கும் காலசக்கரத்தின் வட்டப் பாதையை நாம் கை காட்டலாம்.

 “தரையிறங்கிய பறவைகள்
தெற்குத் திசையின் மாயத்தை அறியவில்லை
தெற்குத் திசை தங்கள் கனவுகளையும் சந்தோசங்களையும்
பொய்க்கச் செய்து விட்டதென
பெரும் பாறையின் மேலேறிக் கூவிச் சொல்லியது
மூத்த பறவை ஒன்று.
அதன் குரலே பின்காலத்தில்
வனமெங்கும் பூத்தன பூக்களாக. “

இப்புதினத்தை எந்த ஒரு உழைக்கும் சமூகத்தின் பயணத்திற்கும் பொருத்திப் பார்க்க முடியும். இந்த நாவல் குறிப்பிட்ட சம்பவங்களின் கோர்வையான தொகுப்பாக அமையாது தினப்படி வாழ்வை அணு அணுவாய் தொகுத்து கதை மாந்தரையும் போனூரையும் வாசகனுக்கு மிக அருகில் கொண்டு செல்வதில் வெற்றிக் கண்டிருக்கிறது.

http://www.omnibusonline.in/2016/02/blog-post_17.html?m=1

காதுகள் – எம் வி வெங்கட்ராம்

காதுகள் – எம் வி வெங்கட்ராம்

வை. மணிகண்டன்

காதுகள்

அகச்சந்தைக்கும் புறச்சந்தைக்கும் இடையே உள்ள “நான்”.ஆசிரியரின் தன்வாழ்க்கைக் குறிப்பும் அகவய அனுபவங்களும் கலந்த ஒரு புதினம். நிறைவை அடைய தொடர்ந்து முயன்ற ஒரு தனிமனிதனின் வேட்கையை சாட்சியாய் நின்று பார்த்துப் பதிவு செய்த இலக்கியப் பிரதி.

எந்த ஒரு ஆன்மீக மனமும் எழுப்பும் எளிய கேள்விகள் இவை - கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற சந்தேகம், புலனடக்கம் குறித்த ஐயங்கள், சொந்த அனுபவங்கள் உணர்த்தும் விஷயங்களுக்கும், தத்துவக் கோட்பாடு சொல்லும் உச்ச தரிசனங்களுக்கும் இடையில் உள்ள இடைவெளி-. இந்தப் புதினம் இவ்வனைத்து தளங்களிலும் வாசகனைச் சிந்திக்க வைக்கிறது.


கடவுள்

புதினத்தின் முக்கியப் பரிசீலனை கடவுள் பற்றியது. கடவுள் இருக்கிறாரா இல்லையா? தீமையிலிருந்து எப்போதும் நம்மை காக்கிறாரா? விடை கண்டவர் யார்? இங்கு முக்கிய ஆவணமாய் இலக்கியப் பிரதி பதிவு செய்யக்கூடியது ஒரு தனி மனிதனுக்கு கடவுள் குறித்து ஏற்படும் மனப் பதிவுகளையே. காதுகள் நாவலில் நாம் காண்பது அக அனுபவங்களே அன்றி கடவுள் குறித்த அறிவுஜீவித்தனமான உரையாடல் அல்ல. மகாலிங்கம் விடாது அபயம் தேடும் குருவடி – குருவடி என்ற ஒன்று இருக்கிறதா இல்லையா என்ற ஐயம் – அவரது மனப்போராட்டங்களும் ஆலோசனைகளும் வாசகனின் சுய தேடல் அனுபவத்திற்கு நல்லதொரு வழித்துணையாய் அமைந்திருக்கின்றன. ஒரு வாசகன் தனது ஆன்மீக அனுபவங்களை மீண்டும் அசை போட நல்லதொரு வாய்ப்பாக இந்த நாவல் அமைந்துள்ளது. திடீர் அசரீரிகளும், நம்ப முடியாத நிகழ்வுகளும், அற்புதங்களும் இன்றைய நாளில் முற்போக்காக கருதப்படாது செல்லலாம். ஆனால் உண்மையை அறிய விரும்புபவன் இத்தகைய அனுபவங்களை மேலும் விரும்புவான். அதற்கும் அப்பால் உள்ளதை அறிய இந்த அனுபவங்கள் ஒரு இனிய நுழைவாயில்.

புலனடக்கம்

எளிய மனிதன், தன் முதல் ஆற்றல் தொடங்கி தனது இருப்பை நிரூபிக்க தொடர்ந்து இயங்கும் புலன்களின் வழி கடைசி சொட்டுத் தேன் வரை நக்கிப் பார்க்கவே விரும்புகிறான் – மகாலிங்கத்தின் வார்த்தைகளில் “ பிரம்மத்தில் நான் தன் இருப்பை நிருபணம் செய்ய” காமம் ஒரு ஊசி போல் inject செய்யப்படுகிறது. காதுகளில் தொடங்கி ஒவ்வொரு புலனும் சுயாட்சி கோருகிறது. மனிதன் மீண்டும் மீண்டும் புலன்களுக்கு அப்பால் உள்ள ஏதோ ஒன்றை அறிய விழைகிறான். இந்தப் போராட்ட நிலையில் தத்தளிக்கும் “நானின்” சாட்சியாக நாவலின் பக்கங்கள் விரிகின்றன. மகாலிங்கத்தின் காதுகளில் ஒலிக்கும் குரல்கள், , உரையாடல்கள், பிரமையான காட்சிகள், விதவிதமான வாசனைகள் என நாவல் ஒரு வித்தியாசமான வாசிப்பனுபவத்தை அளிக்கின்றது. புலன்களின் சுயாட்சி மகாலிங்கத்தை ஒருவித பைத்திய நிலைக்கு அருகில் கொண்டு செல்கின்றது. இவ்விடங்களில் உரைநடை கிடுகிடு என ஜூர வேகத்தில், மயிர்கூச்செறியப் பறக்கும் அனுபவத்தை அளிக்கிறது.

அனுபவம்

சம்சார சாகரத்தின் புறவயச் சிக்கல்களை மகாலிங்கம் எதிர்த்துப் போராடும் அனுபவங்களையும், கனவுக் காட்சிகளுக்கு மகாலிங்கம் கொள்ளும் அர்த்தங்களையும், பிரமையின் சம்பாஷணைகளும், அசரிரிகளின் குரல்களையும், தியான நேரங்களில் பெரியோர்களுடனான சத்சங்க உரையாடல்களின் அனுபவத்தையும், அனுபூதிகளை மனனம் செய்து தினம் கூறும் பழக்கத்தையும், கோவிலில் நடக்கும் இன்னதென்று அறியாத மகாலிங்கத்தின் அனுபவத்தையும், எதையும் நிராகரிக்காது இந்நாவல் பதிவு செய்கிறது. உண்மைப் பாதைக்கு பல்முனை வாயில். குறிப்பாக தியான பயிற்சி மேற்கொள்வோர் எதிர்கொள்ளும் ஒரு இடைநிலைச் சிக்கலாகக்கூட இந்தப் புதினத்தை காண வாய்ப்பிருக்கிறது. தியான அனுபவம் உள்ளவர்கள் இந்தப் புதினத்தை மேலும் நெருங்கி வரலாம். அனுபவங்கள் எதையும் மனப் பிறழ்வு, நிறைவேறாத கனவின் வெளிப்பாடு என முன்முடிவுடன் பொருள் கொள்ளாது உள்ளது உள்ளபடி கண்டால் வாசிப்பனுபவம் மேலும் சிறக்கக்கூடும்.

நான் – தத்துவம்

வாழ்க்கையின் புறநெருக்கடிக்கும் அகநெருக்கடிக்கும் என்ன பொருள்? இவ்வளவு பாடுபடுவது எதற்கு? இதற்கு ஒரு எளிய விடை இருக்க முடியுமா? வாழ்ந்துதான் முடிக்க வேண்டும். வேறு எளிய வழிகள் இல்லை. யுகம்யுகமாய் நடந்து வருவதுதானே இது. எதன் பொருட்டு இத்தனை பயம், மருட்சி. அகம் பிரம்மாஸ்மி – தத்வமஸி எனும் அத்வைத தத்துவ உச்சங்கள்? ஒரு எளிய தனியனுக்கு இப்பிறவியை பயமின்றி கடக்க இவை உதவுமா? மகாலிங்கம் குருவடி சரணம் என பிறவிப் பெருங்கடலை நீந்திக் கடந்தார். பெரும்பாலானோருக்கு அதுவே சிறந்த வழி. குருவடி சரணம்.

இத்தனை அகச்சிக்கல்களின் நடுவேயும் தன்னைப் பற்றிய பிரக்ஞை இழக்காது அவ்வனுபவங்களைப் பதிவு செய்த எம்விவியின் சிருஷ்டிகரத்திற்கு அனேக கோடி வந்தனங்கள். முற்றிலும் அகவய அனுபவங்களை குறித்து எழுதப்பட்டிருந்தாலும் உளறல் பிசிறு அறவே இல்லை. தன் வாழ்க்கையை ஒரு நாடகம் போல் பாவித்து தாமஸ மற்றும் சத்வ குணங்களின் இயல்பை புரிந்து கொள்ள முனைந்திருக்கிறார்.
மாயா யதார்த்தவாதம் என்றோ auditory hallucination என்றோ இந்தப் படைப்பை தனியாக அறிந்துகொள்ள முற்படுவது முழுமையை அளிக்காது. நாவலின் காட்சிகளின் வழி வாசகன் உள்ளது உள்ளபடி தன் அனுபவங்களை கேள்விக்கு உள்ளாக்கி பயணத்தைத் தொடரலாம்.

http://www.omnibusonline.in/2015/09/blog-post_4.html?m=1

இசையாய் - சந்திரிகா ராஜாராம்

இசையாய்

எளிய அறிமுக நூல்

இசையாய் என்னும் இந்தக் கட்டுரைத் தொகுப்பு ஆழ்வார்கள் தொட்டு எம்.எஸ். வரை ஒரு வித்தியாசமான கலவையாய் பதிமூன்று வெவ்வேறு ஆளுமைகள் குறித்து எழுதப்பட்டுள்ளது. பெரும்பாலும் வாழ்க்கைக் குறிப்புகளும் தகவல்களும் நிறைந்துள்ள இந்தப் புத்தகம் நாளிதழ்களுக்குரிய எளிமையான அறிமுக நடையில் உள்ளது. பாரதியார், பாரதிதாசன், அருணகிரிநாதர், ஆழ்வார்கள், கோபாலக்ருஷ்ண பாரதி, ஆபிரகாம் பண்டிதர், எம்.எல்.வி, எம்.எஸ்., ஸ்வாதி திருநாள், ஜி.என்.பி, எம்.எம். தண்டபாணி தேசிகர், கவிகுஞ்சர பாரதி, க்ஷேத்ரக்ஞர் முதலிய ஆளுமைகள் பற்றிய கட்டுரைத் தொகுப்பு.

தகவல் திரட்டு

இசை பற்றிய எந்த ஒரு நூலாக இருந்தாலும், அதுவும் இசைத் துறையில் அங்கமாய் உள்ள ஒருவர் எழுதும் போது அந்தப் புத்தகத்தில் இசை ரசிப்புத்தன்மை, விமர்சனம், இசை நுட்பத்தின் விவரிப்பு, சுவாரஸ்யமான சம்பவங்கள் என பல தளங்களில் விஷயங்கள் இருப்பது ஒரு நல்ல புத்தகத்திற்கு அழகு. அந்த அளவுகோல்படி இந்தப் புத்தகம் ஓரளவே மேற்கூறிய தளங்களில் அமைந்திருக்கிறது.

பெரும்பாலும் வாழ்க்கைக் குறிப்புகளும் தகவல்களும் விரவி இருக்கின்றன. திருப்புகழ் மற்றும் பாரதிதாசன் பாடல்கள் கட்டுரைகளில் பாடல்களின் ராகங்கள், தாளங்கள் என இசை நுட்பக் குறிப்புகள் ஓரளவு உள்ளன. எம்.எஸ். மற்றும் எம்.எல்.வி கட்டுரைகளில் அவர்கள் வாழ்க்கையில் நடந்த பல நிகழ்வுகள் நன்கு தொகுக்கப்பட்டுள்ளன.

பழக்கப்பட்ட சொற்கள்

ஆளுமைகளின் மேதைமையை எடுத்துச் சொல்ல கட்டுரையில் வழக்கமான அபரிமிதமான புகழ் சொற்கள் கையாளப்பட்டுள்ளன. நேரடியாக ஆசிரியர்க்கு ஏற்பட்ட இசை அனுபவங்கள் பற்றிய விவரணை இல்லை. அவர் தம் கருத்துகளை ஏற்கெனவே பழக்கப்பட்ட சொற்கள் மீது ஏற்றி ஒரு பழக்கப்பட்ட கட்டுரையாக அமைந்துள்ளது. நாம் எதாவது பாடப் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறோமோ என்று எண்ண வைக்கும் தொனியில் சில இடங்கள் உள்ளன. நேரடி அனுபவம் சார்ந்து இன்னும் நெருக்கமாக எழுத வாய்ப்புள்ள களம். “In every work of genius we recognize our own rejected thoughts; they come back to us with a certain alienated majesty” – Emerson, Self Reliance.

இலக்கியம் இசை

இசை சம்பந்தப்பட்ட இலக்கிய விஷயங்களை நினைவு கூர்வது பொருத்தமானதாக இருக்கும். ந. பிச்சமூர்த்தியின் பிடில் – வயலினின் ரிஷிமூலம் பற்றிய ஒரு அழகிய கற்பனையை அமைத்திருக்கிறது. சிருஷ்டி சக்தி பற்றிய அவரது இன்னொரு படைப்பு பலூன் பைத்தியம்.

தி.ஜா.வின் மோகமுள் நாம் அனைவரும் நன்கு அறிந்த படைப்பே –
“ரங்கண்ணா மனதையே, உடலையே சங்கீத மயமாக ஆக்கிக்கொண்டிருந்தார். தம்புராவை மீட்டிக்கொண்டே இருக்கும்போது, கிழவி உள்ளே அண்டாவில் நீர் எடுக்க செம்பால் மொள்ளும்போது ஞண் என்று ஒலித்தால், ‘என்னடா ஸ்வரம் அது!’ என்று கேட்பார். உடனே பதில் சொல்லவேண்டும். காக்காய் கத்தல், மாவு மிஷின் கரைதல், தாம்பாளச் சத்தம், கும்பேச்வரன் கோவில் மணி, வாசலில் போகும் குதிரை வண்டியின் ஹார்ன், சைக்கிள் மணி எல்லாவற்றிற்கும் இந்தக் கேள்விதான் எழும். சொல்லிச் சொல்லி இப்போது நமக்கும் அதே வழக்கமாகிவிட்டது. உள்ளே எப்போதும் நிலவிக்கொண்டிருக்கும் ஆதார சுருதிக்கு உலகத்து ஒலியெல்லாம் ஸ்தாயிகளாகவும், ஸ்வரங்களாகவும் கேட்கின்றன.” – தி.ஜா.வின் இசையுலகம்.

ரங்கண்ணாவின் வார்த்தைகளில் “கீர்த்தனம் வந்தா கொஞ்சம் அத்தர் இருந்தாத் தேவலை போலிருக்கும். அப்புறம் எங்க தேவடியா வீடு இருக்குன்னு உடம்பு அலையும். அதுக்கப்புறம் சங்கீதம் பிராணன் எல்லாம் ஒண்ணொண்ணாக் கரையும்.” – மோகமுள் பிறந்த கதை.

இசை ரசனையை வித்தியாசமான முறையில் சொல்லும் கதை ஆ. மாதவனின் “நாயனம்” – தி.ஜா.வின் இசைக் கட்டுரை ஒன்று.

ஆக, தகவல் திரட்டு என்ற முறையில் ஒரு வழக்கமான தொகுப்பாகவும் அதே நேரத்தில் அனுபவம் நுட்பம் ஆகிய தளங்களில் பயணிக்கத் தயங்கும் ஒரு கட்டுரைத் தொகுப்பு.

– மணிகண்டன்

http://mathippurai.com/2015/04/04/isaiyaai/

மஞ்சத்தண்ணி - உரப்புளி நா. ஜெயராமன்

மஞ்சத்தண்ணி

எளிமையான துவக்க நிலை சிறுகதைகள். 1970களில் தொடங்கி 2009 வரை ஜெயராமன் எழுதியுள்ள சிறுகதைகளின் தொகுப்பு இது.

வளர்ப்பு ஆட்டை பலி கொடுக்க விரும்பாத சிறுமி, கஞ்சத்தனம் பிடித்த பணக்காரர், செய்த வேலைக்கு நியாயமான கூலி, உள்ள பொருளுக்கு சரியான விலை, கடவுளின் இருப்பிடம் மனது, மனைவியை உதாசீனம் செய்யும் கணவன், மனைவியை அடிக்கும் கணவன், ஒரு சிறிய ஊரின் முதல் தொலைபேசி, வயது வந்த பெண்கள் பள்ளிக்கு தொடர்ந்து செல்ல அறிவுரை என எளிய வாய்ப்பாடாக, நல்ல விஷயங்களை எளிமையான நடையில், இச்சிறுகதைகள் வசப்படுத்த முயன்றுள்ளன.


அனைத்து சிறுகதைகளும் கூடிய மட்டும் பேச்சு நடையில் உரையாடல் பாணியில் எழுதப்பட்டுள்ளன. இவையே சிறுகதைகளின் பலம்.

அதே நேரத்தில், வாசகனின் யூகத்திற்கும் கற்பனைக்கும் இடம் கொடுக்காது, நடுநடுவே, ஆசிரியரே முன்கதைச் சுருக்கம் – கதை மாந்தர் தம் எண்ண ஓட்டம் – பின் கதை என அனைத்து விஷயங்களையும் “நினைத்தார், கோபம்கொண்டான், சீறினான், பொருட்படுத்தவில்லை, கவலைப்பட்டார், நோக்கினார், மலர்ந்தது’ என்று பல இடங்களில் நேரடியாக குறிப்பிடுகிறார். இவை சிறுகதையின் தரத்தை பாதிக்கிறது. ஒவ்வொரு சிறுகதையிலும் உறுதியான தெளிவான கதை இருந்தும் நிகழ்த்திக் காட்டும் அம்சம் குறைந்து ஒரு உரை போல் கதைச் சுருக்கம் போல் நீள்கிறது.

வெவ்வேறு கதைக்களங்கள் கொண்ட சிறுகதைகள். தேர்வு செய்த ஆசிரியரின் முனைப்பு பாராட்டுக்குரியது. அதே நேரத்தில் கதைக் களங்களின் புற விவரிப்பிற்கு கூடுதல் விஷயங்கள் சேர்த்திருக்கலாம்.

முப்பது ஆண்டு கால இடைவெளியில் எழுதப்பட்ட சிறுகதைகள் ஆதலால் 2000 களில் எழுதப்பட்டுள்ள கதைகள் ஏனைய கதைகளை விட சிறப்பாக அமைந்துள்ளன.

உரைநடையில் “கேள்விக்கணை, கிழக்கு வானம், காற்றில் மிதந்து, விரைந்து நடத்தல், திரு திருவென விழித்தல், மட்டற்ற மகிழ்ச்சி, ஊடுருவி பார்த்தல்” என பல தேய் வழக்குகள் மீண்டும் உபயோகப்பட்டுள்ளது கண்டு சிறிது காலம் முன்னர் “துக்கம் தொண்டையை அடைத்தது” நினைவுக்கு வருகிறது.

எளிய நீதிக்கதைகள் ஆனாலும் டால்ஸ்டாயின் “How Much Land does a Man Need?”, Two Pilgrims, குவேம்புவின் “யாருமறியா வீரன்” போன்ற கதைகள் தொடும் இடங்கள் நுட்பமானவை. அவை ஏற்படுத்தும் மனவெழுச்சி விவரிக்க இயலாதது. அன்னையின் கரடிக் கரமல்லவா?

மஞ்சத்தண்ணி – துவக்க நிலை வாசகர்களுக்கான நம்பிக்கைக் கதைகளின் தொகுப்பு.

– மணிகண்டன்

http://mathippurai.com/2015/03/02/manjaththanni/

பள்ளிப்பருவம் - தொகுப்பு: ரவிக்குமார்

பள்ளிப்பருவம்

தமிழ் நாட்டில் பல்வேறு பகுதிகளில் பல்வேறு காலகட்டங்களில் பள்ளிப்பருவம் எப்படி இருந்தது எனத் தெரிந்துகொள்ள ஆறு குறிப்பிடத்தக்க ஆளுமைகள் எழுதியுள்ள கட்டுரைகளின் தொகுப்பு.

1930-40களில் மாயவரம் கும்பகோணம் (இந்திரா பார்த்தசாரதி, ஞானகூத்தன்) சுற்றி, 1950-60களில் மதுரை, திருநெல்வேலி, ராஜபாளையம், திண்டுக்கல் (அ. ராமசாமி, பேரா. கல்யாணி, க. பஞ்சாங்கம்) தொட்டு, 1980களில் விருத்தாசலம் (இமையம்) அடைகிறது இந்தப் கட்டுரைப் பேருந்து.பள்ளிப்பருவம், தொகுப்பு: ரவிக்குமார், மணற்கேணி பதிப்பகம், ரூ. 80

மாணவர்களின் குடும்ப சூழல், ஊரின் பொது மற்றும் சாதி அமைப்பு, பள்ளி செல்வதற்கான ஊக்கம், பள்ளியின் அருகாமை, நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதிப்பு, அரசாங்கத்தின் பங்கு, பள்ளிப்பருவத்து சுவையான நிகழ்வுகள் என பல்வேறு தளங்களில்கட்டுரைகள் அமைந்துள்ளன. அதே நேரத்தில் தீவிரக் கட்டுரைக்கான இறுக்கம் இல்லாது நனவோடை போல் உரையாடல் போல் எழுதப்பட்டுள்ளதால் கட்டுரைகளுடன் நன்கு ஒன்றி விட முடிகிறது.

—–

க. பஞ்சாங்கம் தனது கட்டுரையில் அவரது கணக்கு வாத்தியாரின் வசனத்தை நினைவு கூர்கிறார்.

“எவனொருவன் வகுப்பில் குறும்பு செய்கிறானோ, வீட்டுக் கணக்கு போடாமல் வருகிறானோ அவன் ஒருவன் முகட்டிலே தலைகீழாகத் தொங்கவிடப்பட்டுக் குண்டி சிவக்கச் சிவக்க அடிக்கப்படுவான்.”

ஆசிரியர்கள் மாணவர்களை அடி பின்னி எடுப்பது ஒரு சர்வ சாதாரண நிகழ்வாக இருந்திருக்கிறது. ஒரு சிலரைத் தவிர அடிக்காமல் இருந்த ஆசிரியர்கள் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்திருக்கிறது. தற்போதைய நிலைமை இந்த விஷயத்தில் வெகுவாக மாறியிருக்கிறது.

‘தலை வாரி பூச்சூடி உன்னை,
பாடசாலைக்கு போ என்று சொன்னாளே அன்னை.
சிலை போல ஏன் இங்கு நின்றாய்?
நீ சிந்தாத கண்ணீரை ஏன் சிந்துகின்றாய்?’

என்று அடிக்கத் தொடங்கும் என் தமிழ் வாத்தியார் திரு. காத்தமுத்து (1990களில்) அவர்களின் குரல் கேட்கிறது.

——

இமையம் தனது கட்டுரையில் ஒரு கிராமத்துச் சிறுவன் செய்யவேண்டிய வேலைகள் என்று ஒரு பக்கத்திற்கு பட்டியல் இடுகிறார். மலைக்க வைக்கும் பட்டியல். தான் எப்போதுமே ஒரு சிறுவனாக தன்னை உணர்ந்ததில்லை என்று ஆதங்கப்படுகிறார்.வீட்டு வேலை, காட்டு வேலை என ஓய்வில்லாது இயங்கிக்கொண்டிருக்கும் கிராமத்தின் சித்திரம் இவரது கட்டுரை மூலம் கிடைக்கிறது.

படிப்பு ஏறாது மக்கு என்றாகப்பட்ட மாணவர்கள் ஆசிரியர்களின் வீட்டு வேலைகள் முதல் காடு வேலை வரை செய்யவேண்டிய சூழல் இருந்திருக்கிறது. இதுபோக நெல், தானியங்கள், கீரை, தோட்டக் காய்கறிகள் என பெற்றோர்களிடமிருந்து கூட தனி வரவு. இது அபிமானத்தின் காரணமாகவும் இருக்கலாம். குருகுலம், பிரபுத்துவ காலகட்டத்தை வைத்து இதைப் புரிந்துகொள்ளலாம்.

“பாடத்தை விட எனக்கு ஆசிரியர் முக்கியம். படிப்பை விட எனக்கு பையன் முக்கியம் – நண்பர்களாக இருக்கும் ஆசிரியர்களுக்கு வணக்கம்” என்கிறார் இமையம்.

இமையம் இந்தக் கட்டுரையை எந்தவித தோரணங்களுமின்றி மிக வெளிப்படையாக எழுதி இருக்கிறார். தொகுப்பின் சிறந்த கட்டுரை என் கணிப்பில் இவருடையதே.

——

இ.பா வின் கட்டுரையில் அவருக்கே உரிய அங்கத நடையில் வகுப்பில் நடந்த ஜமீன்தார் மகனின் பாட்டுக் கச்சேரியை விவரிக்கிறார். ஹிட்லருக்கு உறவு என்று நினைத்துக்கொள்ளும் ஸ்ரீனிவாச ராகவ அய்யங்கார் முதல் கணித மேதை ராமானுஜனின் வகுப்புத் தோழனான அவரது ஆசிரியர் வரை பல ஆசிரியர்களைப் பற்றி சுவையாகச் சொல்லிச் செல்கிறார்.

தமிழ் வழிக் கல்வி சிறப்பாகச் செயல்பட்டதையும் ஆங்கிலம் ஒரு மொழிப் பாடமாக மட்டுமே கற்றுத் தரப்பட்டதையும், தனியார் மயம், வியாபார மயம் ஆன பின்பே தமிழ் ஆங்கிலம் என இந்த இரட்டைக் கல்வி முறை வளர்ந்து குளறுபடியான சூழல் உருவானதாக நினைவு கூர்கிறார்

பேராசிரியர் கல்யாணியும் தாய்மொழிக் கல்வியின் அவசியத்தைப் பற்றி தனது வாழ்வையே உதாரணம் காட்டி முன் வைக்கிறார். ஆங்கிலம் அறியாத தமிழ் வழிக் கல்வி மாணவர்கள் தாழ்வு மனப்பான்மையால் தன்னம்பிக்கையை இழக்க நேரிடுவது பற்றியும் குறிப்பிடுகிறார். தாய்மொழியில் படிப்பதே சாலச் சிறந்தது எனவும் தன்னம்பிக்கையை அதுவே வளர்க்கும் என்பதும் இவரது கருத்து. இது உண்மையும் கூட.

என் கல்லூரிக் காலங்களில் (2000களில்), வகுப்பில் வாயையே திறக்காத விடுதி மாணவர்கள் – விடுதியை அடைந்த உடன் பேசும் விஷயங்களும் உற்சாகமும் கிண்டலும் இந்தக் கட்டுரையைப் படித்ததும் நினைவுக்கு வந்தது. ஆங்கிலம் இன்றைய அறிவு மொழி. ஆங்கிலம் புரியாத காரணத்தால் கல்லூரி வகுப்பில் நடக்கும் பாடம் இயற்பியலா? இல்லை கணிதமா என்று புரியாது போனதாக இமையம் குறிப்பிடுகிறார்.

——

சிறுவனோ சிறுமியோ வலது கையால் இடது காதை பிடித்துக் காட்டிவிட்டால் தலைமை ஆசிரியர் நினைத்த தேதியை பிறந்த நாளாக குறித்துக்கொண்டு பள்ளியில் சேர்த்துக் கொள்வது, ஞானக்கூத்தன் வெண்பா எழுதி உதவித்தொகை பெற்றது, சாரங்கபாணி தெருவில் உள்ள அத்தனை அம்மாக்களும் தங்கள் மகன்களை ராமானுஜங்களாக்க ஆசைப்பட்டது, இரவு முழுதும் ஆற்று மணலில் கபடி விளையாடிய நினைவுகள், அ. ராமசாமியின் பயண நினைவுகள், விடுதி நினைவுகள், சனிக்கிழமை சாப்பிட்டு படுத்தான் என்னும் விளையாட்டுப் பாடல் பற்றிய குறிப்பு என பல இனிமையான விஷயங்கள்.

——

விராட பருவம் படிக்கத் தெரியும் அளவுக்குப் படித்தால் போதுமானது என்பது அ. ராமசாமியின் குடும்ப நம்பிக்கையாக இருந்திருக்கிறது. “எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான் பாடியவன் பாட்டைக் கெடுத்தான்” என்று சொல்லி வளர்ந்தார் இமையம். கூடப்பிறந்த ஒருவரோ தாயோ தந்தையோ அவர்களது அசாதாரண உழைப்பு மற்றும் கல்வியின் மீதுள்ள நம்பிக்கை காரணமாகவே ஒரு குடும்பத்தின் முதல் பட்டதாரி உருவாகியிருக்கிறார். ஒரு தலைமுறை பட்டதாரிகள் உருவாக காரணமாக இருந்திருக்கிறது நம் குடும்ப அமைப்பு. பள்ளிக்குச் செல்ல அடம் பிடிக்கும் பிள்ளைகளை அடித்து இழுத்துச் செல்லும் பெற்றோர், வீடு வீடாகச் சென்று வேட்டை நடத்தி வகுப்பில் சேர்த்த ஆசிரியர்களும் நினைவு கூரத்தக்கவர்கள். மூன்று தலைமுறையாய் மெல்ல மெல்ல முயன்று உருவான சூழல் இன்று வணிகக் கருவியாய் இருப்பது சோகம் என்கிறார் க. பஞ்சாங்கம்.

——

அனைத்துக் கட்டுரைகளுக்கும் பொதுவான சரடு சாதி. ஆறு பேரும் தம் ஆசிரியர்களின் சாதியை தெளிவாகத் தெரிந்து வைத்துள்ளனர். அவர்களது ஊரின் சாதி அமைப்பையும் நன்கு அறிந்துள்ளனர். நகர்ப் புறத்தில் வளர்ந்த எனக்கு இது ஆச்சர்யமாக இருந்தது. இந்த விஷயம் அவர்கள் காலத்தின் பிரதிபலிப்பாக இருக்கக்கூடும். கிறிஸ்துவ மிஷனரிகளின் பங்களிப்பு குறித்தோ பெண் கல்வி குறித்தோ பெரிதாக யாரும் எதுவும் சொல்லவில்லை. ஓர் இரு வரிகளைத் தவிர.

பள்ளிக்கல்வி, கிராம சாதி கட்டுமானத்தை விடுத்து நகரங்களுக்கு ஏராளமானோரை இடம் பெயரச் செய்திருக்கிறது. ஓரளவுக்கு சாதியின் பிடியிலிருந்து விலக்கி இருக்கிறது. பொருளாதார விடுதலை அளித்திருக்கிறது. இருப்பினும் “யார் சார் இன்னிக்கு சாதி பாக்கறாங்க?” என்ற கேள்விக்கான விடை நாம் செல்லவேண்டிய தூரத்தை கசப்பாக நினைவுறுத்தும்.

அவசியம் படிக்கவேண்டிய கட்டுரைத் தொகுப்பு.

— மணிகண்டன்

http://mathippurai.com/2014/12/19/pallipparuvam/

ஆறா வடு - சயந்தன்

ஆறா வடு

இரண்டு தசாப்த கால தீவிர இலங்கை யுத்தத்தை சுருங்கச் சொல்லும் புதினம். போரின் கொடுமையான நிகழ்வுகளை சயந்தன் சொல்லியிருக்கும் விதம்  நிதானமானது. ஈழ விடுதலைக்கான இந்தப் போரின் சூழலை தமிழர், சிங்களர், புலிகள் மற்றும் ஏனைய அரசியல் மற்றும் ஆயுத இயக்கங்கள், ராணுவம், இந்திய மற்றும் இலங்கை அரசாங்கம், சமரசத்திற்கு முயன்ற நோர்வே மற்றும் ஜப்பானிய நடுநிலையாளர்கள் என  பல்வேறு கோணங்களில் ஒரு வாசகன் புரிந்துகொள்ள உதவுகிறது. சாமானியனின் வாழ்வும் உள் நாட்டுப் போரும் பின்னிப்  பிணைந்துள்ள  புதினம்.

“யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல், அரசியல் என்பது ரத்தம் சிந்தாத ஒரு யுத்தம்” என்ற புகழ் பெற்ற மாசேதுங்  வாசகம் புதினத்தின் ஒரு பகுதியில் வருகிறது. நேருக்கு நேர் சண்டை, பின் பேச்சுவார்த்தை, தற்கொலைத் தாக்குதல், கலவரங்கள், என மாறி மாறி போரில் துவண்ட ஒரு தேசத்தின் சோகக் கதையை  உணர்ச்சிப் பிழம்பான மொழி நடையில் இல்லாமல்  தன் தர்க்கங்களை ஒளிக்காது வரலாற்றுத் தருணங்களில் தமிழர் சிங்களர் என இரு தரப்புக்கும் இருந்த அமைதிக்கான அல்லது தனி ஈழத்திற்கான வாய்ப்புகளைப் பற்றி ஒரு வித விலகலுடன் இன்னும் சொல்லப் போனால் ஒரு விமர்சன நோக்கில் அமைத்திருக்கிறது இந்த நாவலின் உள்ளடக்கம்.

வரலாறும் கதைச் சம்பவங்களும் முன்னும் பின்னும் நகரும் தொனியில் சொல்லப்பட்டிருக்கும் விதம் அருமை.

//”நாங்கள் இப்ப எங்கை நிக்கிறம்” என்று கேட்டார் –  வந்த ஆத்திரத்திற்கு இவன் கடலில் என்றான்.”// கதை நாயகன் மட்டும் அல்ல அவனைப் போன்ற பல லட்ச வாழ்வுகள் நடுக்கடலில் தத்தளிக்கும் சித்திரம் நம் முன் எழுகிறது. “ம் சொல்லிக் கொண்டிருக்கும் எம் சனங்களுக்கு” என்ற ஷோபா சக்தியின் வரிகள் நினைவுக்கு வருகிறது. (ம் புதினம் – ஷோபா சக்தி )

போர்க் காரணமாக சிறுவர்கள் ஆயுதம் ஏந்தவேண்டிய அவலச் சூழல் பற்றிய விஷயங்கள் இரண்டாம் உலகப் போரில் ஒற்றனாகப் பணி புரிந்த சிறுவன் இவானின் கதை வழி சொல்லப்படுகிறது. Ivan’s Childhood என்ற Andrei Tarkovsky ன் படம் உலகப் புகழ்ப் பெற்றது.

கொடும் நனவான இந்தப் போர் நடுவே கதை மாந்தர் தம் கனவுகள் பற்றிய விவரிப்பு உணர்ச்சிகரமானது. எளிய மனிதர்களின் வாழ்வை போரின் நிர்ப்பந்தங்கள் கடினமாக்குகின்றன – அது சிங்கள ராணுவ வீரனாக இருந்தாலும் கூட.

நாவல் மொத்தமும் ஈழத் தமிழ் நடையில் செறிவாக எழுதப்பட்டுள்ளது. அந்தரம் என்ற சொல் – ஒரு உரையாடல் அந்தரத்தில் நின்றது என்று குறிப்பிட்டிருக்கும் விதம் சிறப்பு – ரத்வத்தை, அண்ணை, சந்திரிகா, ரணில் என தலைவர்களின் பெயர்கள் போகிற போக்கில் மக்கள் பேசிச் செல்லும் பேச்சு நடை வழியில் சொல்லியிருப்பது புதினத்தின் நம்பகத்தன்மையைக் கூட்டுகிறது.

புதினத்தின் மற்றும் ஒரு கோணம் – இந்தியாவின் ஜனாதிபதி எம்.ஜி.ஆர் – அவர் ஒரு தமிழர் – இந்தியாவில் ரஜினிகாந்த், கமலஹாசன், விஜயகாந்த் முதலிய நடிகர்களும் ராதா, அமல, நதியா முதலிய நடிகைகளும் வாழ்ந்து வருகிறார்கள் – இந்த வரிகள்  எனக்கு மு. தளையசிங்கம் எழுதிய “கலி புராணம்” புதினத்தை நினைவுறுத்தியது. அந்தப் புதினத்தில் வரும் எம்.ஜி.ஆர், பத்மினி, சரோஜாதேவி கதை நினைவுக்கு வருகிறது – இப்போதும் கடந்த மாதம் இலங்கைத் தமிழர் ஒருவரிடம் பேசும்போது அவர் கூறினார் “விஜய் படங்கள் ரிலீஸ் ஆகும் தினங்களில் திரை அரங்குகளில் நெய் மணக்கும்.”

பல சம்பவங்களின் கோர்ப்பில் இந்தப் புதினம் பயணிக்கிறது – ஏற்கெனவே சொன்னது போல் முன் பின்னாக பெயர்களும் சம்பவங்களும் சொல்லப்படுவதால் வாசகன் தன் முயற்சியின் மூலமே இந்தப் புதினம் அளிக்கும் முழுச் சித்திரத்தைக் காண முடியும். கூடவே இலங்கை வரலாறு பற்றி தெளிவிருந்தால் இன்னும் சிறப்பான வாசிப்பு அனுபவத்தைப் பெற முடியும்.

ஒரு வேளை தனி ஈழம் அமைந்திருந்தால் – அந்த நாடு எப்படிப்பட்ட நாடாக இருந்திருக்கும் என்ற கேள்வி நாவலின் முடிவில் எழுகிறது. சயந்தன் வாசகனின் கற்பனைக்கே இந்தக் கேள்விக்கான பதிலை விட்டிருக்கிறார். சாதக பாதகங்களை இன்றைய வரலாறும் நமக்கு சொல்லிக் கொண்டுதான் இருக்கிறது. வரலாறு தவிர்த்து, ஒரு சிறுவனிடம் மழை நாளில் அவன் மாமா விரிந்த கடலின் முடிவில் உள்ள கருமேகத்தைக் காண்பிக்கையில் என்ன கதைப்பார்?

– மணிகண்டன்

http://mathippurai.com/2014/12/31/aaraa-vadu/

கானகன் - லக்ஷ்மி சரவணக்குமார்

கானகன்

காட்டில் நடந்த கதை – இன்றளவும் நடந்து கொண்டிருக்கும் கதை. காடு வாழ் உயிரினங்கள், மரங்கள், தாவரங்கள், காட்டின் பூர்வகுடிகள் – பளியர்கள், இடையர்கள், கருமாண்டிகள், விவசாய குடியானவர்கள், மரம் வெட்டும் வியாபாரிகள், ஜமீன்தார்கள், கஞ்சா தோட்டமுதலாளிகள், தொழிலாளிகள், காடுஇலாகா, தொண்டுநிறுவனங்கள், கம்யூனிஸ்ட், அரசாங்கம், தேர்தல், ஓட்டு என மொத்தச் சூழலையும் மனத்தில் கொண்டு எழுதப்படிருக்கும் ஒரு புதினம். பளியர் குடி, கருமாண்டி தங்கப்பனின் வீடு, காடு இவை மூன்றும்தான் முக்கியமான கதைக்களங்கள்.


காட்டை நன்கு தெரிந்து வைத்திருப்பவர்களே கருமாண்டிகள். தங்கப்பன் என்கிற கருமாண்டி பூர்வகுடிகளான பளியர்களுக்கு நிகராக காட்டை தெரிந்து வைத்திருப்பவன். வெள்ளையருக்கு பின்பு இப்போதைய ஜமீன்தார்களுக்கும் முதலாளிகளுக்கும் வேட்டைக்கும் காடு தொடர்பான வேலைகளுக்கும் துணை. தங்கப்பனின் மனவோட்டம் தெளிவாக ஆசிரியரால் வர்ணிக்கப் படுகிறது. காட்டை பற்றியும், பளியர்களைப் பற்றியும் காட்டைக் காண வெளியிலிருந்து வரும் அந்நியர்கள் பற்றியும் திட்டவட்டமான அபிப்ராயம் உடையவன். காட்டின் வலிமை அறிந்தவன். காட்டிலிருந்து தன்னை வேறுபடுத்திக் கொள்ள தொடங்கிய ஒரு தனி மனிதனின் துவக்கப் புள்ளி.

பளியர்களின் தெய்வம் பளிச்சி. காட்டின் அனைத்து உயிர்களின் ஆன்மாவும் இறந்த பின்பு அவளையே அடையும் – காட்டின் முழு தெய்வம் பளிச்சி – காட்டிலிருந்து தங்களைப் பிரித்துப் பார்க்காத பளியரிகளின் முழு நம்பிக்கை பளிச்சி. ஆசிரியரால் இந்த விஷயம் பல முறை திரும்பத் திரும்ப சொல்லபடுகிறது. அதே நேரத்தில் பளியர் குடியின் புற விவரிப்பும், அவர்களது தினப்படி வேலைகளும், பளியர்களின் கதைகளோ பாட்டுகளோ சடங்குகளின் விவரிப்போ இப்புதினத்தில் இடம் பெறவில்லை. பொடவு (குகை) உள்ளே உள்ள ஓவியங்கள் என்ன, பளியர்களின் திருவிழாவில் என்ன நடக்கும் – இவ்வாறு பூர்வகுடிகளின் வாழ்வின் விவரிப்பை நீடித்திருக்கலாம். புற விவரிப்புகள் பளியர்களின் நம்பிக்கையை இயல்பாக எடுத்துணர்த்தி புதினத்திற்கு வலு சேர்த்திருக்கும்.

தங்கப்பனின் மனைவிகள் இடையே நடக்கும் உரையாடல்கள் நெகிழ்ச்சி. உணர்வுகளை வெளிப்படையாக இயல்பாக சொல்லிச் செல்லும் விதம் அழகு. நாகரிக உலகில் நாம் இழந்த விஷயங்களில் இதுவும் ஒன்று.

தங்கப்பன் வேட்டைக்கு செல்லும் தருணங்களே நாவலின் உச்சம். ஆசிரியர் நொடிக்கு நொடி தனது எழுத்தின் மூலம் இந்த வேட்டைத் தருணங்களை நிகழ்த்திக் காட்டுகிறார். ஒரு திரைப்படக் காட்சிக்கு ஒப்பான சித்திரங்கள் இந்தப் பகுதிகளைப் படிக்கும் வாசகர்களுக்கு கிடைக்கிறது.

காட்டு மிருகங்கள் தங்களுக்கு பாதிப்பு என்றால் மட்டுமே தாக்கும். ஆனால் மனிதன்? பளியர்களின் கண்ணாடி சொர்க்கத்தில் அந்நிய மனிதர்கள் கல் எறிவது போல அமையப் பெற்று இருக்கிறது இந்த நாவலின் தொனி. காட்டுக்கு துளியும் சம்பந்தப் படாத மனிதர்கள் காட்டை தங்கள் முதலின் வட்டியாய் மட்டுமே காண்கின்றனர். பூர்வகுடிகள் தங்கள் எளிய தூய நிலையை தொடர்ந்தாலும் கால சுழற்சியில் நிலபிரபுத்துவ மற்றும் முதலாளித்துவ விசைகளுக்கு பணிந்து தங்கள் உயர் நம்பிக்கைகளை வெறும் சடங்காகச் சுருக்கிக் கொள்வதும் இயல்பாக இந்தப் புதினத்தில் பதிவாகி இருக்கிறது.

இது எப்படி நடந்தது? விவேக் ஷன்பெக்கின் “வேங்கைச் சவாரி” சிறுகதையில் இறுதியில் எதைச் சொல்லி அந்த ஆப்பிரிக்க தேசத்தவனை சமரசம் செய்து ஆட்டத்தைத் தொடர்ந்தார்கள் என ஒரு கேள்வி வரும். அதே போல் ஏன் பளியர்கள் தங்கள் சொர்க்கம் விடுத்து தரை இறங்கினர்? இந்தப் புதினத்தில் இந்தக் கேள்வி பெருமளவு ஆராயப்படவில்லை. காடு சூறையாடப்படுகிறது என்ற ஒற்றை வாக்கியம், காட்டு மூலிகைக்கு வெளிநாட்டில் நல்ல மார்கெட் என பொதுவான வாக்கியங்கள் இருப்பினும் உலகமயமாக்கல் தொடர்பான கண்ணிகளை சற்றே தெளிவுபடுத்தியிருக்கலாம்.

மரியோ வர்கோஸ் லோசவின் “ கதை சொல்லி” ( The Story Teller) கானகன் போன்றே பூர்வ குடிக்கும் நாகரீக மனிதனுக்கும் நடக்கும் உரசல்தான். The Story Teller புதினத்தின் வடிவமும், உட்பொருளும் வாசிப்பு அனுபவமும் முற்றிலும் வேறானவை.

வன்முறைக்கு வன்முறை தீர்வாகுமா? அத்துமீறலை தடுக்க எளியவர்களின் கையில் உள்ள ஆயுதம் என்ன? வாசிமலையான் தங்கப்பனின் வாரிசு. தங்கப்பனுக்கு அமைந்த அத்தனை வாய்ப்புகளும் தருணங்களும் வாசிக்கும் அமையப்பெறும். வாசி தேர்ந்தெடுப்பது எதை?

ஒரு நல்ல தரமான புதினம் – நிறைவான வாசிப்பு அனுபவம்.

– மணிகண்டன்

http://mathippurai.com/2014/12/04/kaangan/

மஞ்சள் வெயில் - யூமா வாசுகி

மஞ்சள் வெயில்

காலமும் நினைவுகளும்

இரவும் பகலும், தம் கைகளால் மூடிய வசந்த காலங்கள், விரலிடுக்கின் வழி ஒளி வீச காலச் சக்கரம் பின்னால் சுழன்றது. ஆணாய் பிறந்த எவருக்குமே இப்படிப்பட்ட அனுபவம் வாய்த்திருக்கும். அல்லது இந்தப் பேர் உவகையில் சிக்கிக் களித்த ஒரு தோழனாவது இருக்கக் கூடும். பேசிப் பேசி மாய்ந்து தயங்கி, தவித்து, பித்தேறி, பிரிந்து, உளறி, உற்சாகமாய் கிடந்த நாட்கள் உருண்டோடி மறையும் தருவாயில் நுனி நாக்கில் மீண்டும் ஒரு இனிப்பு, மஞ்சள் வெயில் என்னும் இந்த மலரின் மணம். கவித்துவமான உணர்ச்சிகரமான படைப்பு.

காதல் என்னும் பேருணர்வினை, அதன் தீவிரத்தை, கலை மனங்களால் ஏன் தாங்க முடிவதில்லை? வெள்ளமென பாயும் நினைவின் சொற்களைச் சீராக்கி அடுக்கி வடிகாலாய் கவிதையாக்கி கதையாக்கி தாங்கள் அடைந்த விவரிக்க முடியாத ஆனந்தத்தை எப்படியோ வாசகனுக்கும் கடத்துவதில் இப்படைப்பு வெற்றி கண்டிருக்கிறது.

காதல் எனது, எனது என்று உரிமை கொள்ளாது, காதலி, தோழன், சக மனிதன், சக உயிரினம், இந்தப் பிரபஞ்சம் என மெல்ல விரியும் சாத்தியத்தையும், கலைஞனுக்கு காதல் பற்றிய நுண்புரிதலாய், காதல் என்பது ஒரு பேரன்பின் ஒரு பெரிய கருணையின் எண்ணற்ற கைகளில் ஒன்று என வாசகனுக்கு உணர வைக்கிறது.

இந்தப் படைப்பு சம்பவங்களின் கோர்ப்பாக இல்லாமல், அளவான புற வய சித்தரிப்புகளுடன், பெரும்பாலும் ஒரு காதலனின் உணர்வுகளை தத்தளிப்பை ஏக்கத்தை உணர்த்துவதாக உள்ளது. காதலின் தீவிரம் நிலை பிறழ்ந்து வெறுப்பாக மாறும் சாத்தியமும், எப்படி ஒரு பெருங்கருணையின் பேரன்பின் மடியில் இத்தனை சுய வெறுப்பும் கழிவிரக்கமும் தோன்ற முடியும் என்ற வியப்பும் மேலிடுகிறது. வெறுப்பின் ஊற்றுவாயில் எது, கிடைக்காத ஒரு பொம்மைக்கு ஆசைப்படும் குழந்தையின் உணர்வைப் போன்றதா, காதலில் வெற்றி என்றால் என்ன, தோல்வி என்பது என்ன?

உணர்ச்சிகரமான கொந்தளிப்பான நடையில் எழுதப்பட்டிருந்தாலும் புதினத்தின் அமைப்பில் தெளிவான கட்டமைப்பு இருக்கிறது. பெண்கள் பற்றிய இளைஞரின் கனவுகள் தொடங்கி, காதலின் முதற்கணங்கள், ஏக்கம், வெறுப்பு, பரஸ்பரம், பிரிவு, வலி, மீண்டும் காதல் எனத் துல்லியமாக நகர்ந்து, காதல் நீண்டு பேருணர்வின் சாரம் கண்டு மனம் நிறையும் இடம் வரை அழகு. சிறிய கச்சிதமான படைப்பு. என் காதல், எனது என்று தொடங்கும் புயலில் சிக்கிய படகை பேரன்பின் கரை சேர்ப்பது எது… திருப்பிச் செலுத்த வேண்டிய கடனா, கண்ணியமா? வாழ்வில் தன்னிச்சையாய் வரும் பேரன்புக் காலங்கள், காதல் தருணங்கள், இந்தப் படைப்பின் வழி கண் முன் விரிகிறது, புதிய பொருள் கொள்கிறது.

உன்னைப்பற்றி…

புழுவாய்
உறங்கி
விழித்தபோது
பட்டாம்பூச்சியாக
இருந்தேன்.

அவ்வளவு
காதலுடன்
கனவில்
வந்து முத்தமிட்டது
யார்?

– வீரான் குட்டி (மலையாளம்)

————————–

– மணிகண்டன்
http://mathippurai.com/2015/04/29/manjal-veyil/