Tuesday, March 29, 2016

ஆறா வடு - சயந்தன்

ஆறா வடு

இரண்டு தசாப்த கால தீவிர இலங்கை யுத்தத்தை சுருங்கச் சொல்லும் புதினம். போரின் கொடுமையான நிகழ்வுகளை சயந்தன் சொல்லியிருக்கும் விதம்  நிதானமானது. ஈழ விடுதலைக்கான இந்தப் போரின் சூழலை தமிழர், சிங்களர், புலிகள் மற்றும் ஏனைய அரசியல் மற்றும் ஆயுத இயக்கங்கள், ராணுவம், இந்திய மற்றும் இலங்கை அரசாங்கம், சமரசத்திற்கு முயன்ற நோர்வே மற்றும் ஜப்பானிய நடுநிலையாளர்கள் என  பல்வேறு கோணங்களில் ஒரு வாசகன் புரிந்துகொள்ள உதவுகிறது. சாமானியனின் வாழ்வும் உள் நாட்டுப் போரும் பின்னிப்  பிணைந்துள்ள  புதினம்.

“யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல், அரசியல் என்பது ரத்தம் சிந்தாத ஒரு யுத்தம்” என்ற புகழ் பெற்ற மாசேதுங்  வாசகம் புதினத்தின் ஒரு பகுதியில் வருகிறது. நேருக்கு நேர் சண்டை, பின் பேச்சுவார்த்தை, தற்கொலைத் தாக்குதல், கலவரங்கள், என மாறி மாறி போரில் துவண்ட ஒரு தேசத்தின் சோகக் கதையை  உணர்ச்சிப் பிழம்பான மொழி நடையில் இல்லாமல்  தன் தர்க்கங்களை ஒளிக்காது வரலாற்றுத் தருணங்களில் தமிழர் சிங்களர் என இரு தரப்புக்கும் இருந்த அமைதிக்கான அல்லது தனி ஈழத்திற்கான வாய்ப்புகளைப் பற்றி ஒரு வித விலகலுடன் இன்னும் சொல்லப் போனால் ஒரு விமர்சன நோக்கில் அமைத்திருக்கிறது இந்த நாவலின் உள்ளடக்கம்.

வரலாறும் கதைச் சம்பவங்களும் முன்னும் பின்னும் நகரும் தொனியில் சொல்லப்பட்டிருக்கும் விதம் அருமை.

//”நாங்கள் இப்ப எங்கை நிக்கிறம்” என்று கேட்டார் –  வந்த ஆத்திரத்திற்கு இவன் கடலில் என்றான்.”// கதை நாயகன் மட்டும் அல்ல அவனைப் போன்ற பல லட்ச வாழ்வுகள் நடுக்கடலில் தத்தளிக்கும் சித்திரம் நம் முன் எழுகிறது. “ம் சொல்லிக் கொண்டிருக்கும் எம் சனங்களுக்கு” என்ற ஷோபா சக்தியின் வரிகள் நினைவுக்கு வருகிறது. (ம் புதினம் – ஷோபா சக்தி )

போர்க் காரணமாக சிறுவர்கள் ஆயுதம் ஏந்தவேண்டிய அவலச் சூழல் பற்றிய விஷயங்கள் இரண்டாம் உலகப் போரில் ஒற்றனாகப் பணி புரிந்த சிறுவன் இவானின் கதை வழி சொல்லப்படுகிறது. Ivan’s Childhood என்ற Andrei Tarkovsky ன் படம் உலகப் புகழ்ப் பெற்றது.

கொடும் நனவான இந்தப் போர் நடுவே கதை மாந்தர் தம் கனவுகள் பற்றிய விவரிப்பு உணர்ச்சிகரமானது. எளிய மனிதர்களின் வாழ்வை போரின் நிர்ப்பந்தங்கள் கடினமாக்குகின்றன – அது சிங்கள ராணுவ வீரனாக இருந்தாலும் கூட.

நாவல் மொத்தமும் ஈழத் தமிழ் நடையில் செறிவாக எழுதப்பட்டுள்ளது. அந்தரம் என்ற சொல் – ஒரு உரையாடல் அந்தரத்தில் நின்றது என்று குறிப்பிட்டிருக்கும் விதம் சிறப்பு – ரத்வத்தை, அண்ணை, சந்திரிகா, ரணில் என தலைவர்களின் பெயர்கள் போகிற போக்கில் மக்கள் பேசிச் செல்லும் பேச்சு நடை வழியில் சொல்லியிருப்பது புதினத்தின் நம்பகத்தன்மையைக் கூட்டுகிறது.

புதினத்தின் மற்றும் ஒரு கோணம் – இந்தியாவின் ஜனாதிபதி எம்.ஜி.ஆர் – அவர் ஒரு தமிழர் – இந்தியாவில் ரஜினிகாந்த், கமலஹாசன், விஜயகாந்த் முதலிய நடிகர்களும் ராதா, அமல, நதியா முதலிய நடிகைகளும் வாழ்ந்து வருகிறார்கள் – இந்த வரிகள்  எனக்கு மு. தளையசிங்கம் எழுதிய “கலி புராணம்” புதினத்தை நினைவுறுத்தியது. அந்தப் புதினத்தில் வரும் எம்.ஜி.ஆர், பத்மினி, சரோஜாதேவி கதை நினைவுக்கு வருகிறது – இப்போதும் கடந்த மாதம் இலங்கைத் தமிழர் ஒருவரிடம் பேசும்போது அவர் கூறினார் “விஜய் படங்கள் ரிலீஸ் ஆகும் தினங்களில் திரை அரங்குகளில் நெய் மணக்கும்.”

பல சம்பவங்களின் கோர்ப்பில் இந்தப் புதினம் பயணிக்கிறது – ஏற்கெனவே சொன்னது போல் முன் பின்னாக பெயர்களும் சம்பவங்களும் சொல்லப்படுவதால் வாசகன் தன் முயற்சியின் மூலமே இந்தப் புதினம் அளிக்கும் முழுச் சித்திரத்தைக் காண முடியும். கூடவே இலங்கை வரலாறு பற்றி தெளிவிருந்தால் இன்னும் சிறப்பான வாசிப்பு அனுபவத்தைப் பெற முடியும்.

ஒரு வேளை தனி ஈழம் அமைந்திருந்தால் – அந்த நாடு எப்படிப்பட்ட நாடாக இருந்திருக்கும் என்ற கேள்வி நாவலின் முடிவில் எழுகிறது. சயந்தன் வாசகனின் கற்பனைக்கே இந்தக் கேள்விக்கான பதிலை விட்டிருக்கிறார். சாதக பாதகங்களை இன்றைய வரலாறும் நமக்கு சொல்லிக் கொண்டுதான் இருக்கிறது. வரலாறு தவிர்த்து, ஒரு சிறுவனிடம் மழை நாளில் அவன் மாமா விரிந்த கடலின் முடிவில் உள்ள கருமேகத்தைக் காண்பிக்கையில் என்ன கதைப்பார்?

– மணிகண்டன்

http://mathippurai.com/2014/12/31/aaraa-vadu/

No comments: