Friday, January 31, 2020

Psycho

சைக்கோ திரைப்படம் குறித்த சில எண்ணங்கள் , விமர்சனம் அல்ல.

படம் பார்த்தவர்களுக்கு மட்டும்

படத்தின் முதல் காட்சியிலேயே யார் கொலைகளை செய்கிறார் என்று தெரிந்த பின்னர் முழு ஸ்வாரசியமும் எப்படி கொலையாளி மாட்டிகொள்கிறார் அல்லது கொலையாளியை எப்படி பிடிக்கிறார்கள் என்பது. இது பொதுவான படங்களின் போக்கு. சைக்கோவை  நாம் மேலும் நெருங்கி ரசிக்க இந்த "எப்படி " குறித்த சில எண்ணங்களே இந்தப் பதிவு. வெறும் குறியீடு கண்டுபிடிக்கும் விளையாட்டு மட்டும்மல்ல படம் நெடுகே உள்ள ஒத்திசைவை கண்டு கொள்ளவே இப்பதிவு.

படம் கௌதமன் வாழ்வின் , அவன் புத்தர் ஆவதற்கு முன்னர் நடக்கும் நிகழ்வுகளின் தொகுப்பாக காணலாம் , படத்தில் கௌதமிற்கு துணையாக இருக்கும் ராஜநாயகம்  மற்றும் கமலா , ஒரு பேட்டியில் தாகினியை புத்தராக உருவகிக்கிறார் மிஷ்கின் - படத்தின் இறுதியில் அங்குலியும் மனம் மாறுகிறான். கௌதமனின் பயணமும் நிறைவு பெறுகிறது - அங்குலியை கௌதமனின் மனதின் ஒரு அங்கமாக காண்போமேயானால் தாகினி நாம அடைய வேண்டிய முழுமையை நாம் அனைவரும் புத்தர் ஆகக் கூடிய சாத்தியத்தை புரிந்து கொள்ளலாம் - படத்தின் துவக்கத்தில் " Diamond Sutra " குறித்த வரிகளை இணைத்து புரிந்து கொள்ளலாம்

இங்கிருந்து நாம் முத்துகுமாரனுக்கு செல்லலாம் - கனிவின் மூலம் அங்குலியை எதிர் கொள்கிறான் - இந்த கனிவு அறிவின் வழி வந்தது , இயற்கையானது அல்ல , ஆனால் கனிவு முதல் படி மட்டுமே. கனிவின் பின் கோரமுகம் குறித்து அறிய வேண்டும் என்றால் நாம் கனிவாக இருக்க முயலும் நேரங்களை அசை போடலாம் , சில நேரங்களில் இயல்பாகவும் பல நேரங்களில் கனிவை நாம் வலிந்தே வர வழைக்கிறோம் - கனிவே நாம் கனிவாக இருக்கிறோம் என்னும் அறிவே ஆணவத்தை தருகிறது , இந்த ஆணவமே நமக்கு சிறையாகிறது , விடுதலையை தடுக்கிறது , சிறைக்குள் தலை. தலையில்லா உடல் இதன் நேரெதிர் , அங்குலி வழிபடுவது , வெறும் உடலின் இயக்கத்தை மட்டுமே கவனிக்கையில் உடலும் நமக்கு சிறை. இதுவும் விடுதலையை தடுக்கிறது.  அடுத்தது ராஜநாயகம் அங்குலியை அங்குலி வழியிலேயே எதிர் கொள்ள முயன்று தோல்வி அடைகிறான் . உடலின் வழி .உனக்கு ஆசையே கிடையாதா என்று கமலா  கேட்கையில் உயிரைக் கொடுத்தாவது  உள்ளுறையும் தாகினியை அடைவேன் என்கிறான் கௌதமன்.மத்திம வழி. புலன் வழி தாகினியை உணர தொடங்கி புலன்களை தாண்டி முழுமையை அடைகிறான்.

இறுதியில் கௌதமன் அரவணைக்கையில் அங்குலி புத்தனாகிறான், அங்குலி தன்னுள் உறையும் தாகினியை அதன் முன்னரே மெல்ல உணர தொடங்கியிருந்தான் - கௌதமன் தொடுகை நிறைவாக.

புலன் வழி தாகினியை உணர தொடங்கி புலன்களை தாண்டி முழுமையை அடைகிறான் - இந்த வரி மூலம் நாம் "நீங்க முடியுமா பாடல் படமாக்கப்பட்ட விதம் குறித்து சிலாகிக்கலாம். புலன் வழி அறிய தொடங்கும் ஒருவன் , சிறிது தூரம் வழி நடத்தும் அன்னை ( கமலாவின் தாயார் ) , முந்தைய அறிதலுடம் சிறு மோதலுடன் தொடங்கும் பாடல் , கமலாவின் அறிவுரைகளை தாண்டி புலன்களை தாண்டி அங்குலியை கண்டடைகிறான். திரை அரங்கில் ஒரு பறக்கும் அனுபவம் இந்தப் பாடல். வேகமாக கடக்கும் முயலை நீங்கள் கண்டிருக்க கூடும்.

படத்தின் அடுத்த அடிநாதம் " இயந்திர மயமாக்கல் " - அங்குலி கொலைசெய்யும் முறையில் தொடங்கி அங்குலி சார்ந்துள்ள அனைத்து விஷயங்களிலும் உள்ள இயந்திர இயல்பை மேலும் அறிய முயலலாம் - கொலை செய்வதை நாம் வழக்கமாக காணும் "சைக்கோ" கொலைகாரர்கள் போல ரசித்தோ அல்லது நெருக்கடியிலோ செய்வதில்லை - இயந்திர தனமாக அடுத்தடுத்து தொழிற்கூட தயாரிப்பு  போல தலைகள் விழுந்த வண்ணம் உள்ளது , ஒருவர் தலையை வெட்டி இன்னொருவரிடமும் அவர் தலையை வெட்டி இவரிடம் கொடுக்கும் இயந்திரம் அங்குலி.

அங்குலியின் வார்ப்பு எங்கே தொடங்குகிறது ? கல்வி நிலையங்களில். தவழும் பருவத்திலேயே சாவி கல்விநிலையங்களிடம் சென்று விடுகிறது. அடக்குமுறை சார்ந்த  ஒழுக்க விதிகளும் , இயல்பிற்கு மாறான விஷயங்களின் மீதான பிடிப்பும்  குற்ற உணர்வை தூண்டியபடியே ஒரு ரணமான உயிரை தோற்றுவிக்கின்றன - அந்த குற்ற உணர்விலிருந்து ஒருவன் கற்றுக்கொள்ள அவனுக்கு அன்பும் இறை நம்பிக்கையும் சில நேரங்களில் அந்த குற்ற உணர்வே ( மிஷ்கின்  பேட்டி ) துணையாக இருக்கின்றன - இந்த வகையிலேயே நாம் " Gladiator " காட்சியை புரிந்து கொள்ள முடியும் - மேலதிகமாக கதை களம் நடக்கும் மேட்டுப்பாளையம் சுற்றி உள்ள நம் காலத்து பள்ளிகளை பற்றி நமக்கு தெரியும் - " தேமே என்று இருக்கும் வெள்ளை பன்றியா ? அல்லது "உறுமும் கருப்பு பன்றியா ?" என்பதன் சூட்சுமம் புரியும்.

முடிவாக இசை , ஒத்திசைவான சிம்பொனி இசையால் நிரம்பி வழிகிறது திரை - உச்சமாக அங்குலி இறுதியில் தொழிற் கூடத்தில் தன் கத்தியை வீசியபடி வரும் காட்சி - இயந்திரமயமாக்கம்  பல்வேறு கண்ணிகளின் ஒத்திசைவோடு சேர்ந்து செயல்படும்  ஒரு அமைப்பு தான் -  - சிம்பொனி நமக்கு அளிக்கும் முழுமையை - இயந்திரம் நமக்கு அளிக்கிறதா ? இயந்திரமயமாக்கலின் தவிர்க்க முடியாத உருவகமாக அங்குலி , இருட்டில் கத்தியை வீசியபடி கௌதமனை தேடுகிறான். தேடித் கொண்டிருக்கிறான்.
சகுந்தலை தவற விட்ட மோதிரம் - துஷ்யந்தன் மறந்திருக்கலாம் கௌதமன் நினைவில் வைத்திருக்கிறான்