முதல் மூன்று துண்டு காட்சிகளிலேயே முழு படத்தின் தோராயமான கதையை கூறி விடுகிறார்,அந்தக் கதை எப்படி நிகழ்கிறது என்பதில் முழு ஸ்வாரசியமும் அடங்கி இருக்கிறது , கூடவே உட்பரதிகளின் தோரணமும் குறியீடுகளின் அலங்காரமும்.
ஏழை வேலைக்காரி Vs பணக்கார வீட்டுக்காரன் என்ற எளிய பழகிப்போன டெம்ப்ளேட் என அஞ்ச வைத்து மெல்ல மெல்ல அனைத்து கதவுகளையும் திறக்க மறக்க முடியாத திரை அனுபவமாக முடிகிறது நெஞ்சம் மறப்பதில்லை,
போதும் என்ற மனம் ஒரு புறம்,தனக்கு கிடைத்தது போல் எல்லாருக்கும், அனைத்தும் கிடைக்க வேண்டும் என்று எண்ணும் பணக்காரன் என்று சுவாரஸ்யமான பீடிகை சட்டென போதும் என்ற தூய இதயம் தவிர்க்கப்பட ஆப்பிளை கடிக்கத் துவங்குகிறது , அத்தனை முன்னெச்சரிக்கைகள் இருந்தும் விகாரமான ஆட்டங்கள் துவங்குகின்றன, முன் சொன்ன பீடிகை உடைகிறது.
திரிந்த சொர்கத்தில் திரண்ட அமுதென வரும் ரிஷி , செவி வழி துவங்கிய பயணம் நீண்டு களைத்து உறக்கத்தில் இருந்த பாலகன் உண்மைத் தேடலின் மென் வருடலில் திருப்பள்ளியெழுச்சி. திருநீராட்டின் நீர்குமிழிகளூடே தெரிந்த அன்னை முகங்களை நெஞ்சம் மறப்பதில்லை
மீண்டும் மீண்டும் ஆப்பிளை நாடுகையில் பொய்யின் நாடகத்தை உண்மையென நம்ப வைக்கும் வலிமை ஆப்பிளுக்கு உண்டு என்று அறியும் முன்னர் மீள முடியாத உலகத்திற்கு தூய இதயங்கள் சென்றிருக்கும், அங்கிருந்து தங்கவொண்ணா துயரங்கள் இம்மண்ணில் நடக்கத் துவங்குகையில் தன் மொத்த சொரூபத்தை ஆற்றலை வெளிப்படுத்தும்.
பாடல்கள் வழி புதிய பாதைகளில் நாம் நம்மை கண்டுக் கொள்ளும் விதமாக தீமையின் கீழ்மையும் சேர்ந்து ஆடும் மென் நடன அசைவுகளை நாம் ரசிக்கத் துவங்குகையில் தீமை மற்றும் கீழ்மைகள் நம்மிடம் உள்ள மிகவும் பழகிய பழக்கங்கள் என்று நாம் கண்டு கொள்கையில் சற்றே கசப்புணர்வோம். இவ்விஷயத்தில் மாளிகை அருகேயுள்ள குடிசை என்னும் தேர்வு , இரண்டும் வேறு கதைகளாக இருப்பினும் இரண்டிலும் ஒரே கதை தான் என்பதும் நமக்கு புலனாகிறது.
முடிவில் சற்றும் அரளாது நேருக்கு நேர் நாம் கேள்விகளை எதிர் கொள்கையில் நம் காலம் முடியும் நேரம் வந்திருக்கும் , பதவி அந்தஸ்து, சொத்து பரம்பரை பெருமை அரசியல் கோஷம் இத்தனையையும் நம் வாழ்வில் நிரப்பி வழித்து வைத்தாலும் என்றோ ஒரு நாள் நாம் அரளாது நேருக்கு நேர் நாம் கேள்விகளை எதிர் கொள்கையில் நிழலாடும் அன்னை முகங்களை நெஞ்சம் மறப்பதில்லை.