Tuesday, July 27, 2021

ஒன்பது குன்று

 



ஆசிரியர் அவர்களின் மலரும் நினைவுகளாக அமைந்திருக்கும் இந்த கதைகட்டுரைகள்  நூல்,  நழுவிக் கொண்டே இருக்கும் விழுமியங்கள் குறித்து அசை போட , குறிப்பாக இந்நூலை வாசிக்கும் இளம் மற்றும் மத்திம வயதினரின் மனதில் லட்சிய வைராக்கியத்தை விதைக்க கூடிய ஒரு நேர்மறை கையேடு. இந்த கதை மனிதர்களுக்கு  அவர் தம் வாழ்வில் வென்று எடுக்க புதிய பொருளோ புதிய நிலங்களோ இல்லை, தாமே கனிந்த அந்த ஒரு கனம் முதல் மனதில் சூல் கொண்ட அந்த வைராக்கிய சுடரை துணை நிறுத்தி பகிர முடியாத ஞானத்துடன் செயல் யோகத்தில் அமர்ந்து விட்டவர்கள், அவர்கள் சுட்டவது எல்லாம் செயலயே , சமுதாயத்தால் வெற்றி அல்லது சாதனை என்று அறுதியிட்டு கூறும் தளங்கள் அல்ல இவர்கள் இயங்குமிடங்கள், தினசரி வாழ்வின் தளத்திலேயே இவர்கள் செயல் யோகம் அமைந்திருக்கிறது , காலத்தின் ஞானம் உணர்ந்து சமுதாய பெரும்போக்கிற்கு இணையான நேர்மறையான ஒரு எதிர்வினை இவர்கள் வாழ்வு , கால மாற்றங்களை தாண்டி நம்மை அழைத்து செல்லும் பகிர முடியாத ஞான சுடரை அணையாது தங்கள் வாழ்வையே செய்தியாக்கிய மாமனிதனின் தடம் பற்றிய வைராக்கிய மனிதர்கள் குறித்த கதைகட்டுரைகள் இந்நூல், எழுத்தாளர் பாவண்ணன் அவர்களுக்கு நன்றி 

Saturday, July 17, 2021

Kasaba - Nuri Bilge Ceylan

 


அலைந்து திரிந்து அயர ஒரு ஊர்,

அயர்ந்து தெளிந்து சொல்ல கதைகள், 

அருகில் அமர்ந்து கேட்க குடும்பம்,

நாளை அசை போடும் தீஜ்வாலைகள், 


இருப்பதியோரம் நூற்றாண்டு நுழைவாயில் அமைந்த 

ஒரு பின்னிரவுக் கவிதை

#Kasaba #NuriBilgeCeylan

Wednesday, July 07, 2021

வேரும் விழுதும் - க சுப்ரமணியன்

வேரும் விழுதும் - க சுப்ரமணியன் 

ஒரு அணை உருவாகும் பின்புலத்தில் எழுதப்பட்டுள்ள நாவல், முதல் பதிப்பு 1970 ல் வைத்திருக்கிறது, திஜா அவர்களின் கவனம்,  சிட்டி வழி ,  வாசகர் வட்டம் வெளியிட்டுள்ளது, தற்போது சிறுவாணி வாசகர் மையம்  சார்பில் 2021 ல் மறு பதிப்பு. நல்ல நாவலை மீள் மறுபதிப்பு செய்ததற்கு  நன்றிகள் 

தனி மனிதன் - நாயகன் 

ஒரு நவீன மனிதன் தனிமையின் பிரதிநிதி , நவீனத்தின் நுழைவாயிலிலேயே தனிமை அவனை வரவேற்கிறது, நம் நகரகங்கள் இவ்வித தனிமைகளின் மலர்,  கிராம தேனீக்கள் மீண்டும் மீண்டும் வந்தமர்ந்து மீள முடியாத  பெரியதொரு சமுத்திர மலர் , நாவலின் நாயகன் அவ்வாறான ஒரு நகரத்தில் வந்தமர்ந்தவன் , நகரத்தின் கடிகாரத்தையும் அதன் எந்திரத்தனத்தையும் உணர்ந்து கொண்டவன், கிராமம் குறித்த பெரிய கனவுகள் இல்லாதவன். நாயகன் கதாபாத்திரம் எழுத்துப்பட்டுள்ள விதம் -  அனைத்து நிகழ்வுகளையும் அதன் போக்கில் நடைபெறுகையில் மௌன சாட்சியாக கடமைக்கும் குற்றஉணர்வுக்கும் கேள்விகளுக்கும் இடையே பெரிய அளவில்  எதையும் மாற்ற முயலாத ஒரு மௌடீகம் அமையப்பெற்றவன், ஒரு நவீன தனியன் சாத்வீகன் கடமையை செய்யக்கூடிய சரி தவறு குறித்து மனதளவில் அலட்டிக்கொண்டு , செயலளவில் கண் முன்னே அமைந்த காரியத்தை முடிக்கும் சமர்த்தன், நாவலின் ஏனைய கதாபாத்திரங்களை இணைத்து  அவர்கள் வாத பிரதிவாதங்களை கேட்டு "ம்" போடும் தத்துவவாதி, அவன் நாம் கதாப்பாத்திரங்களை காண ஒரு கேமரா ஆகவே இருக்கின்றான், இவ்வாறாயின் நவீன மனிதன் என்கிற விஷயத்தின் மீதே ஒரு அதிர்ச்சி தோன்றுகிறது, அவன் காணாமல் போகக் கூடியவன், பார்த்துக்கொண்டே கேட்டுக்கொண்டே இயங்கிக்கொண்டே இருந்தாலும் பார்வையின்மை என்னும் மிகப்பெரிய குழி அவனுக்காக காத்திருக்கிறது என்று எண்ணத் தோன்றுகிறது , தனியன் என்பதால் எளிதில் வேறொருவன் அவனுக்கு பதிலாக அவனை போன்ற ஒரு மாற்றாக வருவதற்கான அத்தனை சாத்தியதையும் அவனே உருவாக்கிக் கொள்பவன் 

வாத பிரதி வாதங்கள் - பார்வைக்கோணம் - பெரியப்பா - டாக்டர் - அறம்வளர்த்தான் 

நாவலின் வீச்சு பெரியப்பா டாக்டர் அறம் வளர்த்தான் என்ற கதாபாத்திரங்கள் வழி பல்வேறு எல்லைகளில் வாசகனின் பார்வையை சீண்டியபடியே வருகின்றனர், அறிவின் எல்லையை, மனோதிடத்தின் எல்லையை, மண் மீதான பிடிப்பின் எல்லையை, வளர்ச்சியின் எல்லையை பக்தியின் எல்லையை  வாத பிரதி வாதங்கள் வழி வாசகன் உணர்கிறான், பழமைக்கும் அறிவுக்கும் உள்ள தொடர்பு என்ன ? தேங்கி போன பழைய விஷயங்கள் என்று சொல்லப்படுபவை அறிவுக்கு ஒவ்வாதவையா ? நடைமுறைக்கு சரியாக வரும் சட்டங்கள் தர்மப்படி சரியானதா ? உணர்ச்சி வேகத்திற்கும் அறிவிற்கும் சம்பந்தம் இருக்கிறதா ? அறிவு எப்போதுமே வளர்ச்சியை மட்டும் தான் கொண்டு வருகிறதா ? இவை அனைத்தையும் நாயகன் வழி நாமும் அசைபோடுகிறோம், நாயகன் அனைத்திற்கும் ஒரு பார்வையாளனாகவே இருக்கின்றான் மௌனத்தையே பதிலாக வைத்திருக்கிறான் 

நாவலின் நடை - உத்தி 

நாவல் விறு விறுப்பான சுவாரஸ்யமான வாசிப்பாகவே அமைந்தது, சற்றே துள்ளும் நடையில் அடுத்த அடுத்த விஷயங்களுக்கு தாவித்தாவி செல்லும் பாங்கு, " அந்நியன் மற்றும் "பிளேக் " நாவல் ஆசிரியரை மிகவும் கவர்ந்ததாக சொல்கிறார் - அதன் பாதிப்பு நாயகன் பாத்திர படைப்பிலும் தாவித்தாவி செல்லும் நடையை அமைக்க ஏதுவாக உள்ள ஒரு வித "சுருங்கச் சொல்லி விலகும்" தொனியும் அடிப்படையாக அமைந்திருக்கிறது, சில இடங்களில் "லாசரா " அவர்களை நினைவூட்டும் தொனி, நகரத்தை வளர்ச்சியை ரசிக்கத் துவங்கி இருக்கும் மனிதன் நிறைய கேள்விகளுக்கு அளிக்கும் பதில் "......." , இந்த "......."  நாவலில் அநேக இடங்களில் வருகிறது. ஒரு வகையில் நாவலின் பாவம் /தொனி  மௌனமே, புதிய அணையின் மீது நின்று நாயகன் தனது கிராமத்தை நோக்குகையில் அவன் காண்பது தான் என்ன ? 

Tuesday, July 06, 2021

மர்ம காரியம் - போகன் சங்கர்

 

    குறுங்கதைகளின் கோலாட்டம்