யாழ்ப்பாணத்தை மையமாக கொண்டு அரை நூற்றாண்டு கால வாழ்க்கையை மிகுந்த நிதானத்தோடு சொல்லிச் செல்லும் நாவல் 'சித்தன் சரிதம்'. கதை நாயகன் சித்தனின் வாழ்வின் தேர்ந்த நிகழ்வுகளை பதிவு செய்த வண்ணம் நாவல் வளர்கிறது. குறிப்பிட்ட இலக்கையோ முடிச்சையோ மையப்படுத்தாது சித்தனின் பால்யம் தொடங்கி முதுமை வரை அவர் வாழ்வின் சுவையான கனமான நிகழ்வுகளை அவனது குடும்பத்தை, சுற்றத்தை, நண்பர்களை குறித்து பேசி செல்கிறது இந்த நாவல்.
சினிமா பாடல்கள், நவீன சாதனங்களின் வருகை நகரமயமாதல், தமிழ் சிங்கள பிரிவினைகள், தமிழ் சாதி பிரிவினைகள், ஈழப்போர் என எளிய கலாச்சார விஷயங்களில் தொடங்கி தீவிரமான சூழலில் நிறைகிறது சித்தன் சரிதம்
நாவலின் மிகப்பெரிய பலம் ஈழத்தமிழ் வழக்கும் நடையும் , அதற்கு ஈடு கொடுக்கும் வகையில் அமைந்துள்ள புறக்காட்சிகளின் விவரிப்பும். கிட்டத்தட்ட பெரிய இலக்கு இல்லாத திசை இல்லாத சுயசரிதத்தன்மை உடைய இந்த நாவலின் கலையம்சம் கூடி வந்தமைக்கு காரணம் மேற்கூறிய இவ்விரண்டு விஷயங்களே.
நிகழ்வுகளை உயிர்ப்புடன் பதிவு செய்யவே நாவல் முயல்கிறது, மேலதிகமாக போர் சூழல் குறித்தோ சரிதவறு சார்பு நிலை விவாதங்களுக்குள் நாவல் செல்ல மறுக்கிறது. ஈழப்போர் ,சித்தனுக்கும் அவரை போன்றவர்களுக்கும் ஏற்படுத்தும் பாதிப்புகள் ஒரு தொடர் நிகழ்வாக அவர்கள் வாழ்வில் பிரிக்க முடியாத ஒரு அம்சமாகி விடுகிறது. போர் குறித்த தர்க்கங்களுக்குள் புகமால் போரின் தாக்கத்தை சமாளிக்க ஒவ்வொரு குடும்பமும் மேற்கொள்ளும் பிரயத்தனத்தை யதார்த்த எல்லையிலேயே நாவல் விசாரிக்க முயல்கிறது. போரின் காரண காரியங்கள் நாவல் கதை மாந்தர் தம் உணர்வு உலகிற்கு அப்பால் எங்கோ யாரோ முடிவு செய்ய, ஒவ்வொரு குடும்பமும் தன்னால் ஆனதை செய்து தினப்படி வாழ்வை எதிர் கொள்கிறன. நாவலில் மூன்றாம் பகுதி மிகுந்த கலை அமைதியுடன் அமைந்திருக்கிறது. இயற்கையை எதிர்காலத்தை நம்பியே இக்குடும்பங்கள் தங்கள் பயணங்களை தொடர்கின்றன.
முழு நிலவில் இரவில் பட்டத்தை சித்தன் காண்பதும், தென்மராச்சியில் சட்டென திரும்பிய கூட்டு வாழ்க்கை முறையை சித்தன் உணர்வதும், சோழகம் குறித்த துவக்க குறிப்பும், சோழகம் குறித்த நாவலின் நிறைவு வரியாக அம்மா கூறுவதும், கண்ணை விலக்காது சித்தன் நிலவில் முழுகிய நிலப்பரப்பை காணும் இடங்களும் என்றும் நினைவில் இருக்கும். நிலவும் பாடல்களும் புத்தகங்களும் உடலுழைப்பும் போதுமே வேறென்ன வேண்டும்.