குமாஸ்தா
ஆதியிலிருந்து, இருந்து வரும் இவ்வுலகத்தை ஒட்டுமொத்தமாக நினைத்துப் பார்க்கையில் பஞ்ச பூத இயற்கை சக்திகள் தவிர அனைத்து விஷயங்களும் தோன்றி, சில காலம் நீடித்து, மறைந்து கொண்டே இருப்பதை நாம் ஓரளவு உணர்ந்தே இருக்கிறோம். இருப்பினும் இருக்கும் வரை நான் எனது என்று சொந்தம் கொண்டாட அனுபவிக்க அச்சம் காரணமாகவோ தேவை காரணமாகவோ வித விதமான விஷயங்களை நாம் உண்டாக்கி வைத்துள்ளோம். அச்சத்திற்கும் தேவைக்குமான அல்லாட்டத்தை நாம் குமாஸ்தாவின் குழப்பத்தோடு அணுகுகிறோம். நம் குமாஸ்தா முஸ்தீப்புகள், பூமி தொடங்கிய நாள் முதல் நம் வாழ்வோடு பிணைந்துள்ள மண்ணின் தொடர்பை வலுவிழக்க செய்கின்றன. மண் பொம்மைகளான நம்மை பொன் பொம்மைகள் என உணர செய்கின்றன. குமாஸ்தாவின் கூட்டலும் கழித்தலும் பிரித்தலும் வகுத்தலும் என்பதான சிடுக்கான கணக்குகள் எளிய தர்ம உண்மைகளிடம் இருந்து நம்மை வெகு தூரம் அழைத்துச் சென்று விடுகின்றன. முதல் மகன் பர்ஜு பதான் தனது தந்தை விட்டுச் சென்ற தர்மத்தின் வலிமையை உணர்ந்து, முதல் படியாக, குமாஸ்தா உணர்வை துறக்கிறான்.
இரண்டாவது மகன் சக்டி, அனுபவிக்க பிறந்தவன். தான் அனுபவிக்கும் அனைத்திலும் மிதமான திருப்தியும் அநேக நேரங்களில் தீர்ந்து விடும் என்கிற அச்சம் காரணமாக இன்னும் இன்னும் என்று கோரும் மனிதன்.வணிகர்களின் எடுப்பார் கைப்பிள்ளை.அகந்தையின் நான் என்னும் உணர்வின் வடிகால் வடிவம் அனைத்தும் அறிந்ததான ஒரு இறுமாப்பும் ஏமாந்து விட போகிறோம் என்கிற அச்சமும் கொண்ட நுகர்வோன் சக்டி.
மாமனிதன்
தந்தை சொல்லி உணர்த்திய தர்மம், தாய் காட்டிய கருணை, இவ்விரண்டும் எப்போதும் இப்பூமியில் இருந்து கொண்டே இருக்கும் விஷயங்கள். எனது உனது என்று பிரிக்க முடியாத இந்த தர்மத்தை உணர்ந்தவன் பர்ஜு. தன் மௌனத்தின் வழி, அமைதியின் வழி தனது வைராக்க்கியத்தை கூர் தீட்டிக் கொள்கிறான். தன் பொருட்டோ பிறர் பொருட்டோ என்றில்லாது என்றும் உள்ள பிரிக்க முடியாத தர்மத்தின் பொருட்டு அவன் வைராக்கியம் மிளிர்கிறது. அவ்வொளியில் அவர்களையும் அறியாது பர்ஜுவின் மனைவியும் ஊர் மக்களும் திடமான மனமாற்றம் அடைகின்றனர். சற்று தாமதமாக நுகர்வோனும் வந்து சேருகிறான். தீமையை விட்டு சற்றே விலகி நின்று தீமை என்னும் மாயை மறையும் என்ற வைராக்கியத்தோடு வலம் வருகிறான் பர்ஜு.மின்னும் மண் பொம்மை பர்ஜு.
காளிந்தீசரண் பாணிக்ராஹி எழுதி 1934 ல் வெளிவந்த ஒரிய மொழி நாவல். ரா வீழிநாதன் இந்தியில் இருந்து தமிழுக்கு மொழிப்பெயர்த்திருக்கிறார்.சாகித்திய அகாதெமி வெளியீடு. 1966 ல் மிருணாள் சென் இயக்கத்தில் படமாக வெளிவந்துள்ளது.