நிகழ்வுகளின் வேடிக்கை மற்றும் உயிர் நிறைந்த சம்பவங்கள் இரண்டும் அமைந்த புற சூழல் இந்த கதைகளின் உள்ளே நுழைய நம்பகமான வாயில் தோரணங்களாக அமைந்திருக்கின்றன.
நுழைந்து நோக்குகையில் ஒப்பு கொள்ளவே இயலாத வலிகளின் நிழலில் கதையின் மாந்தர்கள்.
அத்தனை வலியையும் எப்படியோ சுமக்கும் மனிதர்களின் கேள்விகளுக்கு பதில்கள் இல்லை.
இப்படியும் நடக்கிறது என்பதே தாங்க முடியாத ஒன்றாக இருக்கிறது, அனைத்து மனிதர்களும் எதிர் கொள்ளும் இழப்போ வலியோ இல்லை இவை. கதை மாந்தர்களின் சொந்த தவறான வினைகளின் விளைவுகளும் அல்ல இவை, காலம் தேர்ந்தெடுத்து இந்த சுமைகளை அவர்களுக்கு வழங்கி இருக்கிறது.
கேவல்களுடன், அதியுச்சி விளிம்பின் எல்லையில் நின்றுக் கொண்டிருக்கும் அவர்கள்.
அவர்களின் இருட்டு நிழலுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ காரணமாய் அமைந்த மனிதர்களின் சித்திரங்களும் கதைகளில் வருகின்றன. இவர்களுக்கு நம் காதை அடைக்கும் நியாயங்கள் ஏதேதோ இருக்க கூடும்.