Thursday, January 18, 2018

BOX கதைப் புத்தகம் - ஷோபா சக்தி

BOX கதைப் புத்தகம்  - ஷோபா சக்தி

போர் சம்பந்தப் பட்ட நாவல்களைப் படிக்கும் போது இயல்பாகவே ஒரு பயம் வந்து விடுகிறது. நாம் நாளிதழ்களில் படித்து கேள்விப் பட்டதை விட உண்மை விஷயங்கள் மிக  தீவிரமாக நேரடித் தன்மையோடு விவரிக்கப் பட்டிருக்கும். ஓரளவுக்கு மேல் நம்மால் ஜீரணிக்க முடியாத படிக்கு விஷயங்கள் நடந்திருக்கும். இருந்தும் ஒரு வாசகன்   திரும்ப திரும்ப இவ்விலக்கியங்களை  ஏன் நாடுகிறான் ? இந்தக் கொடூர அவல சூழலில் இருந்து உணர்ச்சி கொப்பளத்திலிருந்து மேலே எழுந்து வருவது நாவலாசிரியனின் தெளிவான கோணம் - புதினம் அளிக்கும் மாற்று வரலாறு -  புதினம் அளிக்கும் சாத்தியங்கள். புதினம்  எதுவும் நடந்த விஷயங்களை மாற்ற வல்லவை அல்ல. ஆனால் இப்படி எதாவது ஒன்று நடந்திருந்தால்  அதற்கான சாத்தியங்கள் இருந்திருக்கிறது  - இத்தகைய பேரழிவு ஓரளவேனும் மட்டுப் பட்டிருக்கும் என்னும் சாத்தியம் தான் வாசகனை அலைகழிக்கிறது. இன்று அவன் இந்த நாவலைப் படித்து கொண்டிருக்கும் சொகுசும் அமைதியும் எப்பேர்பட்ட வரம் என்று நினைவுறுத்துகிறது.  இந்த சாத்தியங்கள் இன்றைய சூழலில் போருக்குப் பின் மீண்டும் தவறுகள் இழைக்க வேண்டாம் என்று  இறைஞ்சுகிறது.   இந்த சாத்தியங்களை அறியவே   மீண்டும் மீண்டும் இவ்விலக்கியங்களை வாசகன் நாடுகிறான்.

குற்றப்பத்திரிக்கையின் நகல் அல்ல இலக்கியம். இன்னொரு முத்திரை விழும் - கோழைத்தனம் என்று - இந்தப் புதினம் அதை எளிதில் தாண்டுகிறது. எண்ணிலடங்கா எளிய மனிதர்களின் வாழ்க்கை குறிப்புகள் கொண்டது இந்தப் புதினம்  - அவற்றின் சரிசமமாக  வாதப் பிரதிவாதங்களுக்கும், சித்தாந்தங்களுக்கும்,போரின் வெற்றி தோல்வியும் வைக்கப் பட்ட தராசு. புனைவிற்கும் அபுனைவிற்குமான இடைவெளியை இந்த நாவல் குறுக்குகிறது. அல்லது குறுக்குவது போன்றதொரு பாவனை செய்கிறது. இந்த குறுகிய இடைவெளி நாவலின் நம்பகத்தன்மையை கூட்டுகிறது.

நாவலின் வலைப் பின்னல்  ஒரு வகையில் அசாதாரணமானது.  முதல், இரண்டாம் உலகப் போர்   தொடங்கி இன்று வரை நீளும் கற்குவியல் இடையே புதைந்த வாரத்தைகளை தேடி எடுக்க முயல்கிறது. பாரிஸ் நகர வெள்ளை ஆலயம் தொடங்கி வன்னி கிராமத்தின் அண்ணமார் சாமி வரை கதை நீள்கிறது.

Forbidden Games  என்றொரு திரைப்படம் உண்டு   Rene Clement இயக்கியது. போர் குழந்தைகள் இடத்தே ஏற்படுத்தும் தாக்கத்தைப் பற்றியது. அவ்வகையில் BOX கதைப் புத்தகத்தில் சில அத்தியாயங்கள் உண்டு. குழந்தைகளும் சிறுவ சிறுமியர் விளையாடும் விளையாட்டுகளின் விவரிப்பு அடங்கியது. புனைவா நிஜமா என்ற சொல்லமுடியாத  ஒரு எல்லையில் நின்று  வாசகனை தத்தளிக்க வைக்கிறது. பல்லாங்குழி விளையாட்டு  ஒரு வகையில் சமூக ஏற்ற தாழ்வுகளை கடந்து செல்ல அல்லது இயல்பிலேயே ஜீரணிக்க உதவுவதாய் படித்திருக்கிறேன்.

அனைத்து ஷோபா சக்தியின் கதைகள் போலவே தனி மனித ஆசைகளுக்கும் கனவுகளுக்குமே இந்தப் புதினம் முக்கியத்துவம் அளிக்கிறது. தேசத்தின் வரலாறோ சித்தாந்தத்தின் வெற்றியோ, இனத்தின் குரலோ பிற்பாடு வருவது தான்.  அதே போல் ஈழப் போரின் பேரழிவிற்கு பின் தனி மனித விழுமியங்கள் வீழ்ச்சி அடையாது சக மனிதன் பால் இன்னும் அன்பு சுரக்கும் ஒரு எளிய கிராம மக்களின் சித்திரம் கிடைக்கக் பெறுகிறது. கரிய நிழலாக உடல் உறுப்புகள் இழந்த  கைவிடப் பட்ட நோய் வாய் பட்ட குழந்தைகள் ஆண்கள் பெண்கள் நிலை அரசு ஆதரவுடன் சர்வேதேச மாபியா கும்பல்களால்  சுரண்டப் படுவதின்  அவலச் சித்திரம்.

சுற்றிச் சுற்றி தான் கூறி இருக்கிறேன். மையக் கதையை போட்டு உடைப்பதில் விருப்பம் இல்லை. வார்த்தைகள்,  இலக்கியவாதிகளால் கூட அள்ளி தெளி க்கப் படும், தனிப்பட்ட நிகழ்வுகள் பொதுமைப் படுத்தப் படும்  சமூக  வலைதள சூழலில், BOX கதைப் புத்தகம் தான் தேர்ந்தெடுத்த வடிவத்தின் வழியாகவும்  அளவான வார்த்தைகள் வழியும்  எளிய மக்களின் வரலாறை பதிவு செய்திருக்கிறது.  













1 comment:

UI UX Studio Delhi said...

Very attention-grabbing diary. lots of blogs I see recently do not extremely give something that attract others, however i am most positively fascinated by this one. simply thought that i'd post and allow you to apprehend.