Sunday, December 27, 2020

புது வீடு புது உலகம் - கு அழகிரி சாமி

கு அழகிரிசாமி அவர்களின் இந்த நாவல் முதலில் சுதேசிமித்ரனில் தொடராக வந்து 2018ல் தான் முதல் முறையாக நாவலாக வெளிவந்துள்ளது. மிகக் குறைந்த புற விவரிப்புகளுடன் மன ஓட்டங்களுக்கும் நிகழ்வுகளும் நிறைந்த பெரிய நாவல். குடும்பத்தின் வறிய பொருளாதார சூழல் அழுத்தம் காரணமாக பணம் சம்பாதிக்க சரி மற்றும் தவறான வழிகளுக்கு இடையேயான போராட்டம், தனிப்பட்ட ஒருவனின் லட்சியம் குடும்பத்தில் ஏற்படுத்தும் பாதிப்புகள், லட்சியவாதத்தின் நடைமுறை செல்லுபடி எனும் தளங்களில் நாவலை பொருத்திப் பார்த்து வாசிக்க வாசகனுக்கு வாய்ப்பிருக்கிறது, நாவலின் இலக்கிய உட்பிரதி குறித்து நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய இம்மூன்றுமே. ஜெயகாந்தன் அவர்களின் அக்னிபிரவேசம் அ சிலநேரங்களில் சில மனிதர்கள் கதையை இணைத்து வாசிக்கத் தகுந்த படைப்பு புது வீடு புது உலகம் - ஜெகே அவர்களின் ஆர்பாட்டமான மொழியில் அமைந்த சிலநேரங்களில் சில மனிதர்கள் நாவலின் முன் சன்னமான குரலில் ஆனால் அதே தளத்தில் அமைந்துள்ளது புது வீடு புது உலகம் நாவல், தனிப்பட்ட ஒருவனின் சுதந்திரத்தை மட்டும் மையப்படுத்தாது சரி தவறு என்ற மனப்போராட்டத்தின் வீச்சையும் , லட்சியவாதம் மீண்டும் மீண்டும் வந்து சீண்டும சலிப்பான இடங்களையும் தொட்டு செல்கிறது.

No comments: