பரிச்சயம்
குள்ள சித்தன் சரித்திரம் மற்றும் கனலி இதழில் வெளியான "அடையாளம்" சிறுகதையும் யுவன் அவர்கள் பெயர் கூறியவுடன் என் நினைவுக்கு வருவது. குள்ள சித்தன் சரித்திரம் வாசித்து ஆண்டுகள் பல ஆகிவிட்டன. அடையாளம் தற்போது வாசித்ததால் அல்ல கதையின் சம்பவங்களின் வீச்சு இன்றளவும் நினைவில் நிற்கும் விதமாக அமைந்திருப்பது. யாவரும் பத்தாண்டு விழாவில் சமகால எழுத்தாளர்களின் எழுத்தில் கூர்மை குறைந்து வருவது குறித்து யுவன் கூறத் தொடங்கி முழுமையாக கூறுவதற்கு முன் உரையை முடித்தார். விகடனில் டிசம்பர் முடிவில் ஒரு பேட்டி புகைப்படம் கண்டு பேட்டியை படிக்காமல் வழக்கம் போல் ஒரு scroll, புதிய நாவல் குறித்து எதிர்பார்ப்பை குறித்து கூறியிருந்தார். பரிசல் புத்தக கடையில் அற்புதமான அட்டையுடன் எண்கோண மனிதன் புத்தகம் கண்ட போது வாங்காமல் இருக்க முடியவில்லை. யுவன் அவர்களை வாசித்து நாளாகி இருந்தது. எல்லாம் அமைய வாசித்தும் முடித்தது மகிழ்ச்சி.ஏனினில் மோஸ்தருக்கும் ஆசைக்கும் வாங்கிய புத்தகங்கள் அநேகம். அவற்றையும் படிக்க வேண்டும்.
எண்கோண மனிதன்
தேடப்படுபவர் - இவரும் வேறொன்றை தேடுபவர் , தேடுபவர், தேடுபவர் கூறியதை தொகுத்தவர் - இவரும் ஒரு வகையில் தேடுபவர் , இம்மூன்று ஆளுமைகளை மையமாக கொண்டு தேடப்படுபவர் குறித்த சித்திரம் மெல்ல எழும் துப்பறியும் கதையை போன்ற ஆனால் அதனினும் ஆழமான பூடகமான முழுமையான கதையாக விரிகிறது எண்கோண மனிதன். தேடப்படுபவர் குறித்த நிகழ்வுகளை மனப்பதிவுகளை அன்சாரி தொடங்கி விசாலாட்சிச் சித்தி வரை துணை கதாப்பாத்திரங்கள் கூறக் கூற நாவல் முடிகிறது. அடுத்தடுத்த அத்தியாயங்களில் இக்கதப்பாத்திரங்கள் என்ன கூறத் போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பும் சுவாரஸ்யமுமே நாவலை வாசிப்பதற்கு தொடர் உந்துதலாக இருக்கிறது. தேடுபவர் தொகுத்தவர் பின்னொடு நாமும் கால ஊஞ்சலில் முன்னும் பின்னும் பயணிக்கிறோம்.
வாசிப்பு
நாவலை வாசிக்கையில் உட்கிடக்கையாய் தோன்றிய விஷயங்கள்- தேடலின் இயல்புகள், தப்பித்தல் மற்றும் கச்சிதமும் வரலாறும்
தேடலின் இயல்புகள்
கலைத்தேடல் என்று வைத்தோமானால் தேடுபவர் தேடப்படுபவர் இருவருமே தேடல் பயணத்தில் அமைந்திருந்தாலும் இருவருக்கும் இடையே வேறுபாடு உள்ளதா என்னும் கேள்வி, இயல்பிலேயே ஒரு கலை ஆளுமையாக உள்ளவனும் , கலையின் பால் ஈர்க்கப்பட்ட தன்மையான பாமரனுக்கும் என்ன வித்தியாசம் , அவர்கள் இருவரின் தேடலும் வெளிப்பார்வையில் ஒன்று போல் இருந்தாலும் ஒன்று இல்லை என்று நாவலை வாசிக்கையில் தோன்றியது. கடலை காணாதவர்கள் மத்தியில், கடலில் குளிப்பவனுக்கும் கடலில் முழுகி மறைபவனுக்கும் வித்தியாசம் தெரியுமா என்ன ? சில நேரங்களில் தேடுபவன் கரையில் நின்று கால் நனைப்பதோடு சரி, சம்பந்தமூர்த்தி மாமாவும் தொகுக்கும் கிருஷ்ணனும் கடலின் எந்த எல்லையில் இருக்கிறார்கள் ? இருவரின் தேடலின் முடிவு எவ்வாறாக அமைந்திருக்கிறது என்பதே இந்நாவலின் முக்கியமான உட்கிடக்கை.
தப்பித்தல் - Evasion (வாசிப்பவனுக்காக)
காலக்கண்ணடி புத்தகத்தில் இது குறித்து வாசித்ததுமே அதன் அர்த்த அனர்த்தத்தில் மனம் அல்லாடுகிறது. நிகர் வாழ்வு போதாமல் இருக்கையில் அல்லது நிகர் வாழ்வு சலித்து தேடி தப்பித்து உள்நுழைபவன் அதே தளத்தில் வேறொரு பரிணாமத்தில் தேடலில் இருப்பவன் கையைப் பற்றுகிறான். இருவேறு உலகில் இருப்பினும் சேர்ந்தே தட்டாமலை ஆடுவது போல் இருக்கும் தோற்றம். சம்பந்தம் மூர்த்தி அவர்களின் தப்பித்தலின் ரிஷி மூலம் குறித்த மெல்லிய திறப்பு நாவலின் ஒரே இடத்தில் மட்டும் வருகிறது. சோமன் தப்பி தப்பி சென்ற இடங்களை பின் தொடர்ந்து செல்லும் சம்பந்தம் சோமனை பற்றி மேலும் மேலும் அறிந்து கொள்கையில் எவ்வளவு தூரம் இது சம்பந்தம் அவர்களின் தேடலுக்கு உறுதுணையாக இருக்கிறது என்பதே நாவலின் மற்றுமொரு முக்கியமான தளம்.
கச்சிதமும் வரலாறும்
நாவலை கச்சித்தப்படுத்த முயற்சி செய்தது போன்றும் அவ்வாறு செய்யாத இடங்களை குறித்தும் யுவன் அவர்களே பதிவு செய்திருக்கிறார். குறிப்பாக நாவலின் நிகழ்வுகளின் கால நிர்ணயம் குறித்த அவரது பிரயத்தனம் வாசகனுடன் சிறிய விளையாட்டை விளையாடுகிறது. நினைவுகளின் தொகுப்பு விளையாட்டில் வாசகன் தேர்ந்தெடுக்க வேண்டியது எதை ? என்றோ நடந்த நிகழ்வுகளின் துல்லியமான இன்றைய சித்திரத்தையா அல்லது அந்நிகழ்வுகளின் கச்சிதமான வரிசைக் கிரமத்தையா ? வரிசை கிரமும் புனைவாக இருக்க வாய்ப்புள்ளவை தானே ? புனைவில் உண்மையே இல்லாது போக வாய்ப்பில்லை இல்லையா ? காலம் தாண்டி உட்பொருள், வடிவம் இவற்றின் கச்சிதம் நவீன நாவல்கள் தானாக தங்கள் தலையில் என்றோ ஏற்றிக் கொண்ட விஷயங்கள், இந்நாவல் அந்த வகையிலும் கொஞ்சம் இறுக்கம் தவிர்த்து அதே நேரத்தில் அலைபாயாது ஒரு தேடலின் கதையை தொகுத்திருக்கிறது.
No comments:
Post a Comment