கடவுள் அவ்வளவு பிஸி இல்லை மனிதன் தான் பிஸி. அவனுக்கு செய்வதற்கு நிறைய வேலைகள் உள்ளன இதன் நடுவே அவன் எப்படி நேரில், கடவுளைப் போய் சந்திப்பது, இது ஓரளவுக்கு புரிந்து கொள்ளக் கூடிய விஷயம்.
மனிதன் பிஸியாக அப்படி என்ன செய்கிறான், அவனுக்கு நிறைய வேலைகள் இருக்கும் , அங்கும் இங்கும் அலைவது, சும்மா அமர்ந்திருப்பது, பணம் கிடைத்தால், செலவு செய்வது, சேர்த்து வைப்பது. இல்லையேலில்லை. அது சரி, அவன் எல்லா காலத்திலும் இப்படி இல்லை, இப்போது தான் கொஞ்ச வருடங்களாக.. மத்திம வயதை கடக்கையில் இப்படி ஆகிவிட்டது. கடந்த காலம் நகுலன் கூறியது போல் ஒரு இடமாக கூட இல்லை, இவன் அளவில் காலம் ஒரு புள்ளி போல் ஆகிவிட்டது, புகை மூட்டத்தில் ஒரு புள்ளி போல். எதிர்காலம் பற்றிய கவலைகள் குறித்து நீங்கள் கேட்கலாம், ஆனால் இவன் கொஞ்சம் ஞாபகமறதிக்காரன். எதிர்காலத்தை நினைவில் இருந்து மீட்க மறந்தவன். இப்படி முன்னதையும் பின்வருவனவற்றையும் இழந்த அவன் இன்று பிஸியாக இருக்கிறான். இப்படி இன்றை மட்டுமே கவனத்தில் கொள்வதால் இவன் ஒன்றும் தன்னை ஆன்மீக புலி என்று கருதுவதில்லை. ஆனால் சர்வ அலட்சியமாக ஒரு தினத்தில் இருந்து இன்னொரு தினத்துக்கு பொதியின்றி செல்கிறான். இப்படி கூறலாம்.. "காலத்தைக் கரைத்து குடித்தே விட்டான். .. முனைப்பின்றி நாகரீகத்தின் படிக்கட்டில் அவன் அமர்ந்திருக்கிறான்.." அனாவசியமான பெரிய வார்த்தைகள். பொருட்படுத்தாதீர்கள்.
ஞாபகமறதிக்காரன் என்றாலும் கொஞ்சம் ஞாபகம் மீதி வைத்திருப்பவன். அதற்கு காரணம் கடவுளின் அத்தனை அற்புதங்களும் அவனுக்கு ஒன்றன் பின் ஒன்றாக புலப்படுவது தான். மத்திம வயதில் புகை மூட்டத்தில் இருக்கும் ஒருவனிடம் கடவுள் தன் அற்புதங்களை நிகழ்த்திக்காட்டியபடி இருக்கிறார்.
இவன் பிஸி என்பதால் கடவுளை நேரில் சந்திக்க வாய்க்கவில்லை. ஞாபக மீதி நினைவூட்ட சந்திக்க முயன்றான். ஆனால் ஆயிரம் வேலைகள். பிழைப்பு, காதலிகள், நண்பர்கள், மது,மாது அலைவது, அமர்ந்திருப்பது. இப்படி பல முக்கியமான வேலைகள்.இதன் நடுவே அவன் எப்படி கடவுளைச் சந்திப்பான்.. ஆனால் முயன்றான். கடவுள் அவனுக்கு அளிக்காத, மத்திம காலம் அவனுக்கு அளித்த, புகைமூட்ட பிரக்ஞையை அவன் விரும்பியிருந்தான் என்றே தோன்றுகிறது.ஆனால் கடவுளைப் பாருங்கள், நேரில் வராவிட்டாலும், நல்லெண்ணத்துடன் தனது அற்புதங்களை,அவனை சீண்டியபடி நடத்திக் கொண்டிருந்தார்.
கடவுள் தான் பிஸி இல்லையே, அவர் நேரில் வரவேண்டியது தானே? அவரும் வரவில்லை. இல்லை வந்தார் அல்லது வந்ததாக இவன் புரிந்து கொண்டான். அப்படியான தருணத்தில், அவனிடம் இருந்தவை மீதமிருந்த நினைவின் இரண்டு மலர் மொக்குகள். அவற்றைக் கூட கடவுளுக்கு கையளித்து விட்டு நினைவழிந்து நல்லபடி மறைந்தான். அது நல்லதொரு மரணம். சித்திரகுப்தனின் ஏட்டில், நினைவின் சித்திரங்கள் ஏதுமற்று ஒரு பக்கம் காலியானது இப்படித்தான். பிரார்த்தனை தொடங்குகிறது. பிறவாமை வேண்டும்.
No comments:
Post a Comment