வனம் திரும்புதல்
, சிறுகதை தொகுப்பு
வாசித்தேன், மிகவும் நிறைவான
ஒரு வாசிப்பு அனுபவத்தை வழங்கிய புத்தகமாக எனக்கு அமைந்தது, கதைகள் மொத்தத்தையும் சேர்க்கும் அடிப்படை சரடுகளையும் ,
தனித்தனி கதைகளின் விநோதங்களில் நான்
ரசித்தவற்றையும் கூறவே இந்த பதிவு.
கதைகளை ஒட்டுமொத்தமாக வாசிக்கையில் மூன்று விஷயங்கள் பெரும்பாலான கதைகளில் அமைந்து வந்துள்ளதாக தோன்றியது, 1) அடிப்படையில் வாழ்வை துய்க்க மகிழ்ச்சி நாட்டம் 2) அடிப்படையில் அனைத்து செயல்களிலும் பொதிந்துள்ள அறம் சார்ந்த ஊடாட்டம் 3) தினப்படி வாழ்வை எளிதாக்கும் பகடியும் எள்ளலும் - இம்மூன்றும் கதைகளை விவரிக்கும் விதத்திலும் கதைகளின் உள்ளடக்கத்திலும் கூடி வந்துள்ளன - எந்த ஒரு மனிதனின் வாழ்விற்கும் இம்மூன்றும் அடிப்படையாக இருக்க சாத்தியமான ஒன்று, பகடி தமிழ் நல்லுலகில் பெரும்பாலும் பிடி மாட்டாது போனாலும் , இம்மூன்றும் ஒரு மனிதனுக்கு அமைகையில் அவன் ஆளுமை குறைந்த பட்சம் சிறப்பானதாக இருக்கும்.
எனக்கு மிகவும் பிடித்த கதைகளாக காலச்சிமிழ், வனம் திரும்புதல், மனைமோகம் இம்மூன்றையும் கூறுவேன்
தனிக்கதைகளையும்
அதன் தனிப்பட்ட அழகுகளையும் தாண்டி , நிலங்கீழ்வீடு, Galle Face Hotel, மனைமோகம்,இராணுவத்தில்
சித்தார்த்தன், கதைகள் அதன் வெளிப்படையான உட்பிரதி / உள்ளடக்கம்
காரணமாக இணைத்து வாசிக்க வேண்டிய கதைகளாக தோன்றின . இக்கதைகளில் என்னை
கவர்ந்தவை Galle Face Hotel - கதையில் வன்முறை அறவே இல்லாதது, மனை மோகம் கதை ஒரு Existenalist திரைப்படத்தின் உள்ளடக்கத்தை போல் இருந்தது,
ஒரு தேர்ந்த இரானிய திரைப்படத்தை பார்த்தது
போல் இருந்தது, Leila's Brothers என்ற ஈரானிய
திரைப்படத்தை நீங்கள் கண்டிருப்பீர்கள்.
Donner Wetter, தாயுமானவள்,மாயத்தூண்டில் கதைகளில் நமக்கு ஐரோப்பா அதன் பன்முகங்களில் அறிமுகமாகிறது
ஓடுகாலித் தாத்தா , மேகா அழகிய மனைவி, வடிவான கண்ணுள்ள பெண் , ஜிமிக்கி ஸ்பெஷலிஸ்ட், சோபிதாவிற்கு பெர்லின் காட்டுதல் - ஓடும் நதி - இவ்வாழ்வில் நம்மை நாமே பரிசீலிக்க, புரிந்து கொள்ள, வெகு சில வாய்ப்புகளே அமையும் அவ்வகையான தருணங்களின் உணர்ச்சி நிலைகளை இக்கதைகள் கையாள்கின்றன, சிட்டிகை உப்பு போல் குறைந்தாலும் சிரமம் , இல்லையென்றாலும் சிரமம், உதவி செய்வது பலனை எதிர்பார்த்தா ? பெண்ணின் அழகு ஒருவர் மட்டுமே ரசிக்க வேண்டும் என்கிற விதி எவ்வெல்லை வரை செல்லும் ? ஏமாற்றுபவனே ஏமாறும் போது நம் நிலைப்பாடு என்ன ? சொந்த வாழ்க்கையின் சுகம் முக்கியமா ? சுகம் குறைத்து குடும்பத்தை காப்பாற்றுவது முக்கியமா ? லௌகீக பொறுப்பில்லாமல் புத்தகம் படிப்பவர் நல்லவரா கெட்டவரா ? - எவற்றிற்கும் எளிதான விடை இல்லை, எள்ளலும் பகடியும் மின்னும் இந்தக்கதைகளில் குறிப்பாக " சோபிதாவிற்கு பெர்லின் காட்டுதல் மற்றும் மேகா அழகிய மனைவி கதைகளின் வரிகள் வெடித்து சிரிக்க வைத்தன அதே நேரத்தில் சிந்திக்கவும் வைத்தன.
காலச்சிமிழ் மற்றும் வனம் திரும்புதல் இவ்விரண்டு கதைகளின் வடிவங்கள் புதுமை - நன்று. இவை ஒட்டுமொத்த வாழ்வின் தாங்க முடியாத நினைவுகளை சுமந்தபடி அமைந்துள்ள கதைகள், மீண்டும் மீண்டும் எண்ணிப் பார்க்க வைக்கும் வரிகளை கொண்ட காலச்சிமிழ் கதையின் தெளிவு ஒரு எழுத்தாளனின் வெற்றி என்றால் வனம் திரும்புதல் சீறி அலையும் அத்தனை திசைகளும் மிக நுட்பமானவை - நகரத்தின் அலைவில் ஒரு நாள் முடிந்து திரும்பும் சித்திரம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது - ஹீலியம் தயவில் ஒட்டு மொத்த நினைவுகளும் வந்து முகில்களாக சுற்றி சுற்றி வரும் போதும் தெரியும் நகர மின்மினி காடுகளை நான் உணர்ந்திருக்கிறேன்.
ஹீலியம் உபாசனை நன்று, அதை விட நன்று நங்கையர்களின் ஒளிர் விடும் கண்கள், அதை விட நன்று அறிந்திராதவர் அளிக்கும் அணுக்கம் , அதை விட நன்று இந்த ஆசைகள் நினைவுகள் அனைத்தும் நகுலன் கூறியது போல் ஒரு புள்ளியாய் தோன்றும் வனம் திரும்பும் நாட்கள்.
No comments:
Post a Comment