கடக்க இயலாத ஆற்றின் நெடுகே நான்கு அருவிகள்.
காடு விட்டு நாம் அகன்றது ஒருவழிப் பாதையோ ?
என்றோ நாம் அடைந்த மாபெரும் மாளிகை, இன்று பிரமயுக பாழில் மிளிர்கிறது.
சிறிய விளக்குகளின் துணை கொண்டு மரணத்தை அறியும் விளையாட்டை,
சூழ்ச்சியும் ஆர்வமும் கலந்த மயக்கத்தில் நாம் விளையாட துவங்கினோம்.
காலம் தோறும் நாம் பணயம் வைக்க உடலுண்டு, உடைமையுண்டு, பிரம யுகத்தில் நம் நேரமும் உண்டு.
வெளியேற முடியாத இவ்விளையாட்டில் பிரமயுக விதிப்படி
இறைஞ்சும் கீதங்களின் மன்றாடல் கடவுளுக்கு கேட்பதில்லை,
நியமங்களுக்கு பலனில்லை,
பிரர்த்தனைகளுக்கு அர்த்தமில்லை,
சூரியன் பகல் கனவில் வரும்
ஊழிக்கால மழைகள் ஓய்வதில்லை.
கள்ளின் வழி பழைய நினைவுகள் நம்மை கடந்த பொற்காலங்களுக்கு கொண்டு செல்வதுமில்லை.
கடவுளே இல்லை !
அன்னையரிடம் நாம் மீண்டும் சேரப்போவதுமில்லை.
மாளிகைப் பாழில் இருந்து தப்பிக்க நமக்கு அனுமதியுமில்லை.
**
சிறிது வெளிச்சம் வர காத்திருக்கையில்,
கதைகள் வளர,
ஒளி பெற்ற மன்னன்
மன்னன் வென்ற பூதம்
பூதம் தின்ற மன்னன்
பூதம் காக்கும்
இருண்ட கீழறையில்
அணையா ஒளி
கண்டோம் ! கண்டோம் !
மாளிகையில் இருந்து வெளியேற
பாழில் தீட்டிய திட்டத்தில் பிசகு.
காலாதீத ஒளியை அணைத்து
பூதம் மட்டும் அடைய முயன்றது
மாபெரும் பிழை !
பூதம் தவிர் ! பூதம் தவிர் !
நல்லதொரு அசரீரி !
கேட்பவரில்லை..
தொடங்கியது யுத்தம் !
நெருங்கும் மாளிகையின் அறைகள்
உருளும் மாளிகையின் சுவர்கள்
மறைந்தான் மன்னன்
பதுங்கியது பூதம்.
தொடர்ந்த நீண்ட நெடிய யுத்தத்தில்,
அந்நியர் வந்து புகுகையில்,
வென்றவர் யார் ?
விலகியவர் எவர் ?
எஞ்சுவது எது ?
நீளும் பாழ் ! நெடிய பாழ் !
மிளிரும் பாழ் !
No comments:
Post a Comment