Monday, July 08, 2024

கஸாக்குகள்

 


இரு வேறு வாழ்க்கைகளின் எல்லைகளை படம் பிடித்து காட்டும் நாவல் கஸாக்குகள்.

கூட்டத்தோடு ஒன்றி வாழும் ஒருவன், தனி மனிதனாய் வாழும் இன்னொருவன். இருவரும் பெறுவதும் இழப்பதும் என்ன? இருவரின் மகிழ்ச்சியும் துன்பமும் எதில் இருக்கின்றன ? சக மனிதர்கள் விரும்புவது கூட்டத்தில் ஒருவனையா தனி மனிதனையா ? கூட்டத்தில் இருக்கும் ஒருவனுக்கான நியாய தர்மங்கள் வெற்றி தோல்விகள் ஐயத்திற்க்கு இடமின்றி தெள்ள தெளிவாக வகுக்கப்பட்டு இருக்கின்றன. பெரும்பாலான மனிதர்களுக்கு இவை குறித்து எந்த குழப்பமும் இல்லை. தனி ஒருவனுக்கோ அப்படி இல்லாமல் கூட்டத்தின் இலக்கணங்களை விதிகளை ஏற்று கொள்வதில் ஆயிரம் குழப்பங்கள். அறம் சார்ந்த குழப்பங்கள் இன்பத்தை தள்ளி வைக்கவே வலியுறுத்துகின்றன.ஆனால் இன்பம் தவிர்த்த வாழ்வு அடிப்படையிலேயே தவறான ஒன்றாக மறுக்க முடியாத வகையில் தனி மனம் உணர்கிறது.  இன்பம் நாடாத வாழ்வில் சக மனிதர்களுடன் பகிர்ந்து கொள்ள தனி மனிதனுக்கு என்ன தான் இருக்கிறது, அவனது குழப்பங்களும் தெளிவுகளும் தொடர்ந்து அணிவகுத்து வந்து தனி மனிதனை எங்கே அழைத்து செல்கின்றன ? அவன் கூட்டத்தினருக்கு தேவைப்படக்கூடிய எதைத் தான் செய்வான் ? தனது மன சஞ்சாரத்தின் மனவிகாசத்தின் மனத்திரிபின் முட்டாள்தனத்தின் எல்லைகளை முழுமையாக அறிவானா அவன் ? எதை நம்பி அவன் இன்பத்தை தவிர்க்கிறான் ? வாழாது தப்புவது மட்டுமே அவன் செய்ய வேண்டியதா ? ஏனெனில் முனைப்பின் கூர்முனை செயல்களில் இறங்க அவன் செயல்களின் வேகம் குறித்தும் நிச்சயம் குறித்தும் பயம் கொள்கிறான். எங்கே தனது செயல் ஆணவம் மிக்க சுயநலத்துடன் அழித்தொழிக்கும் இயல்புகளுடனான வகையில் அமைந்து விடுமோ என்ற அச்சத்தில் செயலிழந்து நிற்கிறான். செயல்களின் விளைவுகளை தனது மன சஞ்சாரத்தின் முடிவுகளையும் வாழ்க்கை சாராம்சம் என அவன் கொண்டுள்ள முன் முடிவுகளையும் சீர் தூக்கிப் பார்த்தபடி தொடர்ந்த உழற்சியில் இருக்கிறான். இந்த உழற்சியே அவன் தனி மனிதன் என்பதற்கான ஒரு அடையாளமாகவே அமைந்து இருக்கிறது. உழற்சி சில நேரங்களில் அவனை செயலின்மையில் சென்று சேர்க்கிறது. சில நேரங்களில் கூட்டத்தில் சென்று சேர்க்கிறது. இத்தனைக்கும் பிறகு  தனி மனிதன் பெறுவது தான் என்ன ? அவனது மகிழ்ச்சி எதில் ? தனிப்பட்ட அவனுக்கே உரித்தான வகையில் புலன் தேவைகளை அவன் நிறைவேற்றிக் கொள்வதிலா ? வாழ்க்கை சாராம்சம் குறித்த தனித்த வகைமையில் வாழ்வை நடத்தும் சுதந்திரத்திலா ? உழற்சியை உணர்ந்த ஆன்மீகத்திலா? முனைப்பிலாது அன்புடன் அவன் கூறும் சில சொற்களிலா ? அந்த சில சொற்களையும் தவிர்க்கும் மௌனத்திலா ?தனி மனிதன் பெறுவது தான் என்ன ?

No comments: