அக்கரை சேர பணம் அவசியம் என்பது ஒருவாறு புரிந்து தான் இருக்கிறது, இடையில் வரும் சஞ்சலங்களும் லட்சியங்களும் தீர்வுகளும் பணம் குறித்து அறிந்து கொள்ள உதவுகின்றன.
தனி மனிதன் தொடங்கி மகா பெரிய நாடுகள் வரை பொத்தி பதுக்கி வைக்கப்படும் பணம் அதன் போக்கில் இன்னொரு வழி கண்டு தண்ணீராக ஓடுவதை நாம் பார்த்துக்கொண்டே வருகிறோம்.
பணம் பற்றிய நம் தத்துவ விசாரங்கள் சற்று கலங்கலாகவே இருக்கிறது, பணம் என்றவுடன் நம் மனதில் தோன்றுவது நமது உடனடி தேவைகள், நமது கடன்கள், கூடவே பணம் இருந்தால் நாம் செய்திருக்க கூடிய உதவிகள், பணம் இன்றி நாம் முழுங்கிய அவமானங்கள், பணம் பெற்று தரும் வசதிகள், பணம் என்ற விஷயம் கால ஓட்டத்தில் ஆளுமையாகவோ சொத்தாகவோ பொறுப்பாகவோ அக்கறையாகவோ அன்பாகவோ வெளிப்பட கூடிய பகல் கனவு சாத்தியங்கள், இவை அனைத்தும் ஒன்றோடு ஒன்று முண்டியடித்து நம் எண்ணங்களை பாதிப்பதால் நம் விசாரம் கலங்கலில் முடிகிறது.
பணம் ஈட்ட நாம் மேற்கொள்ளும் முயற்சிகள் பல நேரங்களில் சஞ்சல நிழல்களை தோற்றுவிக்கும் - அப்படியான ஒரு சஞ்சலத்தின் கோட்டு வரைபடம் இந்த குறுநாவல். சஞ்சலம் தீரும் விதமே நாவலின் இறுதிப் புள்ளி.
நாயகனின் மன சஞ்சலத்தில் தொடங்கி எண்ண கலங்கலின் வழி நாம் பயணித்து இறுதியாக அவரது சஞ்சலம் தீரும்படியாக நாவல் முடிகிறது. சஞ்சலம் உதிர்ந்து தீரும் விதம் வாசகனுக்கு ஏற்க முடியாத ஒன்றாக இருக்கலாம் ஆனால் அவற்றில் இருக்கும் உண்மை கசப்பாகவே இருக்கிறது. நாயகன் மட்டுமல்ல வாசகர்களாகிய நாமும் இவ்வகை தீர்வுகளை சில நேரங்களில் அடைந்திருப்பதே நாம் உணரும் கசப்பிற்கு முக்கியமான காரணம்.