இன்றைய நவீன மனிதனுக்கு இணையாக வைத்து நாம் பாரபாஸை காண முடியும்.இரு புள்ளிகளில் இருந்து பாரபாஸ் சென்று அடைய நினைத்த ஒரே இடம் இயேசு கிறிஸ்து. ஒருவரை ஒருவர் நேசியுங்கள் என்று சொன்ன இயேசு கிறிஸ்து. இன்னொருவரின் பாவத்தின் சுமையை சுமக்க சொல்லும் இயேசு கிறிஸ்து.
மிதமிஞ்சிய களியாட்டங்களை விடுதலை உணர்வு மிகுந்த கொள்ளையனான பாரபாஸுக்கு பதில் கிறிஸ்து சிலுவையை ஏற்று கொள்கையில் பாரபாஸ் தடுமாற துவங்குகிறான் . இது முதற்புள்ளி. இனி அவன் பழைய பாரபாஸ் கிடையாது. கிறிஸ்துவை பின்தொடர்ந்து அவரை பின்தொடர்பவர்களை பின் தொடர்ந்து தனது கேள்விகளாலும் அவர்களது விளக்கங்களாலும் எஞ்சிய மௌனங்களினாலும் கிறிஸ்துவை புரிந்து கொள்ள முயல்கிறான். எவ்வளவும் முயன்றும் அவனால் கிறிஸ்துவை முழுமையாக நம்ப முடியவில்லை - பாரபாஸின் அவநம்பிக்கை கிறிஸ்துவின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் எளியவர்களிடம் இருந்து அவனை பிரித்து விடுகிறது. தனது சாத்வீக மனசஞ்சாரங்களில் அவன் அடிக்கடி ஈடுபட்டதால் அவன் தனது பழைய நண்பர்களுக்கும் வேண்டப்படாதவனாக மாறிவிடுகிறான். பாரபாஸ் காணாமல் போகிறான். முதல் புள்ளி முற்றும்.
இரண்டாம் புள்ளி - மீண்டும் தோன்றும் பாரபாஸ் முற்றிலும் வேறு ஒரு சூழலில் இருக்கிறான் - வெளி உலகத்தை காணவே முடியாத சுரங்கத்தில் அடிமையாக இன்னொரு அடிமையுடன் சங்கிலி பிணைப்பில் தனது வாழ்க்கையை வாழ்ந்து வருகிறான். இத்தகைய அடிமை சூழலில் பிணைப்பிலிருக்கும் அடிமையின் நம்பிக்கையை ஒற்றி இயேசு கிறிஸ்து மீண்டும் அவன் வாழ்வில் தோன்றுகிறார். கிறிஸ்துவின் மீட்பு குறித்த அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட தனது இணை அடிமை உடன் இருந்து பாரபாஸ் கிறிஸ்துவை நம்பியும் நம்பாமலும் சுரங்க அடிமை வேலையில் இருந்து மீண்டு, விவசாய அடிமை ஆகி, வீட்டு அடிமை ஆகிறான் - முழுவதுமாக நம்ப முடியாததான தவிப்பு பாரபாஸை அலைக்கழிக்கிறது. மீட்சியையும் இயேசுவின் இன்னொரு வருகையையும் அவன் நம்ப முயல்கிறான் - நம்ப விரும்புகிறான் . ஆனால் முழுவதுமாய் அவனால் நம்ப முடியவில்லை. இத்தகைய தத்தளிப்பான மன நிலையில் இருந்து ஒரு சிறு குழுவின் நடவடிக்கையை பின் ஒற்றி சென்று - கடைசி சிறு ஒளியை கண்டும் காணாமலும் மிகப் பெரிய தீயின் வழியும் கிறிஸ்துவை காண முயன்று இருளில் சென்று மறைந்து விடுகிறான்.
கட்டற்ற களியாட்டம் முதற்புள்ளி. உழைப்பை உறிஞ்சும் கட்டமைப்பான ஒழுங்கு இரண்டாம் புள்ளி . இவ்விரு புள்ளிகளில் தொடங்கி கிறிஸ்துவை நோக்கி நடக்கையில் நம்பியும் நம்பாமலும் அலைக்கழிப்பில் சிக்குண்டு இருக்கிறான் நவீன பாரபாஸ்.

