Saturday, January 24, 2026

உள்ளே மாட்டிய சாவி

உள்ளே மாட்டிய சாவி சிறுகதை தொகுப்பு வாசித்து முடித்தேன். இந்த  கதைகளில் திரும்பத் திரும்ப வருகின்ற ஒரு சித்திரம் “உலகம்,  அதன் போக்கில், சற்றும் கவலையற்று இயங்கி கொண்டிருப்பதான” சித்திரம். இது தான் கதைகளுக்குள் நுழைவதற்கான முதல் வாசல்.


--

காலத்தின் கணக்கில் , தங்கள் உழைப்பை தங்கள் பங்களிப்பை குறிப்பிடத்தக்க வகையில் செய்த  ஆளுமைகள் குறித்த கதைகள் இவை. அந்த ஆளுமைகளின் பங்களிப்பை நினைவு கூறும் விதமாகவே இந்த கதைகள் அமைந்துள்ளன - அந்த ஆளுமைகளின் அந்தி காலங்களின் மறதி, விரக்தி, இயலாமை புறக்கணிப்பின் ஊடே தாம்  அவர்களின் கடந்த கால பெருஞ்செயல்களை நினைவு கூறுகிறோம்.

--

ஒவ்வொரு கதைகளிலும் ஒரு சின்ன சொற்றொடர் மனதிற்கு மிகவும் நெருக்கமாக அமைந்தது

“உள்ளே மாட்டிய சாவி “ (அது  கவிஞர் சுகுமாரன் அவர்கள் இட்ட தலைப்பு என்று ஆசிரியர் முன்னுரையில் கூறியுள்ளார் அந்த தலைப்பு நல்லபடியாக அமைந்துள்ளதாக மனதில் பட்டது )

“உணர்ச்சிகள் ஏதும் இல்லாத பிரம்மாண்ட இயந்திர பறவையை “

“காட்டில் மரங்களினுடைய நடப்பதை போல புத்தகங்களை பார்த்தவாறு அடுக்குகள் நடுவே உலாவிக் கொண்டிருந்தான் “

“வளைந்த மூங்கில்களே எலும்புகளைப் போல் தோன்றின “

“ஒருவரால் தொடர்ந்து ஏமாற்ற முடியாது அவரிடம் வைக்கும் அவர் மீது நம்பிக்கை அவரை மாற்றும்”

“ஒருவர் பணத்தை எந்திரத்தில் எண்ணி கட்டி மூளையில் அலட்சியமாக எரிந்து கொண்டிருந்தார்

உங்களுக்கு பணம் கொடுத்தவரும் கடன் வாங்கிப் போனாரு”

“பின்னாலிருந்து தேர் பல எறும்புகள் இழுத்துச் செல்லும் பண்டம் போல் இருந்தது”

“இப்பத்தான் போட்ட கன்னுகுட்டி போல் இருக்கிறது என் புகைப்படத்தை தொட்டு முத்தம் கொடுத்தாள் “

--

இந்தக் கதைகளில் தோன்றும் மற்றொரு சித்திரம் நகரமயமாதல். ஒவ்வொரு கதைகளும் மெல்ல முன்பு கண்ட இடங்களெல்லாம் கண் முன்னே காணாமல் போகின்ற ஒரு சித்திரம் வந்து கொண்டே இருக்கிறது. மாற்றம் ஒரு புறம் என்றால் அந்த மாற்றம் சில மக்களை தீண்டவே இல்லை என்பதான இன்னொரு சித்திரமும் வந்து கொண்டே இருக்கிறது. தீண்டவே இல்லை என்றால் அவர்கள் வாழ்வில் முன்பிருந்ததை விட அவர்கள் ஒரு நெருக்கடியான கடினமான ஒரு சூழ்நிலையில் வாழ நேர்ந்ததை இந்த கதைகள் பதிவு செய்கின்றன.

--

தலைக்கசம் கதை பூரண கலை அமைதி பெற்ற கதையாக எனக்கு பட்டது. இந்த கதைகளில் வரும் அதனை நிகழ்வுகளையும் நாம் வரிசைப்படுத்த முயல்கையில் - பின்தோற்றம் -இறப்பு-காதல்-தோற்றம் - படிப்பு-கண்டிப்பு-பழங்குடி-உடல்-படிப்பு-விளையாட்டு-புத்தகம்-தூது-காதல்-புகைப்படம்-கள்-உணவு-சாதி-உடல்- கூட்டு சிரிப்பு-பாகுபாடு-உடல்உழைப்பு - சர்க்கார் வேலை விண்ணப்பம்- காணாமல் போதல்-பின்தோற்றம்-மீள் தேடல்-தலைக்கசம் மாயம் - குடியிருப்பு பிளாட் தோற்றம் என்று வரிசைபடுத்தலாம். நம் சமகால பிரக்ஞையின், மானுடம் கடந்து வந்த பாதையின் தீற்றல்கள் இந்த கதையில் உள்ளன.

No comments: