Sunday, April 25, 2021

ராஜவனம் - ராம் தங்கம்

 முதல் பகுதியின் அட்டகாசமான வரிக்கு வரியான சுவாரஸ்யம் எப்படி நாவல் நெடுக நீளும் என்று எண்ண வைத்த எழுத்து, அவ்வாறு நீளவில்லை எனினும் விரைவில் வரும் படைப்புகளில்  இவை மிளிரும் என்ற நம்பிக்கை விதைத்து அத்தனை அழகுடன் துளிர்த்திருக்கிறது ராஜவனம் 


அழகியல் சார்ந்து நாவலின் தொனியில் உள்ள மூன்று வெவ்வேறு கூறுகள் குறித்து; நாவலில் வரும் கானுயிர் வரிசை கண்டு பூரித்து வரும் சூழலியல் ஆர்வலர்கள் காட்டும் வழி, வனம் சூப்பர் மார்க்கெட்டில் கிடைப்பதை மூர்க்கத்துடன் அள்ளிப் போடும் தினசரி நிகழ்வாக சூறையாடலை

பதியும் நாளிதழ் வழி, தினசரி கொடுக்கல் வாங்கல் வழிமுறைகளையும் உபயோக பொருட்களின் வரிசைகளையும் சிரமேற்கொண்டு பதியும் புறமார்க்சியம் காட்டும் வழி, இவ்வழிகள் அறிந்தே அதனை தவிர்த்து ஒரு இலக்கிய ஆசிரியன் தனது ராஜபாட்டையில் நடக்கத் துவங்குகிறான், அந்த வழியில் மேற்சொன்ன மூன்று வழிகள் குறித்த அக்கறை இருந்தாலும் இவ்வனைத்தையும் உள்ளடக்கிய ஒரு சமகால உண்மை குறித்த தரிசனத்தையோ தனிப்பட்ட அனுபவத்தின் குரலையோ சாகசத்தையோ முன் வைப்பதில் ஆர்வம் கொண்டவனாக இருப்பான். கோபால் ஆன்றோ ராஜேஷ் மேற்கொண்ட சாகசம் ஒரு முடிவில்லாத பயணமாக நீண்டு கொண்டே இருக்க வேண்டும் என்பதே ஒரு இலக்கிய வாசகனாக எனது விருப்பம்.

மேலதிகமாக இயற்கை வழிபாட்டு முறையை முற்றிலும் கைவிட்ட சமூகங்களின் மதிப்பீடுகளுக்கும் இன்றைய தனி மனிதனின் ஸ்தூலமில்லாத வெற்றி களிப்பிற்கும் தோல்வியின் தனிமைக்கும் சிறிதளவு சம்பந்தம் இருக்கக் கூடும். 


Thursday, April 08, 2021

சேவாசதனம்-பிரேம்சந்த்

 

நூறாண்டுக்கு முன்னர் காசி பட்டணத்தில், கங்கை நதிக்கரையில் நடந்த கதை, ஒருவர் மாற்றி ஒருவர் என கதை மாந்தர்கள் செய்யும் தவறுகளினின் சரிவில் செல்லும் கதை அவர்கள் அனைவரின் மீட்சியின் பாதையில் வாசகனுக்கு கால பிரவாகத்தின் நுண்ணிய நெளிவு சுழிவுகளை அர்த்த அனர்த்தங்களை பழைய புதுமைகளை கூறியபடி செல்கிறது பிரேம்சந்த் அவர்களின் சேவாசதனம் என்னும் இந்தப் புதினம்.

கிருஷ்ண சர்மாவின் முதல் தடுமாற்றம் குடும்பத்தை கைவிட , உமாபதி சர்மாவின் அசிரத்தை ஈஸ்வர சர்மா சுமதி மணப்பொருத்தத்தில் வந்து முடிகிறது, சுமதியின் சஞ்சலம் மற்றும் ஈஸ்வர சர்மாவின் கோபம் போட்டி போடுகின்றன, விட்டல் தாஸின் புரளி பத்மநாபரின் முடிவுக்கு காரணம் , அம்முடிவே சுமதியை தவறான பாதையில் செல்ல நெருக்கடி அளித்தது, சுமதி க்ருஷ்ண சர்மா தவறுகளின் பாதிப்பு சாந்தையை வந்தடைகிறது, மோகனுக்கு இரு வாய்ப்புகள், களங்கமான சுமதியை அடைவதில் அவனுக்கு ஊர் வாய் குறித்த சிக்கல் இருக்கிறது, சாந்தையை அடைவதன் மூலம் சிறிதளவு பழையதை மீறி தன் இலக்கற்ற வாழ்விற்கு பொருள் தேடுகிறான், உமாபதிக்கு தன் கீர்த்தி பெரிது, பத்மநாபருக்கு தன் குடும்ப கடமைகள் சமூக அந்தஸ்துபெரிது, விட்டல்தாஸின் அளவான தர்ம சிந்தனை , பத்மநாபர் விட்டல்தாஸ் இருவரும் தங்கள் எல்லையை நீட்டித்து பழையனவற்றை எதிர் கொண்டு மாற்றத்தை உருவாக்க முயல்கின்றனர், உமாபதிக்கு பழையதை விட முடியவில்லை, அத்தனை கதைமாந்தர்களையும் கடந்து நாம் ஈஸ்வர சர்மா சுமதி இருவரின் முடிவுகளை சற்று ஆராய்ந்தால் நாம் இந்நாவலின் ஆன்மாவை தொட்டுவிட முடியும்.

ஒருவரது அல்லது சமூகத்தின் தவறுகளுக்கு போதாமைகளுக்கு இயலாமைக்கு காலம்தொறும் மனித சமுதாயம் கண்ட விடை, "விட்டு விலகுவதும்" ,ஊக்கம் மிகுந்த தன்னலமற்ற சேவையும்" - ஒரே நாணயத்தின் இரு பகுதிகள் இவை, விட்டு விலகுவதில் , விலகுபவனுக்கு நிம்மதி எனினும் காலத்தின் மதிப்பில் அது வெறும் தப்பியோடுதல் அதே நேரத்தில் விலகாது நான் நான் என்று செயல்பட்டுக்கொண்டே இருக்கையில் நம் ஆணவம் வளர்கிறது, விட்டு விலகி ஊக்கத்துடன் நாம் அடுத்தவருக்காக வாழத் தொடங்குகையில் நாம் ஸம்ஸார சாகரத்தில் இருந்து விலகி கலியுக வாழ்வில் மீட்சி அடைவதாக முடிக்கிறார் பிரேமசந்த்.

சிறிதளவு புரட்சி செய்து பெரும் பாலனோர் தங்கள் கணக்குகளை நேர் செய்து அமைதி அடைந்து விடுகின்றனர், புரிதல் காரணமாகவோ அல்லது வேறு வழியின்றி ஒரு சிலர் மட்டுமே சிலுவையை கால மாற்றத்தின் பாரத்தை சுமக்க நேர்கிறது, அவற்றை பார்க்கும் பெரும்பாலானோர் அதை பிராயச்சித்தம் என்றும் , விதி என்றும், மகான் என்றும் கூறி மன சமாதானம் அடைகின்றனர் , இந்த சமாதானம் இந்த நாவலுக்கும் பொருந்தும் எனினும் மனிதனின் அசாத்தியமான அற்பத்தனத்தையும் , எளிமையான மகோன்னதத்தையும் அற்புதமாக படம் பிடித்துக் காட்டும் நாவல் சேவாசதனம்

உண்மைகள் பொய்கள் கற்பனைகள்

 அரிசங்கர் எழுதி நான் வாசித்த இரண்டாவது நாவல் இது. பாரிஸ் வாசித்து முடிக்கையில் முழுமை பெறாத அதே நேரத்தில் குறிப்பிட்டு கூறும்படியான முனைப்பும் வடிவ நேர்த்தியும் பாரிஸில் இருந்ததாக தோன்றியது,  அவ்வகையில்  உண்மைகள் பொய்கள் கற்பனைகள் சற்றே அதிக காத்திரத்துடன்  தன் உணர்நிலைகளை முன் வைக்கிறது, 


பெயருக்கு ஏற்றாற் போலவே மூன்று வெவ்வேறு உணர்நிலைகளின் அவதானிப்பாகவே நாவல் நகர்கிறது, குறிப்பிட்டு சொல்லும் படியான புற நிகழ்வுகள் இல்லாத காரணத்தால் வாசகன் சற்று மெனக்கிட்டு கதை மாந்தர் தம் சூழலில் அவனை பொருத்திக் கொள்ள முயன்றால் நாவல் கூற வரும் தனி மனிதன் மற்றும் அவனது சுற்றம் பங்கு கொள்ளும் ஏராளமான உராய்வுகளை கண்டு கொள்ள முடியும். 


மூன்று உலகங்களை நிதர்சனம் லட்சியவாதம் கற்பனாவாதம் என்று தகவமைத்தால் இம்மூன்றிலும் ஒருவனுக்கு கிடைக்கப் பெறும் சமகால அனுபவம் என்ன என்று சற்று யோசித்தோமெயானால் , நிதர்சனம் மௌடிக துயரத்தையும் லட்சியவாதம் பொய்ப்பதையும் , கற்பனாவாதம் முழுமை பெற முடியாது தவித்து  உடைமையை நோக்கி நகர்வதையும் உணரலாம், 


மஞ்சள் வெயிலில் தனிப்பெரும் காதல் சிறுக சிறுக வளர்ந்து முழு மானிட அன்பின் சாத்தியமாக ஆகிறது அதே உணர்வு இந்நாவலில் உடைமையை நோக்கி நகர்கிறது, கற்பனா தளத்தில் நடப்பதெனினும் கால மாற்றத்தின் ஒரு துகள் பிரபஞ்சத்தை நாம் புரிந்து கொள்ள இந்த "உடைமை" தேர்வு உதவியாக இருக்கிறது, விட்டு விடுதலையாகி வாழ முயலும் மரபின் ஆன்மீகத்தின் சுவடே இல்லாத தன்முனைப்பின் ஆன்மீகம் மிகுந்த ஒரு சக்கையான சுரணையற்ற நகர வாழ்வை படம் பிடிக்க இந்த நாவல் முயல்கிறது, சில இடங்கள் அபாரமான குறுங்கதைகளாக அமைந்து வந்திருக்கிறது. வெள்ளைகள் நிதர்சனத்தில் மிகவும் துயருகிறார்கள், அந்த துயரங்களின் குரலாக குரலாக இருப்பதாலேயே முக்கியமான வாசிப்பாக அமைகிறது " உண்மைகள் பொய்கள் கற்பனைகள்"