Thursday, April 08, 2021

உண்மைகள் பொய்கள் கற்பனைகள்

 அரிசங்கர் எழுதி நான் வாசித்த இரண்டாவது நாவல் இது. பாரிஸ் வாசித்து முடிக்கையில் முழுமை பெறாத அதே நேரத்தில் குறிப்பிட்டு கூறும்படியான முனைப்பும் வடிவ நேர்த்தியும் பாரிஸில் இருந்ததாக தோன்றியது,  அவ்வகையில்  உண்மைகள் பொய்கள் கற்பனைகள் சற்றே அதிக காத்திரத்துடன்  தன் உணர்நிலைகளை முன் வைக்கிறது, 


பெயருக்கு ஏற்றாற் போலவே மூன்று வெவ்வேறு உணர்நிலைகளின் அவதானிப்பாகவே நாவல் நகர்கிறது, குறிப்பிட்டு சொல்லும் படியான புற நிகழ்வுகள் இல்லாத காரணத்தால் வாசகன் சற்று மெனக்கிட்டு கதை மாந்தர் தம் சூழலில் அவனை பொருத்திக் கொள்ள முயன்றால் நாவல் கூற வரும் தனி மனிதன் மற்றும் அவனது சுற்றம் பங்கு கொள்ளும் ஏராளமான உராய்வுகளை கண்டு கொள்ள முடியும். 


மூன்று உலகங்களை நிதர்சனம் லட்சியவாதம் கற்பனாவாதம் என்று தகவமைத்தால் இம்மூன்றிலும் ஒருவனுக்கு கிடைக்கப் பெறும் சமகால அனுபவம் என்ன என்று சற்று யோசித்தோமெயானால் , நிதர்சனம் மௌடிக துயரத்தையும் லட்சியவாதம் பொய்ப்பதையும் , கற்பனாவாதம் முழுமை பெற முடியாது தவித்து  உடைமையை நோக்கி நகர்வதையும் உணரலாம், 


மஞ்சள் வெயிலில் தனிப்பெரும் காதல் சிறுக சிறுக வளர்ந்து முழு மானிட அன்பின் சாத்தியமாக ஆகிறது அதே உணர்வு இந்நாவலில் உடைமையை நோக்கி நகர்கிறது, கற்பனா தளத்தில் நடப்பதெனினும் கால மாற்றத்தின் ஒரு துகள் பிரபஞ்சத்தை நாம் புரிந்து கொள்ள இந்த "உடைமை" தேர்வு உதவியாக இருக்கிறது, விட்டு விடுதலையாகி வாழ முயலும் மரபின் ஆன்மீகத்தின் சுவடே இல்லாத தன்முனைப்பின் ஆன்மீகம் மிகுந்த ஒரு சக்கையான சுரணையற்ற நகர வாழ்வை படம் பிடிக்க இந்த நாவல் முயல்கிறது, சில இடங்கள் அபாரமான குறுங்கதைகளாக அமைந்து வந்திருக்கிறது. வெள்ளைகள் நிதர்சனத்தில் மிகவும் துயருகிறார்கள், அந்த துயரங்களின் குரலாக குரலாக இருப்பதாலேயே முக்கியமான வாசிப்பாக அமைகிறது " உண்மைகள் பொய்கள் கற்பனைகள்"

No comments: