Thursday, April 08, 2021

சேவாசதனம்-பிரேம்சந்த்

 

நூறாண்டுக்கு முன்னர் காசி பட்டணத்தில், கங்கை நதிக்கரையில் நடந்த கதை, ஒருவர் மாற்றி ஒருவர் என கதை மாந்தர்கள் செய்யும் தவறுகளினின் சரிவில் செல்லும் கதை அவர்கள் அனைவரின் மீட்சியின் பாதையில் வாசகனுக்கு கால பிரவாகத்தின் நுண்ணிய நெளிவு சுழிவுகளை அர்த்த அனர்த்தங்களை பழைய புதுமைகளை கூறியபடி செல்கிறது பிரேம்சந்த் அவர்களின் சேவாசதனம் என்னும் இந்தப் புதினம்.

கிருஷ்ண சர்மாவின் முதல் தடுமாற்றம் குடும்பத்தை கைவிட , உமாபதி சர்மாவின் அசிரத்தை ஈஸ்வர சர்மா சுமதி மணப்பொருத்தத்தில் வந்து முடிகிறது, சுமதியின் சஞ்சலம் மற்றும் ஈஸ்வர சர்மாவின் கோபம் போட்டி போடுகின்றன, விட்டல் தாஸின் புரளி பத்மநாபரின் முடிவுக்கு காரணம் , அம்முடிவே சுமதியை தவறான பாதையில் செல்ல நெருக்கடி அளித்தது, சுமதி க்ருஷ்ண சர்மா தவறுகளின் பாதிப்பு சாந்தையை வந்தடைகிறது, மோகனுக்கு இரு வாய்ப்புகள், களங்கமான சுமதியை அடைவதில் அவனுக்கு ஊர் வாய் குறித்த சிக்கல் இருக்கிறது, சாந்தையை அடைவதன் மூலம் சிறிதளவு பழையதை மீறி தன் இலக்கற்ற வாழ்விற்கு பொருள் தேடுகிறான், உமாபதிக்கு தன் கீர்த்தி பெரிது, பத்மநாபருக்கு தன் குடும்ப கடமைகள் சமூக அந்தஸ்துபெரிது, விட்டல்தாஸின் அளவான தர்ம சிந்தனை , பத்மநாபர் விட்டல்தாஸ் இருவரும் தங்கள் எல்லையை நீட்டித்து பழையனவற்றை எதிர் கொண்டு மாற்றத்தை உருவாக்க முயல்கின்றனர், உமாபதிக்கு பழையதை விட முடியவில்லை, அத்தனை கதைமாந்தர்களையும் கடந்து நாம் ஈஸ்வர சர்மா சுமதி இருவரின் முடிவுகளை சற்று ஆராய்ந்தால் நாம் இந்நாவலின் ஆன்மாவை தொட்டுவிட முடியும்.

ஒருவரது அல்லது சமூகத்தின் தவறுகளுக்கு போதாமைகளுக்கு இயலாமைக்கு காலம்தொறும் மனித சமுதாயம் கண்ட விடை, "விட்டு விலகுவதும்" ,ஊக்கம் மிகுந்த தன்னலமற்ற சேவையும்" - ஒரே நாணயத்தின் இரு பகுதிகள் இவை, விட்டு விலகுவதில் , விலகுபவனுக்கு நிம்மதி எனினும் காலத்தின் மதிப்பில் அது வெறும் தப்பியோடுதல் அதே நேரத்தில் விலகாது நான் நான் என்று செயல்பட்டுக்கொண்டே இருக்கையில் நம் ஆணவம் வளர்கிறது, விட்டு விலகி ஊக்கத்துடன் நாம் அடுத்தவருக்காக வாழத் தொடங்குகையில் நாம் ஸம்ஸார சாகரத்தில் இருந்து விலகி கலியுக வாழ்வில் மீட்சி அடைவதாக முடிக்கிறார் பிரேமசந்த்.

சிறிதளவு புரட்சி செய்து பெரும் பாலனோர் தங்கள் கணக்குகளை நேர் செய்து அமைதி அடைந்து விடுகின்றனர், புரிதல் காரணமாகவோ அல்லது வேறு வழியின்றி ஒரு சிலர் மட்டுமே சிலுவையை கால மாற்றத்தின் பாரத்தை சுமக்க நேர்கிறது, அவற்றை பார்க்கும் பெரும்பாலானோர் அதை பிராயச்சித்தம் என்றும் , விதி என்றும், மகான் என்றும் கூறி மன சமாதானம் அடைகின்றனர் , இந்த சமாதானம் இந்த நாவலுக்கும் பொருந்தும் எனினும் மனிதனின் அசாத்தியமான அற்பத்தனத்தையும் , எளிமையான மகோன்னதத்தையும் அற்புதமாக படம் பிடித்துக் காட்டும் நாவல் சேவாசதனம்

No comments: