Tuesday, June 15, 2021

வேள்வித்தீ - எம்.வி வெங்கட்ராம்


வேள்வித்தீ எதன் சாட்சியாக இருக்கிறது ? ஸ்தூலமில்லாத விழுமியங்கள் சாட்சியாகவா? அவ்விழுமியங்களை கட்டிக் காக்க போராடும் மனிதர்களின் அகத்தின் நிழலாகவா? இந்த வேள்வித்தீயின் நாக்குகள் எதை நோக்கி நீண்டு செல்கின்றன ? வழி தவறுபவனை சுட்டுரைக்கவோ ? இடித்துக் கூறி வழி நடத்தவோ ? எல்லைகளை வெல்ல முடியாதவனின் கடைசி புகலிடமோ இந்த வேள்வித்தீ ?


குறிப்பிட்ட வயது கடந்த பின்னர் நமக்கும் பணத்துக்கும் ஒரு மானசீக விளையாட்டு துவங்குகிறது, கவனித்து பார்க்கையில் பிகு செய்து அலட்சியம் செய்கையில் முன்னின்று வந்து ஒரு நியாயமான விளையாட்டாக தொடரும் , இதன் நடுவே தேவைக்காக பணம் பணத்துக்கான தேவை என்கிற தான்தோன்றி விளையாட்டும் நம்மை முடிந்தவரை ஆட வைக்கும், இவ்வாட்டத்தின் விதிமுறைகள் படி நாவல் நாயகன் கண்ணன் கடமை, நேர்மை, விசுவாசம், மானம், உழைப்பு முதலிய   விழுமியங்களுடன் தனது விளையாட்டை விளையாடுகிறான், நம் அனைவரையும் போலவே முழு தொழிலாளியாகவும் முடியாது முழு முதலாளியாகவும் முடியாத திரிசங்கு தளத்தில் தனது ஆட்டத்தை நடத்துகிறான் கண்ணன். 


இந்த ஆட்டத்தின் விதியை மாற்ற விழுமியங்களை உரசிப் பார்க்க காலம் என்னும் எதிராளி காய் நகர்த்துகிறான், கண்ணனின் பதில் ஆட்டங்கள்  விதிகளுக்கு உட்பட்டு தானா ? சங்கமிக்கும் கடலில் கலக்கையில் சாக்கடையும் நன்னீரும் ஒன்று போல் தோன்றினாலும் அவை ஒன்றாகுமா? கண்ணனின் குரலில் ஒன்று முடிந்து இன்னொன்று துவங்குகிறதே என்று கேவுகையில் வாசகன் தனக்கான விடையை அறியலாம். வேறொரு தளத்தில் கண்ணன் அடைந்த்திருக்கும் திரிசங்கு நிலையே விழுமியங்கள் குறித்த நமது பார்வையை விஸ்தரிக்க வல்லது. முதலாளி தொழிலாளி இடையே நடக்கும் பேரத்தின் நடுப்புள்ளியைப் போல் தனி ஒருவன் கைக்கொள்ள விழுமிய வேள்வித்தீ சங்கல்பங்களில்  ஏதெனும் உண்டோ ?


சிறிய வழு அல்லது சந்தர்ப்ப சறுக்கல் என்ற உத்தியை தவிர்த்ததன் மூலமும் மேலதிகமாக நம் விழுமியங்களை சோதிக்க இயங்கிக் கொண்டிருக்கும் ஏதோ ஒரு விசை குறித்த அவதானிப்பாகவே இந்த தேர்வைப் புரிந்து கொள்ள முடிகிறது


இவை தவிர நெசவாளர் குடும்பங்களின் பொருளாதார சூழல், குடும்ப வழக்கங்கள் குறித்தும் , 1970 களின் அரசியல் கட்சிகள் குறித்த நுண்பகடிகளும் , நடுத்தர குடும்ப  நிகழ்வுகளின் மென் தருணங்கள் என விரிகிறது நாவல். 


புறமும் அகமும் சரிந்துக் கொண்டே முழுகிக்கொண்டே சென்றாலும் எங்கிருந்தோ முளைக்கும் சமாதானமும் வைராக்கியமும்,  மனிதனால் தாங்க முடியாத ஒன்று என்கிற விஷயம் இல்லவே இல்லை, விதியின் அத்தனை கேள்விகளுக்கும் பதிலாக தன்னையே அளிக்கும் மனிதனை தீண்டிப் பார்க்கும் வேள்வித்தீ.

No comments: