Saturday, June 19, 2021

கூந்தப்பனை- சு வேணுகோபால்

 

2001 ல் வெளிவந்த சிறுகதைத் தொகுப்பு, நான்கு சிறுகதைகளையும் இணைத்து என் எண்ணங்களை தொகுத்துக் கொள்ள முயன்றிருக்கிறேன், "கண்ணிகள்" சிறுகதை நான்கு கதைகளுக்கான பொதுவான பின்புலத்தை குறிக்க - "வேதாளம் ஒளிந்திருக்கும்" கதை ஆண்-பெண் டவுன்-கிராமம் இடையேயான இடைவெளி மற்றும் அலைச்சல் குறித்த வாசல்கள் திறக்க, அந்த சிறிய டவுனில் புதிய பொருட்களுக்கும் பொருள்வயின் பிரிவும் ஏற்படுத்தும் பொருந்தாத விளைவுகள் குறித்த "அபாயச் சங்காக" மூன்றாவது கதை, அனைத்தையும் உள்வாங்கி நகரமயமாக்கம் தன்னகத்தே கொண்டுள்ள மலட்டுத்தனத்தை எதிர்கொள்ளக் கூடிய தரிசனத்தை அளிக்கும் தொகுப்பின் சிறந்தக் கதையான கூந்தப்பனை.


ஆண் பெண் உறவுகள் குறித்த நிகழ்வுகளே மூன்றில் நான்கு கதைகளுக்கான அடிப்படையாக அமைந்துள்ளன, கதையின் முடிச்சுகள் வலுவானதாக இருந்தும் அவற்றை வெறும் அதிர்ச்சி மதிப்பீட்டிற்காகவும் பாலுணர்வு சார்ந்த அவதானிப்புகளாக மட்டும் காணாது "என்றுமுள்ள ஒன்றின் புதிய அர்த்தமாகக் கருதி, புதிதாக வந்தடைந்துள்ள காலத்தை அந்த அடிப்படை உணர்வுகளின் திரிபுகள்  கொண்டு விளக்குவதையே உட்பிரதியாக வாசிக்க வாய்ப்பிருக்கிறது. 


உடலுழைப்பை பெரிதாக கோராத புதிய பயிர்களின் வருகையால் உருமாறிக் கொண்டே இருக்கும் கிராமம் , புதிய பொருட்களின் வருகையால் உருமாறும் சிறிய டவுண்கள், மேலும் பணம் மேலும் ஆசை என்ற சின்னஞ்சிறு வருகைகள் ஏற்படுத்தும் விவசாயம் Vs பட்டப்படிப்பு என்னும் இருமை நகரமயமாக்கலுக்கு தீனி போட்டபடி இருக்கும் காலகட்டத்தை படம் பிடித்துக்காட்டும் கதைகள் இவை.


தனிமையின் சிக்கலை ஊதிப் பெரிதாக்கி விடை தெரியாது மௌனத்தில் ஆழ முயலும் நவீன நகர போக்கின் எதிரில் மைசூர்பாக் கேட்டு அழும் சிறுவனின் முதுகில் பதிந்த அன்னையின் விரல்கள் காலம் நமக்கு அளித்துள்ள மூதுரை. சிறிய பயணமோ சரியான சொல்லோ கடந்து செல்லுதலோ ,  எப்போதும் நம்மை மீட்டுக் கொண்டே இருக்கிறது. அனைத்திலும் ஒன்றையே காண அனைத்து ஜீவன்களும் ஒன்றின் இன்னொன்று என உணர்கையில் தனிமையும் குற்றஉணர்வும் என்ன செய்து விட முடியும்.

No comments: