தனிமை. எதேச்சையின் கைகளோ நீங்களாகவோ ஏற்படுத்திய தனிமை. மூர்க்கத்தை கவசமாய் கொண்டு அர்த்தமில்லாத தனிமை மலையின் விளிம்பில் நிற்கும் நீங்கள்.
நீங்கள் மீண்டும் எதேச்சையாக தேர்ந்தெடுக்கப்படுகிறீர்கள். இம்முறை அந்தக் கரம் உங்களை விளக்க முடியாத பெரிய விஷயம் ஒன்றோடு பிணைக்கிறது. புதிய பிணைப்பை ஏற்க முடியாத நீங்கள் கைகளை உதறி ஓட முயல்கிறீர்கள்.
வெளியே தெரியாமல் சிறிதாக ஒளித்து வைத்து மறைத்து விடலாம் என்று நீங்கள் நினைக்கும் அந்த விஷயம் பெரிதாகி உங்களை சூழத் தொடங்குகிறது.குழந்தை ஒன்று உங்களுக்கு அளிக்கும் வண்ண சித்திரம் வழி அந்த பெரிய விஷயத்துக்கு உங்களை ஒப்பு கொடுக்கிறீர்கள். ஒப்பு கொண்ட விஷயத்தின் தீவிரம் கூடுகையில் தான் தெரிய வருகிறது உங்களுக்கான காலமும் நேரமும் மிகக் குறைவு என்று.
தனிமை அர்த்தம் பெறத் துவங்குகிறது. நீங்களும் அந்தப் பெரிய விஷயமும் ஒருவரோடு ஒருவர் பிரிக்க முடியாத ஒரு பயணத்தைத் தொடங்குகிறீர்கள் - பயணம் உங்களுக்கானதா அல்லது அந்தப் பெரிய விஷயத்தின் பொருட்டா என்று புலப்படாத வண்ணம் ஒன்றை ஒன்று இட்டு சென்றபடியே, உங்களால் செய்யக்கூடிய விஷயங்களின் எல்லை விரிவடைந்து கொண்டே வருகிறது. உலகத்தார் போற்றியும் தூற்றியும் உங்கள் பயணம் இறுதி கட்டத்தை எட்டுகிறது.
இறுதிக் கட்டத்தில் உங்கள் உடைமைகளை இழக்கத் தொடங்குகிறீர்கள். மற்றவர்களால் உங்களுக்கு உதவ முடியாது. தனிமை பனிப்பாலையில் நீங்களும் அந்தப் பெரிய விஷயமும் ஒருவரை ஒருவர் தொடர்ந்தபடி, யாருக்கு யார் வழி காட்டுகிறார் என்று தெரியாத வண்ணம் பயணம் நீள்கையில் ஒரு கனவு,ஒரு நனவு.
கனவில் நீங்கள் பெரிய விஷயத்தை எட்டியதாக இலக்கை எட்டியதாக எண்ணி மகிழ்கிறீர்கள்.
நனவில் பெரிய விஷயம் உங்களை வேறொரு இடத்திற்கு இட்டு செல்கிறது.. அது ஒரு வீடாகவும் கோவிலாகவும் இருக்கிறது. அங்கே நீங்கள் ஏறக்குறைய இறைவன் இருக்கும் இடத்தில், இன்னொரு பெரிய விஷயத்தை கண்டடைகிறீர்கள். ஆதி கருமையை, ஆதி இருட்டை விலக்கும் முதல் அசைவை நினைவூட்டும் அந்த விஷயம். உங்கள் வினை தொடர்கிறது. அவ்வினையின் எளிய சித்திரம் சிறு குழந்தையின் கைகளில் தொடங்கியதை நீங்கள் நினைவு கூர்கிறீர்கள். நல்வினை ஏறக்குறைய இறைவன். அவர் உங்கள் கைகளில் சிறு கருமைப் பந்தாக புரண்டு படுக்கிறார்..வினை தொடர்கிறது.
4 comments:
மிக அருமை👏👏👏👏
மிக அருமை👏👏👏👏
மிக மிக அருமை👏👏👏👏
அ௫மையோ அ௫மை
Post a Comment