முற்றிலும் கைவிடப்பட்ட துயர நிலை குறித்தான சித்திரம் புலப்படும் இடங்களில் நாவல் கவனத்தை ஈர்க்கத் தொடங்கியது. குறிப்பாக ராசபாண்டியும் அவனது தாயும் அடுத்து என்ன செய்வது என்று அறியாது துணை எதுவும் இல்லாது கனத்த மௌனத்தோடு ஒருவரை ஒருவர் பார்த்தபடி அரை இருளில் அமர்ந்திருக்கும் சித்திரம். நாவலில் அநேக இடங்களில் ராசபாண்டி உணரும் துயரக்குழி சித்திரத்தின் உச்சம் இந்தப் பகுதி.
கைவிடப்பட்ட நிலையில் உள்ள ராசபாண்டி தனது இந்த நிலைக்கு காரணமான தந்தையை வெறுக்கத் தொடங்குகிறான் . தந்தை குறித்த இனிமையான நினைவுகள் குறித்து குழம்புகிறான் - அதே நேரத்தில் தன் தாயின் பாட்டன் ஆச்சி மற்றும் மீனாட்சியின் சொற்கள் வழி தனக்கான தனி வழியை அமைக்க முயல்கிறான். இரண்டுக்கும் இடையேயான பெரும் போராட்டமே நாவலின் அடிநாதமாக அமைந்திருக்கிறது.வெறுப்பின் முழு தகிப்பையும் மனதினுள் தாங்கமுடியாது, செயல் வடிவிலும் வெறுப்பை வெளிப்படுத்த முடியாது அல்லல் படுகிறான் ராசபாண்டி . நட்சத்திரத்தில் பிரியமானவர்களை காண முடிந்த ராசபாண்டிக்கு நேரில் காணும் தந்தை மீதான தனது வெறுப்பு குறித்து மிகுந்த சஞ்சலம் ஏற்படுகிறது - ஏதோ ஒரு செயலை எதிர்பார்த்து அவன் மனம் முன்னும் பின்னும் விளையாடியபடியே இருக்கிறது.
விளையாட்டிற்கு சுவாரஸ்யம் சேர்க்கும் வண்ணம் நாவலில் ராசபாண்டிக்கும் காட்டின் தன்னிச்சையான நிகழ்வுகளுக்குமான முடிச்சு நன்றாக அமைந்து வந்திருக்கிறது. குறிப்பாக மிருகங்கள் வரும் இடங்கள் நிரம்ப குறிப்புடன் அமைந்திருக்கிறது. ராசபாண்டியின் மனம் நிகழ்வுகளில் முழுகுகையில் மரங்களில் தாவும் குரங்குகள் பற்றிய வரி, சின்னமாயன் மாடுகளுடன் மணிக்கணக்கில் பேசுவது, துயர்க்குழியில் இருக்கும் ராசபாண்டி வாழ்க்கையை ஒரு மதம் பிடித்த யானையுடன் ஒப்பிடுவது, நிர்கதியின் உச்சத்தில் வன மிருகம் ஒன்றை நேருக்கு நேர் அருகாமையில் காணும் இடம், டார்ச் வெளிச்சத்தில் அசையாத ராஜநாகம் குறித்த குறிப்பு, ஒரு கட்டத்தில் ராசபாண்டி தன்னை துயரம் என்னும் தவளைகளின் மீது ஏறி செல்லும் மலைபாம்பாக எண்ணிக் கொள்ளும் இடம், தோல் உதிர்ந்த குரங்கை நேருக்கு நேர் ராசபாண்டி காணும் இடம், யாருக்காகவோ காத்திருந்து மீண்டும் பழத்தை கொத்த தொடங்கும் பறவை என நாவல் நெடுக லயித்து வாசிக்க முடிகிறது
தந்தை மீதான கோபம் தமிழ் நவீன நாவல்களுக்கு புதிதல்ல - துரோகம் தொடர்ந்து வரும் பழி மற்றும் சாபம் தொடர்பான கதைகளும் புதிதல்ல, இந்நாவலின் ஆதார உணர்வு நமக்கு மிகவும் பழக்கமானதே. நம் அர்த்தமற்ற மற்றும் அர்த்தம் மிகுந்த கோபத்தையும் வெறுப்பையும் ராசபாண்டியின் வரிகளில் கண்டுகொள்ளலாம். சுயத்தையே அழிக்க வல்ல வெறுப்பை ராசபாண்டி கண்டு கொள்வதும் அவனை ஆற்றுப்படுத்திய அனைத்து சொந்தங்களின் வார்த்தைகளில் நாம் நமக்கான ஆறுதலை நாம் தேடிக்கொள்ள முடியும். யூமா வாசுகியின் "ரத்த உறவு ", தேவி பாரதியின் " நிழலின் தனிமை" இவ்விரண்டு நாவல்களும் இவ்வகைமையில் வாசிக்க தகுந்த செறிவான நாவல்கள்.
வெறுப்பு கோபம் சார்ந்த எண்ண ஓட்டங்கள் விசித்திரமானவை. அவற்றின் ஊற்றுக்கண் வெறுப்பு தொடங்கிய காரண காரியத்தின் பெயரிலா அல்லது நம் துயரம் மேலும் குழிவிடாமல் இருக்க வெறுப்பு நமக்கான கவசமா என்ற கேள்வி ராசபாண்டி வழியாக நம்மிடம் எழுப்பப்படுகிறது. ஆதார வெறுப்பு எங்கோ சென்று ஒளிந்து கொள்ள நம் மிதமிஞ்சிய கோபமும் வெறுப்பும் தொடர்ந்த எண்ணங்களும் எதை நோக்கி என்று நம் உணர்வது அத்தனை எளிதான ஒன்றல்ல. எண்ணங்களின் அலைக்கழிப்பிற்கு பிறகு நமக்கு அமைவதெல்லாம் செயலுக்கான ஒரு அழைப்பே. விலகி ஓடி இவற்றில் இருந்து நாம் வெளியேற முடியாது. நாவலின் இறுதிப் பகுதி அமைந்திருக்கும் விதத்தை நான் இப்படியே புரிந்து கொள்கிறேன். அனைத்து விதமான முடிவுகளும் சாத்தியமாகும் படியான இறுதிப்பகுதி , சிறிய பதைப்புடன் தான் வாசித்து முடிக்க முடிந்தது. இப்போதைக்கான, நேருக்கு நேர் நம் மிருகங்களை காண, ஒரு ஆற்றுப்படுத்தல், இயற்கை வழி, ராசபாண்டிக்கு வாய்த்திருக்கிறது.

No comments:
Post a Comment