Tuesday, April 28, 2020

சிவபுராணம்

சிவபுராணம் - அருண் கார்த்திக் 

சற்றே அலட்சியமாக கடந்து செல்லவே இந்தத் திரைப்படத்தை காண தொடங்கினேன் , ஏனெனில் நான் ஏகமாக பார்வையிட்ட இப்படத்தின் விமர்சனங்களின் ஒற்றை வரிகள்  படத்தை கொண்டாடியது முதல் காரணம். இது அல்ப விஷயம் , இரண்டாவது காரணம், சற்றே ஏற்று கொள்ளக்கூடியது  மரபு தொடர்பாக எடுக்கப்படும் படங்கள்  முற்போக்கின் பாவனையை வலிய புனைந்து மரபின் அத்தனை ஓட்டைகளையும் தொகுத்து தோரணம் கட்டி இவ்வளவு தான் மரபின் மதிப்பு என்பது போன்ற தோற்றத்தை உருவாக்க முயலும் படங்கள் - சிவபுராணம் இரண்டாம் வகையில் இல்லை, படம் குறித்த எந்த விமர்சனங்களையும் ஒற்றை விளம்பர வரி தவிர்த்து படிக்கவில்லை , என் எண்ணங்களை தொகுத்து கொள்ளவே மேலும் எழுதுகிறேன்

"பட்டியல்" என்ற விஷயம் இலக்கியத்திலும் , திரைப்படத்திலும் , இசையிலும் முக்கியமாக கருதப்படும் விஷயம் - இந்தப் பட்டியல் ஒருவருடைய தனிப்பட்ட பட்டியலாக இருக்கலாம் அல்லது பிரபலமான ஒருவர் போட்ட பட்டியலாக இருக்கலாம் , அல்லது வாசகர்கள் பொதுவாக ஒப்பு கொள்ளும் முரண்படும் பட்டியலாக இருக்கலாம் - இந்தப் பட்டியல் விஷயம் இப்போது பெரு நிறுவனங்களின் கையில் உள்ளது , குறிப்பாக திரைப்படங்களை பொறுத்தவரை  சராசரி திரைப்படமும் உன்னதமான படைப்புகளும் ஒரே நேரத்தில் ஒரே சட்டகத்தில் பாவத்தில் விவாதிக்கப்படுகின்றன - பெரு நிறுவனங்கள் அசுர வேகத்தில் படங்களை அளிப்பது மட்டுமல்லாது படங்களை கட்டுக்கடங்காது  தொடர்ச்சியாக பார்க்கும் பழக்கத்தை ஊக்குவிக்கின்றன - இந்தப் பழக்கம் எந்த அளவில் நாம் வாசிப்பு தன்மையை ரசனையை மாற்றி அமைத்துள்ளது என்பதே ஒவ்வொரு ரசிகனும் தன்னை தானே கேட்டுக் கொள்ளவேண்டிய கேள்வி

சிவபுராணம் மாணிக்க வாசகர் அருளியது - இந்த திரைப்படத்திற்கும் மாணிக்க வாசகர் பாடியதற்கும் என்ன சம்பந்தம் - முதற் காட்சியில் வீடடையும் நாயகன் தொடங்கி , படத்தின் நெடுகே உள்ள நாயகனின் தனிமை, ஏகாந்தமான இயற்கை காட்சிகள், புத்தகம், படக்காட்சிகள், நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்கள்,பால்த்தேரின் ஆடும் பாம்பு , பக்கத்துக்கு வீட்டுப் பெண் , பைக் சுற்றல், மழை, வெய்யில், கடல், பூனை, நாய்,எறும்பு , உடல்,  என மாறி மாறி வரும் காட்சிகளை அர்த்தப்படுத்தி தொகுக்க கடினமான ஒன்றாக இருக்கிறது - படத்தில் மிகவும் கவர்வது நாயகனின் தனிமை அதுவும் சிறுக சிறுக அவர் தனிமையை பருகுவது அவரது விதிவசத்தால் அல்ல தான் சுய தேர்வால்.

எந்த ஒரு தனிமையும் ஒரு தேடலை நோக்கி இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை, அதே நேரத்தில் சிறிய லௌகீக விஷயங்கள் தவிர்த்து, சிவனே என்று இருக்கும் நாயகன், துணை தேடும் விஷயத்தில் ஏற்பட்ட சிறிய சஞ்சலங்கள் , முடிவுகள் தவிர்த்து இலக்கில்லாத ஏகாந்தத்தில் திளைப்பது போன்ற உணர்வை தருகிறது

படத்தின் பீரியட் , சற்றே முப்பது வருடங்கள் பிந்தைய வீடு, ஆனால் சுற்றியும் நவநாகரீக வீடுகள் கொண்ட இடம் ,  கேன் வாட்டர், இருந்தும், உன்னிடம் மயங்குகிறேன் எனத்தொடங்கி ஒரு இனிய மனது என்று முடியும் கலவையான  காலகட்டம் , பழைய பொற்காலத்தின் சாயலை நினைத்து ஏங்கும் ஒரு நவீன மனிதனின் வாழ்வின் ஒரு பகுதியாக இந்தப் படத்தை காண வாய்ப்பிருக்கிறது , படம் நெடுக நாயகன் ஒரு கவிதை புத்தகத்தின் அட்டை வடிவமைப்பில் கவனம் செலுத்த முயல்கிறான், மொத்தத்தில் மிகுந்த abstract ஆக உள்ளபடம் - சில அற்புதமான நிலக்காட்சிகளின் வழி , நாயகனின் தனிமை வழி நாம் அறிந்து கொள்ள சில விஷயங்கள் இருக்கலாம்.பிறவிப் பெருங்கடல் தாண்டி சிவபுரம் அமைந்துள்ளது.

https://mubi.com/films/the-strange-case-of-shiva

No comments: