Friday, May 15, 2020

புது பஸ்டாண்ட் - சத்யானந்தன்

சத்யானந்தன் அவர்களின் புது பஸ்டாண்ட் நாவல் குறித்த சில எண்ணங்கள் 

திருவெள்ளறை ராஜா கோபுரம் ஒரு அழகான குறீயீடாக வந்தமைந்துள்ளது - முற்று பெறாத எதோ ஒன்றை , ஒரு சிறு குறையை , மானுடம் சாதிக்க முடியாது எதோ ஒன்றின் விளக்கமாக அமைந்துள்ளது - தொடர்ந்து படித்து கொண்டிருக்கையில் வெவ்வேறு உதிரி சம்பவங்களின் தொகுப்பாக உணர்ந்தேன் ஆனால் ஏதோ ஒரு குறிப்பிட்ட இடத்தில் இப்புதினம் சமகால வாழ்வின் மொத்த சூழலையும்  வாசகன் கண் முன் கொண்டு வந்து நிறுத்த பிரயத்தன பட்டிருப்பது புரிந்ததது.

பழைய பெருமை அதன் ஓட்டுவாரொட்டியாக சாதி X தற்கால இளைஞர்களின் சாதி குறித்த மதிப்பீடுகள் X  குடும்ப உறவுகளில் அதன் தாக்கம் X இயற்கை விவசாயம் குறித்த ஆசை ஆர்வம்  Vs அதன் சாதீய கூறுகள் X அரசியல் அதிகாரத்தின் தின் தடித்தோல் மற்றும் கயமைத்தனம் X விஞ்ஞான தொழில்நுட்பத்தின் கட்டற்ற பாய்ச்சல் X தொழில் நுட்பம் சமூக உறவுகளில் ஏற்படுத்தும் சிக்கல்கள்  என கிட்டத்தட்ட ஒரு 360 டிகிரி பார்வையை கொடுக்க முயன்றுள்ளது, 

நாவலின் இவ்வடிவம் எனக்கு மிகவும் புதியதாக இருந்தது - சாதியும், தொழில்நுட்ப மாற்றமும் தான் இடையறாது நம்மை தொடர்ந்து வந்து கொண்டிருப்பவை - மனிதன் இயந்திரங்களுடன் அதிகம் பழக துவங்கிய பிறகு ஏற்படும் உளைச்சலை சமன் படுத்த பழையதை, இல்லாத ஒரு பழைய பொற்காலத்தை, இயற்கையை நாட முயல்கிறான் என தோன்றுகிறது ,

ஆனால் அந்த பழையதும்  இயற்கையும் நமது நுகர்வு மனப்பான்மையும் ஒன்றுக்கொன்று முரணான இடத்தில் அமைகிறது , குறைந்ததே நல்லது என்கிறது பழையது ஆனால் தொழில் நுட்ப சூழலில் நுகர்வே நாட்டுக்கு நல்லது. நுகர்வும் துறவும் எந்த ஒரு சிந்திக்கும் நவீன மனிதனை அலைக்கழிக்கும் இரு முக்கியமான  விசைகள், பல்வேறு இயங்குவிதிகளின், கற்பனையின், யதார்த்தத்தின், ஸ்தூலம் இல்லாத வரலாற்றின், மாறிக்கொண்டே இருக்கும் தொழில்நுட்பங்களின் ஒரு கோட்டு சித்திரமாக அமைந்ததுள்ளது இந்த நாவல். இரும்பை விஞ்சுமா செயற்கை நுண்ணறிவு? காலம் தான் விடை அளிக்கும்.

No comments: