Sunday, May 17, 2020

விபரீத ராஜ யோகம் - கல்யாணராமன்

"விபரீத ராஜ யோகம் " சிறுகதை தொகுப்பு வாசித்தேன் - புத்தகம் குறித்த எனது சில எண்ணங்களை பின் வருமாறு தொகுத்துள்ளேன்


 நீங்கள்  ஆதவனின் "புதுமைப்பித்தனின் துரோகம் " வாசித்திருக்க கூடும் எவ்ளோ சொன்னாலும் வாசகனின் கிறுக்கு புத்தி மீண்டும் மீண்டும் செய்யும் அற்பத்தனம் இருந்தும் தங்களது பெரும்பாலான சிறுகதைகளின் தன்வரலாற்று தன்மை என்னை அவ்வாறு சிந்திக்க வைத்தது - மன்னிக்கவும்


யோசித்துப் பார்க்கையில் இந்த தன் வரலாற்று தன்மையான உரைநடை  கதைகளில் அபாரமாக கூடி வந்திருக்கிறது சரளமாக காலத்தில் முன்னும் பின்னும் செல்லவும் , நிகழ்ச்சி, அடுத்த நிகழ்ச்சி என அன்றாடத்தையும்  அதே நேரத்தில் என்றும் உள்ளவற்றையும் கோடிட்டு காட்டி , ஒரு சேர வாசிக்கையில் , சுகம் வலி என பிரித்தறிய முடியாத நினைவுகளை மீட்டியபடியே வாசிப்பு அமைந்தது .மற்றுமொரு அழகிய உத்தி சட்டென்று கதைக்கோணம் வேறு ஒரு கதாபாத்திரத்தின் பார்வையில் முடிவது - நன்கு ரசிக்கும்படி இருந்தது.


 தன் வரலாறு என்பதாலோ என்னவோ பழைய கதைகள் என்னும் தொனி அனைத்து கதைகளிலும் இருக்கிறது - சில கதைகளின் ஆதாரமான விஷயங்கள் ( ஜல சமாதி, பிரும்ம ஞானம் , சிரிப்பு, ஒரு பூனையும் சில மழைநாள்களும், பெர்னார்ட் ஷா பிறந்தார்  ) இன்று சிக்கலான விஷயங்கள் அல்ல , நடைமுறையிலும் அவை எளிதாக புரிந்து கொள்ள படுகின்றன


மாறாக  "பிம்பங்கள் மாயைகள் லீலைகள்" , "எதிரி " விபரீத ராஜ யோகம்" , "ஏழாம் பிறை", "கழுத்தைப்பிடி"  போன்ற கதைகளில் வரும் ஸ்தூலமில்லாத விஷயங்களே என்னை வசீகரிக்கின்றன - இந்தக் கதைகளே என்னை மிகவும் கவர்ந்தன.


 தங்கள் கதைகள் தூண்டும் நினைவுகள் மனதை மகிழ்வித்தது , நினைவுகள் என்று மட்டும் சொல்லி பழையது என்று போக்கு காட்டி எனக்கு நானே சமாதானம் சொல்லிக்   கொண்டாலும் " குடும்ப பாரம்" அல்லது  பொதுவாக " பொறுப்பு " என்று சொல்லப்படும் விஷயங்கள் குறித்த உரையாடலாகவும் உங்கள் கதைகள் இருக்கின்றன -


குறிப்பாக முப்பத்தைந்தை தாண்டி உள்ள எனக்கு சாப்பாடு, சினிமா, புத்தகம் தவிர வேறு பெரிய ஆசைகள் இல்லை என்பது எனக்கே சிறு சந்தேகத்துடன் ஒப்பு கொள்ளக் கூடிய ஒன்றாக இருந்தாலும் எனது இந்த   stoic ness ஐ சுற்றி உள்ளவர்கள் உரிய முறையில் டீல் செய்து வருகிறார்கள் - அந்நடவடிக்கை சில நேரங்களில் என் " நானை" துளைத்தும் பல நேரங்களில் என் சாமர்த்திய அமைதியாலும் சில நேரங்களில் என் இயல்பான அமைதியாலும் டயர்ட் ஆகாமல் (சைக்கோ திரைப்படம் ) நாட்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன - தன் வரலாறு முற்றும்.


கதைகளில் உள்ள வெளிப்படையான ஆன்மீக சாய்வு , குறிப்பாக , த்வைதம் , அத்வைதம் மற்றும் சூன்யம்  குறித்த விஷயங்கள் கச்சிதமாக இருக்கிறது - காரண காரியம் குறித்து நீங்கள் பெரிதும் அலட்டிக் கொள்ளாதது மகிழ்ச்சி - அதே நேரத்தில் நிஜத்தில் நடக்கும் நிகழ்ச்சிகள்  போல் உள்ளதால் கதைகளின் நம்பக தன்மை கெடவில்லை. 


கதை வரிகளில் " தித்திப்பு"  என்கையில் திஜா வும் "நடிப்பு" என்கையில் ஆதவனும் , இரு ஆசிரியர்களும் நினைவுக்கு வருகிறார்கள்


நல்ல புத்தகம் 

No comments: