Saturday, November 27, 2021

போக்கிடம் - விட்டல் ராவ்

 டேனிஷ்பேட் என்னும் ரயில் நிலையத்தை விரைவாக கடந்தபடி செல்லும் விரைவு வண்டியில் அமர்ந்தபடி சலனம் இல்லாது கண்ட நினைவுகள் மீண்டன, ஊரின் பெயர் குறித்த சிறிய வியப்பு. இன்று போக்கிடம் நாவல் வழி மீண்டும் மேலதிக பரிச்சயம். டேனிஷ்பேட் போன்ற சிற்றூர்களின் ஒட்டு மொத்த சித்திரமும் , தொழில் புரட்சியுடன் உடன் பிறந்த வாழ்விட  இடம்பெயர்வு சித்திரமும் அமைந்த நாவல். 


ஊர் பற்றி, ஊரின் மனிதர்கள் பற்றிய சிறுநிகழ்வுகளாக தகவல் குறிப்புகளாக விரிகிற இந்நாவல். சுகவனம் என்னும் தொடக்கப்பள்ளி ஆசிரியரை மையப்படுத்தி ஊரின் மொத்த வாழ்வோட்டத்தை முன் பின் வரலாறுகளை அறிந்து கொள்கிறோம்.முதல் பகுதி பிறிதொரு எந்த ஊரின் கதையை போலவே அமைந்து மறு பகுதி புதிய சுரங்கம் காரணமான நிகழ்வுகளை பற்றி அமைந்துள்ளது. எந்தவித அதீத சொற்களின் உதவி இன்றியே மெல்லிய அங்கதத்துடன் பரிவுடன் கதைகள் சொல்லப்படுகிறது. 1976ல் வெளிவந்த இந்த நாவலை இன்று வாசிக்கையில் கலைத்தன்மையை உணர வைப்பது இந்த அங்கதமும் பரிவும் தான். எளிமையான சொற்கள் வழியே உணர்ச்சிகரமான தருணங்கள்,  எளிமையாக அதே நேரத்தில் எந்த வித துருவப்படுத்துதல் மற்றும் லட்சிய வாழ்வு குறித்த பிரக்ஞை இரண்டும் அறவே இல்லாத, இப்படி நடந்து விட்டது ஆனால் சமாளித்து விட்டார் என்கிற வகையில்  எல்லாம் அனுமதிக்கப்பட்ட அனைத்தையும் தாங்கி கடந்து செல்லும் "பாவம்" நாவலின் வெற்றி. இப்படி நடந்தது என்று கூறுகையில் அங்கதமும், எவ்வாறு சமாளிக்கப்பட்டது என்பதை பரிவுடனும் கூற முற்பட்டிருக்கிறார் ஆசிரியர் . 

ஒட்டு மொத்த ஊரும் சிந்திக்கும் போக்கை நாவல் தன்னகத்தே விவரிக்க முயன்றிருக்கிறது. ஊரின் மண், விவசாய பயிர்கள், இன்ன பிற சிறு தொழில்கள், பள்ளி இவற்றுக்கு இடையே அமைந்த ஒத்திசைவில் ஒரு புதிய விஷயம் எத்தகைய மாற்றங்களை உருவாக்கும் என்பதை நாவலின் பக்கங்களில் நாம் உணரலாம். எந்த வித grand narrative அமைக்கும் எண்ணம் இல்லாது மக்கள் எப்படி புரிந்தும் புரியாமலும் தங்கள் வாழ்க்கையை சமாளிக்கிறார்கள் என்பதை அங்கதத்தின் துணையுடன் விவரிக்கிறார் விட்டல் ராவ். வரிசையோ ஒழுங்கோ கருணையோ தனிப்பட்ட விழுமியமோ ஒரு திரளின் முன் ஒரு கூட்டத்தின் முன் இவ்விழுமியங்களின் ஸ்திரத்தன்மை குறித்த கேள்விகளும் அடங்கிய நாவல், திரளான விவசாயிகள் மெல்ல மெல்ல திரளான குமாஸ்தாக்களாக ஆசைப்படும் கால மாற்றம் நாவலின் மற்றொரு சரடு.

நாவல் தாயக்கட்டை விளையாடும் பெண்களில் தொடங்கி ஒரு மனிதனின்  யாசகத்தில் முடியும். யாசகத்தை பொறுக்க முடியாத ஒருவன், இதற்கு ஒரு முடிவு தேட உள்ளிருந்து தன் ஒரு துளி கண்ணீரை அனுப்புவான். வெளிவரும் கண்ணீர் எதிரில்  எவரையும் காணாது  செய்வதறியாது வழிந்து மறையும். 

நான் மிகவும் ரசித்த ஒப்புவமை மத்திய மந்திரி ஒருவரது சுரங்கம் குறித்த உரையை மக்கள் கேட்டு தலையை ஆட்டுவதை தெலுங்கில் கூறப்படும் ராம ஜோஸ்யம் க்கு மொழி தெரியாது மக்கள் தலையாட்டுவதற்கு ஒப்பாக ஆசிரியர் அமைத்திருப்பது. எதற்கும் இருக்கட்டும் என்று சாலை அமைக்க இருந்த தாரை மக்கள் பாத்திரங்களில் சேமிக்க இறுதியில் அந்த தாரும் தார் சேமித்த பாத்திரமும் அவர்களுக்கு உபயோகம் இல்லாது போய்விடும் அவலம் நாவலின் ஒரு சோறு பதம். 

வாழ்வில் சில உன்னதங்கள் ஒரளவு வாசித்திருக்கிறேன்,  நதிமூலம், நிலநடுக்கோடு வாசிக்க வேண்டும் . 

No comments: