Friday, December 03, 2021

ரத்த உறவு - யூமா வாசுகி

நாவலில் இரு வேறு உலகங்கள் புலனாகின்றன.

பூ, செடி, மரம் இலை விளையாட்டு பொருள் ,பூச்சிகள் பறவைகள், மிட்டாய், தின்பண்டம் உணவு  கல் மண் கனவு  சாகசம் சூழ்ந்த பால்ய காலங்கள். 

குடும்ப கடமைகள்,  வம்பு சீட்டாட்டம், சாராயம், குடும்பம் மனைவி சண்டை, அடிதடி, குரோதம், வீடு, வாசல், சொத்து, பிழைப்பு, சாக்கடை, குழந்தை வளர்ப்பு,  கண்டிப்பு, குடும்ப வன்முறை, ஆபீஸ் மீட்டிங் சூழ்ந்த பெரியவர்கள் உலகு.



இரு உலகங்களின் நுண்ணிய துல்லிய வர்ணனை நாவலின் பலம். பல்வேறு சம்பவங்களின் வழி இரு உலகங்களும் வாசகனுக்கு பரிச்சயம் ஆகையில் பால்ய நினைவுகள் மனதில்  பூரிப்பையும் , பெரியவர்கள் உலகு தாங்க முடியாத கரிப்பையும் சிறுமையையும் ஏற்படுத்தின. பால்ய உலகின் விந்தையும் புதுமையும் நம்மை ஆட்கொள்கையில் பெரியவர்கள் உலகம் முகம் சுளிக்க வைக்கிறது. 

நாவலின் தலைப்பு வழி, "ரத்த உறவு" என்னும் சொல் வழி மீட்சியே இல்லாது காணப்படும் பெரியவர்களின் இருண்ட உலகில் சிறிய வெளிச்சங்கள் கிடைக்கப் பெறுகின்றன. மிகவும் நுட்பமாக அமைந்திருக்கும் விஷயம் இது. தினகரனின் அத்தனை கொடுமைகளை வாசுகி தாங்குவதற்கு காரணம் தன் தந்தையுடனான ரத்த உறவு காரணமா ?  வாசுகி அக்கா மீண்டும் மீண்டும் தம்பிகளை பொத்தி பொத்தி பெரியவர் உலகில் இருந்து காப்பது எதன் பொருட்டு ? ரமணி  சின்ன மாமா இருவருக்கும் இடையேயான சுமூக ரத்த உறவிற்கும்,  பெரியப்பா, தனபால், தினகரன், அங்காளத்தம்மன் இடையேயான பிணைப்பான  ரத்த உறவுக்கும் உள்ள வேறுபாடு என்ன ?  ரத்த உறவு இல்லாத இரு குடும்பங்கள் இணைகையில் ரமணி தினகரன் உறவு சுழிப்பில் நம்பிக்கையின்மை, குரோதம், வன்மம், அடிதடி என சர்வகீழ்மைகளும் வெளி வருகின்றன. வீட்டிற்கு வெளியே அவ்வளவு அன்புடன் மீனாட்சியின் பிள்ளை மாரியாயி யை பரியும் தினகரன் தன் சொந்த மகளிடம் காட்டும் துவேஷம் புரிந்து கொள்ள முடியாதது. ரத்த உறவு இல்லாத தன் இணை ரமணி மட்டும் தான் காரணமா? குடும்பமே சேர்ந்து ரமணி யை துவேஷிக்க தூண்டிய பொறி எது ? கேள்வியை சற்றே நீட்டி யாதொரு குடும்ப சூழலில் ஒருவர் மட்டுமே திரும்ப திரும்ப அவப்பெயர் சுமந்தோ துவேஷிக்கப்படுவதோ எதனால் ? குடும்பத்தை மீறிய பொது நியாயம் என்ற ஒன்று உண்டா ? விவேக் ஷன்பேக் இன் கச்சர் கோச்சர்  (2015) நினைவுக்கு வந்தது. ரத்த உறவு 2000 த்தில் தமிழினி வெளியீடாக  வந்துள்ளது. 

நாவலின் முடிவில் சிறுவர்கள் மகிழ்ந்து இருக்கும் சித்திரம் மன நிம்மதியை அளித்தது. கவித்துவம் மிளிரும் வரிகள் ஆசுவாசபடுத்தினாலும் குடும்ப வன்முறை தருணங்களின் துல்லிய விவரிப்பு பயத்தையும் அருவருப்பையும் ஏற்படுத்தின.

No comments: