Wednesday, December 22, 2021

முறையிட ஒரு கடவுள் - சர்வோத்தமன் சடகோபன்

முறையிட ஒரு கடவுள் - சர்வோத்தமன் சடகோபன் அவர்கள் எழுதிய 14  சிறுகதைகளின் தொகுப்பு. முதல் புத்தகம்.


தஸ்தாயெவ்ஸ்கியின் புத்தக சாலை - ஆசிரியரே முதல் வரியிலேயே தானாகவே போட்டுடைத்து குறிப்பிடும்  கரமசோவ் சகோதரர்கள் கத்ரீனா - டிமிட்ரி சாயலில் அமைந்த ஒரு சிறுகதை,  தலைப்பே நன்றாக அமைந்து விட்டதே மேலதிக நாவல் அல்லது ஆசிரியர் சம்பந்தப்பட்ட குறிப்புக்கள் சிறுகதையின் வீச்சை குறைக்கிறது என்பதே உண்மை. நாவலில் வருவது போன்ற சம்பவம் எனினும் இது முற்றிலும் வேறு நூற்றாண்டில் வேறு ஒரு சூழலில் நடக்கிறது -  எண்ணூறு பக்க நாவலின் ஒரு பகுதியை சிறுகதையின் பத்து பக்க குறிப்புகளில் காண்பது ஒரே நேரத்தில் சுவாரஸ்யம் ஆனால் கடினம். 

ஷெனாய் கசிந்து கொண்டிருக்கிறது , உலவ ஒரு வெளி , பிளவு  -  தேர்ந்தெடுத்த  ஒரு பிரகடனமோ அல்லது முன்னமே பொது வெளியில் உள்ள பிரகடனங்கள் குறித்த கச்சிதமான எதிர்வினையாக அமைந்துள்ளன. சிறுகதைகளாக  அல்ல . தமாஷ் சும்மா எழுதிப் பார்த்த கதை -  Monologue ஆ அமைந்ததால் இருக்கலாம்.

ஜனனம், நீலம், பிம்பம் - நன்றாய் அமைந்திருக்கும் கதைகள் - தந்தை மகன் உறவுகளை நாம் இன்னும் விரித்துப் பேச வாய்ப்பை வழங்குகிறது - மகனிற்கு மூன்று வாய்ப்புகள் அவன் முன்னே உள்ளன - ஜனனம் கதையில் வருவது போல்  தந்தையை நிராகரித்தல் அல்லது நீலம் கதையில் அமைந்தது போல் ஒரு விலகலு டன் எட்ட நிற்பது , அல்லது பிம்பம் கதையில் வருவது போல் தந்தை மகன் ஒருவரோடு ஒருவர் கரையும் நிலை. இவை கட்ட சட்டமான விதி அல்ல. தன் தந்தையை கூர்ந்து கவனித்து வந்ததாக தனது வலைப்பதிவில் சர்வோத்தமன் குறிப்பிட்ட்டிருக்கிறார் - இக்கதைகள் அவற்றின் பிரதிபலிப்பாக இருக்கலாம்.

பூதக்கண்ணாடி, சவரக்கத்தி, உதவி, டிராகன், நடிகர் - மனதுக்கு மிகவும் நெருக்கமாக அமைந்த கதைகள் - சமகாலத்தின் பொதுக் கண்ணோட்டத்தை பிரதிபலிப்பதாக அமைந்துள்ள கதைகள் - ஒட்டுமொத்தமாக தொகுத்து வாசிக்க ஏற்ற கதைகளும் கூட , கதைகளின் உட்ப்ரதி அல்லது அக்கதையின் கண்ணோட்டம் பின் வரும் எல்லைகளில் அமைந்துள்ளது - 

பூதக்கண்ணாடி - நண்பர்கள் இருவருக்குமான வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஆனால் செயல்களாலும் நிகழ்வுகளாலும் புரிந்துக்கொள்ளப்படும் ஊடாட்டம் குறித்து பேசுகிறது - சிறிது ஆசிரியர் பார்வையும் கதையை விளக்க முயல்ககையில் கதையின் கலைத்தன்மை குறைந்ந்தாலும் பேச பொருள் மூலம் மிக முக்கியமான இடத்தை தொட்டிருக்கிறது. நட்பை மீறிய எதோ ஒன்று வாழ்வில் அடைய இருப்பது போலவும் இல்லாதது போலவும் உள்ளதாகவும் மனதில் பதிந்தது -  முப்பதை  நெருங்கும் நண்பர்களிடேயே பேசுபொருளாக உள்ள " செட்டில் " ஆகும் அம்சம் குறித்த ஊடாட்டம் இந்தக் கதை, நண்பனே ஒருவனுக்கு  போட்டியாளன் ஆகும் பரவலான நிலையும் , ஒருவனை விட தாழ்ந்த நிலையில் ? இருக்கும் இன்னொருவனின் அண்மையை நாடும் இடங்களின் உண்மை இக்கதையின் பலம். முன்னே கூறியது போல் ஆசிரியர் சற்று தேவைக்கு அதிகமாகவே இப்புள்ளியை விளக்குகையில் கதையின் கலைத்தன்மை குறைகிறது.  

சவரக்கத்தி , நடிகர் - கதைகள் - நாம் தற்காலங்களில்  எல்லா விஷயங்களிலும் ஊடுருவி அறிய விரும்பும் போக்கை குறித்து - ஏன் எப்படி எவ்வாறு என்று நுண் தகவல்களால், நிச்சயத்தன்மையை  முடிவிலி வரை அறிய விரும்பும் நவீன மனிதனின் ஆராயும் போக்கை பிரதிபலிக்கின்றன - சில விஷயங்களை ஊடுருவாமல் ஆராயாமல் நம்மால் இன்று இருக்க முடியுமா என்பது சந்தேகமே, நடிகர் கதை பாரதிமணி அவர்களின் பாதிப்பில் உருவானதாக வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளார் 

உதவி - ஒரு விஷயத்திற்கு தகுதி ஏற்படும் முன்னரே நம் பேராசையின் காரணமாக நாம் அதை அடைய நினைக்கையில்  நாமே உருவாக்கி கொள்ளும் பாவனைகள் பரிதாபங்கள் குறித்த கதை இது, பிம்பம்கதையிலும் இது வெளிப்படுகிறது - நம் சராசரி தன்மையை எல்லையற்ற பாவனைகளால் நாம் மறைக்க முயல்கிறோம். என்றோ திரை விலகுகையில் நாம் தலை குனிகிறோம். இருப்பினும் விடாது நாம் மேலதிக பாவனைகள் கொண்டு நம்மை நாமே திசைதிருப்பிக்  கொள்கிறோம். சினிமா ஆசை சம்பந்தப்பட்ட பின்னணி கொண்டது இக்கதை . 

டிராகன் - மிகவும் நுட்பமான கதை - நாம் "சமரசம்" "Adjustment"  என்று எங்கோ வேடிக்கைப் பார்த்துக் கூறிக்கொண்டிருக்கையில் சட்டென கத்தி நம் பக்கம் திரும்புவதான கதை - எதிர்பாராத கண்ணோட்டத்தில் முடியும் கதை 

தனிப்பெருங்கருணை - காகிதக் கூடு நிகழ்வுக்காக முன்னமே வாசித்தது - , நம் மரபின் அத்தனை ஆன்மீக பார்வைகளும் பின் புலமாகவும் செயலின்மை முதல் அதீதம் வரை , அனைத்தையும் இணைக்க வல்ல மைய தரிசனமான பேரொளியை அறிய ஒரு குறியீட்டு கதையாக  அமைந்தது இக்கதை , மரபான இன்னொரு கதையான பிள்ளையார் முருகன் உமை சிவன் குடும்ப கதையும் பிரித்தளிக்க முடியாத ஞானப்பழத்தை குறித்தும் இணைத்து வாசித்தேன். 

அட்டைப்படம் அருமை - கல்மனிதன் கணினி நிரல் வழி அவனது பிரித்து வைக்கப்பட்ட பாகங்கள்  இணைக்கப்பட்டு  தன்னை வெளிப்படுத்தத்  துவங்குவது போல.

சர்வோத்தமனின் அடுத்த புத்தகத்தை கண்டிப்பாக வாசிப்பேன். 

No comments: