கணையாழி தொடங்கியது முதல் 1988 வரையிலான அசோகமித்திரனின் கட்டுரைகள், அவரது பொறுப்பாசிரியர் குறிப்புகள் அடங்கிய நூல், 1965 ல் தொடங்கும் முதல் கட்டுரை கால வரிசைப்படி 1988 வரை அமைந்துள்ளது , 1996 ல் எழுதப்பட்ட கணையாழி தொடர்பான குறிப்புகள் கடைசி அத்தியாயமாக, நூல் நிறைவு பெறுகிறது. நூலின் முடிவில் கொடுக்கப்பட்டுள்ள, பக்க எண்ணுடன் கூடிய பொருள் பெயரகராதி சிறப்பு.
ஏறத்தாழ இருபதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளின் இலக்கிய, சமூக ,அரசியல் நிகழ்வுகளை பிரதிபலிக்கும் கட்டுரைகள் கொண்ட நூல் இது, அந்த நாளைய பரபரப்பின் உடனடி எதிர்வினைகள் தொடங்கி படைப்பிலக்கியத்தின் தத்துவம் குறித்த குறிப்புகள் வரை கொண்ட நூல். வெவ்வேறு நூல்கள் ஆளுமைகள் குறித்த அறிமுக நூலாகவும் இப்புத்தகம் அமைந்திருக்கிறது. நூலின் உள்ளடக்கத்தை குறிப்புகளாக எழுதவும் , பிடித்த பகுதிகளை சற்று விரிவாக தொகுக்கவுமே இந்தப் பதிவு
நூலின் உள்ளடக்கம் குறித்த தேர்ந்தெடுத்த குறிப்புகள்
டால்ஸ்டாய் எழுதிய தொடர்கதை (1965)
ஒரே மொழியால் பிரிக்கப்பட்ட நாடுகள் - இங்கிலாந்து அமெரிக்க இலக்கியம் தொடங்கி , இலங்கை தமிழ் இலக்கியம் அவற்றிற்கு தமிழ்நாடு வாசக மற்றும் பதிப்புலகம் அளிக்கும் இடம் குறித்த விரிவான குறிப்புகள். (1969) , இவ்வாறான ஒரு கட்டுரையின் தலைப்பு "சேதுவின் இரு கரைகள்" (1978).
சமீக் க்ஷா என்றொரு மலையாள இதழ் குறித்த குறிப்பு - மூன்று இதழ்கள் வெளிவந்துள்ளன 1) இந்திய இலக்கியம் 2) மறுமலர்ச்சி 3) புதியன - இவற்றில் மலையாள எழுத்தாளர் ஆனந்த் எழுதிய நூல் பற்றிய குறிப்பு வருகிறது , - இத்தொகுப்பிற்கு இணையாக தமிழில் அமி குறிப்பிடும் நூல் " குருஷேத்ரம்" (1972 )
தஞ்சை மறு விஜயம் - ஆடுதுறை விவசாய ஆராய்ச்சி நிறுவனம் IR8 பசுமை புரட்சி - கீழ்வெண்மணி என்ற இரு விஷயங்கள் ஒரே கட்டுரையில் அமைந்துள்ளது - கட்டுரையின் தலைப்பின் கீழ் அமைந்துள்ள குறிப்பு - " An Army marches on its stomach ....." (1972)
பாபு ராவ் படேல் குறித்த குறிப்புகள் - தன்னை மிகவும் பாதித்த ஆளுமையாக இவரை குறிப்பிடுகிறார் அமி.இசை ஆளுமை எம் பி ஸ்ரீனிவாசன் அவர்கள் குறித்து மிகுந்த மதிப்புடன் குறிப்பிடுகிறார், இளையராஜாவின் " எப்படி பெயரிட" நிகழ்ச்சிக்கு பெரும்பாலான கர்னாடக சங்கீத பிரமுகர்கள் வரவில்லை என்றும், இளையராஜாவின் சங்கீத கனவுகள் நூலை மிகவும் மதிப்புடன் குறிப்பிடுகிறார்
சி சு செல்லப்பா குறித்த கட்டுரையில் சுதந்திரம் , காந்தியவாதம் குறித்த குறிப்புகளில் பின் வருமாறு கூறுகிறார்- " சுதந்திரம் என்பதற்கு எவ்வளவு முயன்று பார்த்தாலும் திட்டவட்டமான இலக்கணம் எல்லைக்கோடுகள் தர முடியாது , இந்த அரூப தெளிவு காண முடியாத தன்மை தான், ஸ்தூல செயலால் அடைந்த ஒரு நடைமுறைச் சுதந்திரம் ஏமாற்றத்திலும் விரக்தியிலும் இட்டு செல்லும் காரணம்" - " காந்தியத்தின் சில அம்சங்களை மட்டுமே கணக்கில் எடுத்துக்கு கொண்டு அவர் காலத்தில் கடைபிடிக்கப்பட்டது போல் இன்று கடைபிடிக்கப்படவில்லை என்று மேல் பூச்சான காரணம் சொல்லி மீண்டும் ஒரு அலுப்பு - "
அக்காலத்திய நவீன நாடகங்கள், பரீக்க்ஷா , கோமல் , மெட்ராஸ் PLAYERS குறித்த தனது குறிப்புகளில் " ALLEGORICAL அல்லது குறியீட்டு கதாப்பாத்திரங்கள் எவ்வாறு அந்தந்த சமூக பிரிவின் சின்னங்களாக மட்டுமே நின்று விடுகின்றன , தனி உணர்ச்சிகள் ஆசாபாசங்கள் இல்லாத காரணத்தால் நாடகம் பார்ப்பவர்களுக்கு தட்டையான அனுபவங்களே கிடைக்கின்றன என்று குறிப்பிட்டுள்ளார் , உத்தி குறித்து பல்வேறு இடங்களில் மீண்டும் மீண்டும் "உத்தி கலையாகாது" என்று வலியுறுத்துகிறார்.
அமி பரிந்துரைக்கும் சில புத்தகங்கள் " விடுதலை போரில் தமிழகம் - மபொசி" , " மார்க்சியமும் இலக்கியமும் - ஏ ஜே கனகரட்ணா , " Theory of the Film : - Bela Balazs , Hungary
********
படைப்பிலக்கிய வெற்றி குறித்து " முதல் மரியாதை படத்தில் - " அழகில்லாத எளிமையான கிராமத்துப் பெண்ணை கதாநாயகியாக அப்படத்தில் கற்பனை செய்து பார்த்தால் படம் இவ்வளவு வெற்றி படைத்திருக்குமோ ? ஆதலால் இந்த சந்தேகம் நூற்றாண்டு படைப்பிலக்கிய காரர்களுக்கு ஒரு வினாவை எழுப்பும் , அவர்கள் வெற்றி படைப்புக்காகவா அல்லது தகவல் பரிமாற்றுச் சாதனங்கள் பொது மக்களிடையே ஏற்படுத்தும் மனத்தத்துவ பாதிப்பை நுண்ணிய வழியில் கையாளத் தெரியும் சாமர்த்தியத்திற்காகவா ? (1978)
நிறுவனமையமாதல் குறித்து - இந்தக் குறிப்பு பிச்சையிடுவதன் தர்மம் காலம் காலமாக இருந்து வருவது குறித்தும் , இன்றைய சமூக சூழலில் பிச்சை அவமான சின்னம், சமூக பிரச்சனையாக கருதப்படுவது குறித்தும் குறிப்பிடுகிறார். தனிமனித பிச்சைகளை அரசாங்கம் குறைத்து வரும் நேரத்தில் அரசாங்கம் தரும் பணமும் உணவும் கண்ணிய குறைவாக உணரப்படுவதில்லை என்று கூறி - நிறுவனமயம் வழி இங்கு தர்மமே மாற்றம் அடைந்து விடுகிறது என்று கூறுகிறார் - இதைத் தொடர்ந்து காந்தி சிறுகதையில் வரும் குறிப்புகளை போலவே இயந்திரமாதல் குறித்த தனது பார்வையை " நேரடி சம்பந்தம் பொறுப்பு உணர்வு முதலியவற்றை அனுபவிக்கும் தருணங்கள் தவிர்க்கப்பட்டு விடுகின்றன" சாவு வாழ்வு இரண்டும் impersonal ஆகி விடுவதில் குற்றவுணர்ச்சி அகன்று விடுவது போல ஒன்றியுணர்வதற்கு இடமில்லாது போய் விடும். போய் விடுகிறது. நிறுவன தர்மமும் அதில் தான் முடிவடைய முடியும்" (1982)
சராசரி குறித்த இன்னொரு கட்டுரையில் கட்டிட கலை மேதை Frank Llyod Wright கூறியதாக அமி குறிப்பிடுவது " கற்றுக்குட்டி என்ற நிலையில் தவிர யாரும் எந்தப் போட்டியிலும் கலந்துக் கொள்ளக் கூடாது எந்தப் போட்டியும் உலகத்துக்கு சிறப்பான எதையும் கண்டெடுத்து தந்ததில்லை", " போட்டி நடுவர்கள் எப்போதும் சராசரிகள். இந்த சராசரிகனின் முதல் வேலை சிறப்பானதை களைந்து எறிந்து விட்டு, சராசரியை பொறுக்கி எடுப்பது. எந்த போட்டியின் விளைவும் சராசரிகள் சராசரிகளுக்குகாக சராசரிகளை தேர்ந்தெடுப்பது தான் " (1983)
தலைமுறை இடைவெளி குறித்து " ஒவ்வொரு தலைமுறைக்கும் - அது 33 ஆண்டுகள் இடை வெளியுள்ளதானாலும் ஐந்தாண்டுகள் நீண்டதானாலும் அதனதற்குரிய சிறப்பை காண முடிகிறதோ இல்லையோ, அசட்டுத்தனத்தைக் காண முடிகிறது , இந்த " அசடு" என்பது தமிழ் மொழிக்கேயுள்ள ஓர் சிறப்பு கருத்து வடிவம். இருபத்திரண்டு ஆண்டுகளாகும் கணையாழிக்கு ஒவ்வொரு ஐந்தாண்டிற்கும் உரிய அசட்டுத்தனத்தை காண முடிகிறது. அசட்டுத்தனம் என்பதை இகழ்ச்சிக்குரியதாக மட்டும் எண்ணக் கூடாது. தனித்துவம் என்று கூறிக் கொள்ளலாமா ? " ( 1986)
தப்பித்தல் குறித்து - சொல் புதிது ஜெயமோகன் அவர்களுடனான நேர்காணலில் " கதாப்பாத்திரத்தின் -"Sublimation" குறித்த கேள்விக்கு - அமி அவர்கள் " Evasion" என்பதையே தன் படைப்புகளின் பிரதான அம்சமாக கருதுவதாக கூறுகிறார் - இந்நூலில் தப்பித்தல் என்றொரு அத்தியாயத்தில் சற்று விரிவாகவே இதை புரிந்து கொள்ளும் வகையில் கூறியிருக்கிறார் - "கதை கவிதை கட்டுரை பிரதானமாக நடுத்தர வர்க்கத்து பிரக்ஞையிலிருந்து எழுந்து, நடுத்தர வர்க்கத்து உணர்வுகளுக்கு ஊட்டமளிப்பதாகவே இருந்திருக்கின்றன. ஒரு விதத்தில் நடைமுறை வாழ்க்கையில் அடைய முடியாததோர் நிறைவை கற்பனையிலாவது அடைவதற்காக நடுத்தர வர்க்கம் ஒரு தப்பித்தல் சாதனமாக எழுத்தை அதாவது "படைப்பிலக்கிய எழுத்தை உயிரூட்டி வளர்ந்திருக்கிறது என்று கூற வேண்டும் " ......"ஆனால் விடுதலை மீட்சி என்பவை சந்தேகமூட்டும் சொற்கள், வரலாற்றின் கொடூரக் கொடுங்கோலர்கள் அனைவரும் இச்சொற்களை பயன்படுத்தி இருக்கிறார்கள்" ...."முதலில் தப்பித்தல் உந்துதலிலிருந்து நாம் விடுபட வேண்டும் " ... "தப்பித்தல் இயக்கங்களை தெரிந்து கொள்வதற்கும் அவற்றினின்று விடுபடுவதற்கும் உள்ளூர ஒரு உந்துதல் தேவை. அப்படி தோன்றாதபடி அந்தத் தப்பித்தல் மயக்கம் பார்த்துக் கொள்ளும். இலக்கியத்துக்கு இந்த மயக்க அம்சம் உண்டு. கணையாழி வரையில், முடிந்த அளவில் இந்த மயக்கத்தை குறைக்க முயற்சி ஒரு திக்கிலிருந்தாவது தொடர்ந்து இருந்து வருகிறது ..... இலக்கியமே இறுதியும் முடிவும் அல்ல என்பது கணையாழியில் பல முறை கூறப்பட்டிருக்கிறது அல்லவா ? ".... " மயக்கம் தவிர்க்க வேண்டும் .. தப்பித்தல் கூடாது ..... தமிழில் இலக்கியம் என்ற சொல்லையே தவிர்ப்பது நல்லது என்று தோன்றுகிறது (1987)
***
No comments:
Post a Comment