நற்றிணை யுகன் மற்றும் சா கந்தசாமி அவர்களின் தேர்வில் 2011 ல் நற்றிணை வெளியீடாக வந்துள்ள 18 கதைகளின் தொகுப்பு.
பெரும்பாலான கதைகள் vignettes போல கதாப்பாத்திர சம்பாஷனைகள் வழி நகர்கின்றன. எளிதான உரையாடல் போல தோன்றினாலும் உறவுகளுக்கு இடையே உள்ள நுட்பமான, அபத்தமான, உணர்வுப்பூர்வமான இடங்களை தொட்டுச் செல்கிறது. கதைகளின் போக்கு,பொதுவான உட்பிரதி, தத்துவம் என்று கருதினால் நுட்பம், உணர்வெழுச்சி, அபத்தம் என்று இந்தக் கதைகளை வரையறை செய்யலாம்.
தக்கையின் மீது நான்கு கண்கள், சாந்தகுமாரி கதைகளை நுட்ப வரிசை கதைகளில் தலையாயன எனச் சொல்லலாம். உறவுகளுக்கிடையேயான நுட்பமான எல்லையை எந்த வித அலட்டலுமின்றி சொல்லும் கதைகள், கதைகளின் இறுதியில் வாசகன் கண்டடையும் இடங்கள் ஒரு ஆர்பாட்டம் இல்லாத அதிர்ச்சி தரும் இடங்கள்.
வான்கூவர்,உயிர்கள் மற்றும் அப்பா கதைகள் காட்டும் உறவுகளின் உணர்ச்சி கொந்தளிப்புகள் மிகவும் உண்மையாக மனதுக்கு நெருக்கமாக அமைந்தன. குறிப்பாக "வான்கூவர்" கதையில் பாட்டியின் மடியில் கதை கேட்கும் சிறுவன் பறக்க துவங்குவதாக நினைத்து கொள்ளும் இடங்கள் - உறவுகள் பரஸ்பரம் ஏற்படுத்தும் உணர்வு நிலையே பொருந்த சொல்ல மிகவும் நல்லதொரு உருவகமாக இந்த இடம் இருக்கிறது.
கதைகளில் தீடீரென ஒரு கை தோன்றி மொத்த ஆட்டத்தையும் தெளிந்த நீரோடையை கலைக்க முயலும், அந்தக் கையை நாம் சா கந்தசாமியின் கதைள் வழி அபத்தம் என்று வரையறைப்படுத்த முயலலாம். இன்னதென்று வரையறுக்க முயல்கையில் அவற்றினின்று தப்பி நிகழும் இடங்களும் இவர் கதை உலகில் உள்ளன, தீராத வலி பற்றிய "மாய வலி "கதையும் , நான் மிகவும் ரசித்த "எதிர்முனை" கதையும் நாம் இன்னும் வரையறுத்து கொள்ளாத இடங்களை பற்றி பேசுகின்றன.
அமி தனது கதைகளின் முக்கிய போக்காக evasion தப்பித்தல் என்று குறிப்பிடுகிறார், சா கந்தசாமி அவர்களின் கதை உலகத்தின் பிரதானம் "acceptance" என்று கருத வாய்ப்புள்ளது.
சா கந்தசாமி,முன்னுரையில் பின்வருமாறு கூறுகிறார் "இலக்கிய படிப்பு அப்படியொன்றும் வாழ்கைக்குத் தேவையானது இல்லை. வாழ்வது தான் முக்கியம். பணம் சம்பாதிப்பது தான் அவசியம் .பணம் சம்பாதிக்க ஆளாய் பறக்கும் மனிதர்களால் இலக்கியம் படிக்க முடியாது தான்.எல்லாருக்கும் எல்லாம் என்பது கிடையாது.எல்லாரும் ஒன்று என்பது உயர்ந்த இலட்சியந்தான். ஆனால் ஒன்றில்லை என்பது நிதர்சனம். அக்கறை கொண்டவர்கள் ஈடுபாடு கொண்டவர்கள் படிக்கிறார்கள்.அதன் பயனை அடைகிறார்கள். இலக்கியத்தில் பயன் என்று அறிந்து இருப்பதும் அறியாமல் வாழ்வதும் ஒன்று தான்.அது நல்வாழ்க்கை. ஆனால் நல்வாழ்க்கை என்பது தனியானது இல்லை. எத்தனையோ பிரச்சினைகளுக்கு இடையில், வாழும் ஒரு நல்வாழ்க்கை வாழ இலக்கியம் தன்னளவில் துணை செய்கிறது. ஆனால் இலக்கியத்தைப் படித்து அனுபவிக்க உள்ள ஒரே வழி அதனை படிப்பது தான். படிக்கிறவர்கள் பாக்கியசாலிகள் என்று அதன் காரணமாக சொல்லப்படுகிறார்கள்".
No comments:
Post a Comment