கடைத்தெரு பின்புலத்தில் அமைந்துள்ள பதினோரு கதைகள் அடங்கிய சிறுகதைதொகுப்பு இந்நூல்.
சவடால் சாகசம்
சாலை பஜார் கடைத்தெருவின் வகை மாதிரி கதாப்பாத்திரங்களின் சவடால், சாகசம், அனுபவ புதுமைகளே இக்கதைகளை அணுக சுவாரஸ்யமான துவக்கப் புள்ளி.
இந்த சவடாலும் சாகசமும் வெளித்தோற்றங்கள் மட்டுமே, தினப்படி வருமானத்தை நம்பியிருக்கும் எண்ணற்ற மனிதர்களின் வாழக்கை போராட்டதின் கலை முகப்பாக இந்த சாகசங்கள்
வயிறு இன்னபிற
பொருளாதார கடை நிலை மனிதர்களின் இவ்வாழ்க்கை போராட்டம் வழி நமக்கு பரிச்சயம் ஆகும் சிறு கடை முதலாளிகள். இவ்விருவருக்கும் இடையே ஏற்கனவே இறுதி செய்யப்பட்ட எல்லைகளை நாம் அறிகிறோம். எல்லைகள் காரியார்த்தமாகவும் அனுபவபூர்வமாகவும் எதேச்சையாகவும் பரஸ்பர தயவில் வெகு சில நேரங்களில் மறைந்து மீண்டும் தோன்றுகிறது. இந்த தருணங்களே கதைகளின் எளிய சாகச சவடால் முகப்புகளை தாண்டி அமைந்துள்ள குறிப்பிடத்தக்க அம்சம்.( எட்டாவது நாள், உம்மிணி, பாச்சி)
பெரும் பாதகத்தின் நிழலில்
ஏறத்தாழ அனைத்துக் கதைகளின் நிகழ்வுகளில் ஒரு பெரும் பாதகம் மையமாகவோ கதை ஓட்டத்தின் ஒரு புள்ளியாகவோ வருகிறது. கதை இப்பாதகத்தின் வீச்சை மட்டுமே நம்பியிருக்காது இந்த பாதகத்தின் அருகே அதை கடந்த செல்லும் வகையில் வேறு சில விஷயங்களை கூறிச் செல்கிறது. நாம் பெரும் பாதகம் என்று எண்ணும் விஷயங்கள் வேறொரு தளத்தில் வேறு ஒரு பொருள் கொள்ளும் வகையில் அமைந்திருப்பது கதைகளின் கலை வெற்றி. ( தூக்கம் வரவில்லை, உம்மிணி)
அசாத்தியம்
இவரா இவனா இதை செய்தது ? நானா இப்படி செய்தது ? எனக்கா இப்படி ? (உம்மிணி, காளை, விஸ்வரூபம்) எனும்படியான கதை அமைப்பு கடைத்தெருவின் மற்றுமொரு சாளரத்தை நமக்கு திறந்து காட்டுகிறது. எளிய விளையாட்டுத் தனமான கதாப்பாத்திர குழப்பங்கள் வேடிக்கை நிகழ்வுகள்( கோமதி, பறிமுதல்) முதல்,கதைக்கு முற்றிலும் பூடக தன்மை அளிக்கக் கூடிய நிகழ்வுகள் வரை கதாபாத்திரங்களின் அசாத்திய செய்கைகள் நம்மில் சில நேரங்களில் குறு நகையையும் சில நேரங்களில் பலத்த அதிர்ச்சியையும் ஏற்படுத்துகின்றன (ஈடு, தூக்கம் வரவில்லை ,எட்டாவது நாள்).
அநித்யம்
தினப்படி சாகசம் , எப்பொழுதோ மறைந்து உடனே மீண்டும் தோன்றும் சுமூக எல்லைகள், மறக்கவியலாத பெரும் பாதகத்தின் நிழலில் நாம் அனைத்து கதைகளின் மைய இழையாக உணர்வது அநித்யத்தை. அனைத்து கதைகளின் போக்கு பெரும்பாலும் "முன்பிருந்தவர் இப்போது இல்லை" "முன்பிருந்தது இப்போது இல்லை" என்ற அநித்ய நினைவுகள். காலத்தின் கடைத்தெரு தன்னகத்தே கொண்டுள்ள நிர்தாட்சண்யம் இதன் மூலம் புலனாகிறது.
No comments:
Post a Comment