Monday, May 16, 2022

வெறுங்கால் நடை - சு வெங்குட்டுவன்

வெறுங்கால் நடை - சு வெங்குட்டுவன் 


13 சிறுகதைகள் கொண்ட தொகுப்பு.  இவற்றில் பெரும்பாலான கதைகள் ஒரு `தினுசான மனிதர்கள்` குறித்த அக்கறையாய் அமைந்து வந்திருக்கிறது.  - அம்மனிதர்கள் முற்றிலும் வினோதமான  ஆட்கள் அல்ல, அதே நேரத்தில் மைய நீரோட்டத்தில் இருந்து சற்றே விலகிய  சூழலோ குணமோ மன அமைப்போ கொண்டவர்கள். அம்மனிதர்கள் குறித்த இந்தக் கதைகள், யதார்த்த நடையில், கதைச்  சூழலின் எல்லையில்லா  புறப்  பொருட்களின் விவரிப்பின் வழி,, கதை மாந்தரின் மன ஓட்டத்தை தெளிவாக படம் பிடித்தபடி, மிகுந்த நம்பகத்தன்மையோடு, சுவாரஸ்யமாக  அமைந்திருக்கின்றன. உரையாடல்களில் இடம் பெற்றுள்ள வட்டார வழக்கு  துருத்தி கொண்டு இல்லாமல் மிக அமைதியாக கதை உலகை நெருங்கச் செய்ய உதவுகிறது -  சூழலையும் கதையின் அனுமானத்தையும் யதார்த்த நடையில் அமைத்து, கதையின் மைய உரையாடல்களை வட்டார வழக்கில் அமைத்திருப்பதால் கதைகளில் மேலும் அமைதி கூடுகின்றன. தெளிவும் அமைதியும் சுவாரஸ்யமும்  அமைந்த இந்தக் கதைகளை  குறிப்பிடத்தக்க தளத்திற்கு நகர்த்துவது கதையின் வடிவத்தில் கூடி வந்த, கதைகளின் முத்தாய்ப்பாய் அமைந்த  " அந்தக் கடைசி வரிகளே ". பெரும்பாலான கதைகளின் அந்தக் "கடைசி வரிகள்" கதையின் மொத்த புதிர்த்தன்மையை கூட்டி,   கதையின் முடிச்சை மேலும் இறுக்கியோ அவிழ்த்தோ அல்லது முற்றிலும் புதிய தளத்தில் கதையை  திறக்கும் வகையினதாகவோ அமைந்திருக்கின்றன  . வெறும் வேடிக்கைக்காக எழுதப்பட்ட கடைசி வரிகள் அல்ல இவை - கதையின் ஒட்டு மொத்த வடிவத்திலும் ஸ்வாரஸ்யத்திலும் கூடிவந்த ஆசிரியனின் அறிவார்ந்த "பொடிச் சிரிப்பு" இந்தக் கடைசி வரிகள்.

ஜோதிட ஆலோசகரான ஆசிரியர் மரபின் மீதான தனது நம்பிக்கையையும்,  ஒட்டு மொத்த உலகியல் விஷயங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்த, பிணைந்த அம்சத்தின் ஆன்மீகத்தையும், கதைகளில் காட்ட முயற்சித்திருக்கிறார்.  உண்மைத் தேடல் இட்டு செல்லும் விகார இடங்களை " ஆபரேஷன் சிந்தாமணியும்" , பணத்தின் மதிப்பையும் பணத்தின் ஆசையையும் பிரிக்கத் தெரிந்த ஆன்மீகத்தை "வாஸ்தவம்" கதையும், ஆன்மீக நாட்டம் அளிக்கும் தனிமையின் பிறழ்வை "வெறுங்கால் நடை" கதையும்  மிக எளிமையாக உள்ள பெரிய ஆன்மீக உண்மைகள் குறித்த கதையாக "ஈஷோபதேசம்"  கதையும் அமைந்திருக்கின்றன. 

Ganesh Pyne அவர்களின் அசர வைக்கும் முகப்போவியம் மனதை என்னவோ செய்கிறது. "வெறுங்கால் நடை" சு வெங்குட்டுவன் அவர்களின் முதல் சிறுகதைத் தொகுப்பு - மணல்வீடு வெளியீடு.

1 comment:

venkuttuvan blogspot,in said...

மிக்க நன்றிங்க