Friday, April 21, 2023

கதீட்ரல் - தூயன்

கதீட்ரல் சுவாரஸ்யமான வாசிப்பு அனுபவத்தை வழங்கியது, வெகு நாளைக்கு பிறகு என்னால் ஒரே நாளில் வாசித்து முடிக்க முடிந்த நாவல், கதையின் இழைகள் ஒன்றோடு ஒன்று இணைந்து இயல்பாக மலர்ந்துள்ளன. 


மனம் அறிதலின் பத்து வாயில்களில் ஒன்று (ஹெச் எஸ் சிவபிரகாஷ் )  அந்த மனதின் எல்லைகளை அறிய விழையும் விஞ்ஞானமும் மெய்ஞானமும் கண்டடையும் விஷயங்கள் ஏற்கனவே இங்குள்ள ஒன்றை துலக்கி தெளிபவை, புதிய ஒன்று என்று தோன்றுவது வார்த்தை சுவர்களின் ஜாலத்திலனாலோ ? எத்தனை வார்த்தைகள் எத்தனை சுவர்கள், எத்தனை யத்தனம் எத்தனை ஆறுதல். 


மனதை நேரத்தாலும் புவியமைப்பாலும் கட்டமைக்க முடியும் என்பதையே கதீட்ரல் காட்டுகிறது , ஒரே நேரத்தில் மிகுந்த இயல்பாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. இரு முனைகளில் இருந்து தோன்றிய எமிலியும் அவந்திகையும் தேடுவதை எளிதாக லேசாக நஞ்சுண்டன் எதிர் கொள்கிறார், தொலைத்து விட்டார். கவிஞர் ஷங்கர்ராமசுப்ரமணியன் சொல்வார் " மூத்தோர் ஏதோ ஒரு விவேகத்தால் பெரிதாக எதையும் வரலாறாக பதிவு செய்ய முனையவில்லை என்று " ( நினைவில் இருந்து எழுதுகிறேன் ) , நஞ்சுண்டன் தொலைத்தது குறித்து பெரிதாக வருத்தப்பட மாட்டார் என்று நினைக்கிறேன், அவர் வருத்தப்பட்டது போல ஆப்ரஹாம்  கதைத்திருந்தாலும். ஆப்ரஹாம் கையில் தான் கதையின் மொத்த சுழற்சியும் உள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். விடுபடல்கள் அவனது தேர்வே. அவந்திகையுடனானஅவனதுகண்ணாடி உரையாடல்கள் வெகு சுவாரஸ்யம். 

நீட்ஷன் கட்டமைக்க விரும்பும் பிரக்ஞை இன்றைய சூழலுக்கு எத்தனை பயங்கரமாக பொருந்துகிறது, வார இறுதி குறித்த இரு வரிகள் மீள மீள யோசிக்க வைத்தது, 

இக்கதையில் தொலைந்த பிரதியை தான்  தாண்டவராயன் கதையில் தேடுகிறோமோ ? நஞ்சுண்டன் சிரிக்கிறார் , அறிவு சிரிஞ்சுகள் பரவலாகாத காலங்களை நினைவூட்டுபவர். பிரதியை தொலைத்தவர், அறிவை அறிவாய் அறியாதவர்.

அறிவுலகின் கதவுகள் அடைக்கப்பட்ட பின் குறுகுறுப்புடன் எட்டிப் பார்க்கும் ஆப்ரஹாம் கையில் கிடைக்காத பிரதி , அதில் ஆர்வமில்லா நஞ்சுண்டனை வந்தடையும் விசித்திரமான கோலங்களை கொண்டது காலம். 

நல்ல வாசிப்பு அனுபவத்தை வழங்கிய கதீட்ரல.

No comments: