யதார்த்தத்தின் மறுகூறல் - கதைகள் அனைத்திலுமே பெரும்பாலும் நாம் காணும் புற உலகு அத்தனை உயிர்ப்புடன் பதிவாகியிருக்கிறது. இத்தனை புறவயமாக இருந்தும் அத்தனை உணர்வுபூர்வமாக இருக்கிறது. அகமும் புறமும் நெருங்கி குழைந்து விட்டது. கதை மாந்தர்களின் உடல் தோற்ற விவரிப்பில் தொடங்கி வீடு வெளி தினசரி அலுவல்கள் அத்தனை உயிர்ப்புடன் உணர்வுகளுடன் விவரிக்க பட்டிருக்கின்றன. இவையே இக்கதைகளின் அடிப்படை கலை.இவற்றின் மேல் கூறப்படும் கதை அமைந்திருக்கிறது. எல்லா நல்ல கதைகளுக்கும் மேல் சொன்னவை பொருந்தும் என்று தோன்றினாலும் கதைகளின் வீச்சு பன்மடங்காவது இத்தனை உயிர்ப்பான யதார்த்தத்தை அது தன்னிடையே கொண்டிருப்பதால் தான். மேலும் இத்தனை உயிர்ப்பான விஷயங்களை நாம் சராசரி வாழ்வில் கண்டு கொள்கிறோமோ என்பதே பெரிய கேள்விக்குறி.
வாழ்விலிருந்து நழுவுதல் - கடைசி நழுவல் மரணமாக இருப்பினும் இக்கதைகளின் நிகழ்வுகள் நனவிலிரிந்தும் சலிப்பான அல்லது தாங்க முடியாத யதார்த்தத்திலிரிந்தும் கனவு வழி நழுவுகிறது. கனவுகளின் இனிமை நல்லது. கனவுகளின் கோரம் அவை உண்மையில் நடக்க வில்லை என்ற ஆசுவாசம் தரவல்லது .பெரு நேரத்தை வாழ்வின் உயிர்ப்பிலும் சிறு நேரம் வாழ்வின் கனவுகளிலும் களிப்பதே சரியான ஒன்றாக இருக்கும்.
மீதமிருக்கும் ஏகாந்தம் - காலமும் இடமும் இது வரை விட்டு வைத்திருக்கும் அல்லது இதற்கு முன் இருந்த ஏகாந்தத்தை நினைவூட்டும் கதைகள் இவை. நம்பவே முடியாத அளவுக்கு கால நிதானத்தையும் அள்ள முடியாத வெளியின் விகாசத்தையும் இந்தக் கதைகள் நமக்கு உரைக்கின்றன.
நவீன மனதிற்கு, மரணத்திற்கு முன்பாக , உடல் புறம் குறித்த உயிர்ப்பையும் உணர்வையும், கனவின் அழகான நழுவலையும், கால இட ஏகாந்தத்தின் தேவையையும் இந்தக் கதைகள் உணர்த்துகின்றன.
நிர்மால்யா அவர்களின் மொழியாக்கம் அற்புதம்.
No comments:
Post a Comment