Saturday, December 28, 2024

தனித்தீவு

 


தனித் தீவு 

"இந்த கப்பலின் என்ஜின் பழுது, நங்கூரமும் கிடையாது "வண்டலை கடந்து எங்கள் ஓட்டைபடகில் அந்தத் தீவை அடைந்த நேரம் அவர் பேசத் தொடங்கியிருந்தார்.

"உங்களை யார் இந்தத் தீவிற்கு  ஓட்டை படகில் வரச் சொன்னது,  திரும்பி செல்வது சிரமம்"  என்றார் என்னிடம்.

தீவில் உள்ளவர்களின் கைகளில் மின்னியபடியே இருக்கும் ஏதோ ஒரு பொருள் இருந்தது, தீவிரமான முகத்துடன் அவர் கூறினார்
"ஓட்டை படகிலிருந்து நீரை இறைக்க  மின்னும் இந்த சின்னஞ்சிறு குடுவைகள் போதுமா என்று தெரியவில்லை" 

திடீர் பரவசத்துடன் என் கையில் ஒரு மின்னும் குடுவையை கையளித்து அவர் கூறினார் "வெகு காலம் முயன்றால் இப்பணியினை முடித்துவிடலாம் "

நீரை இறைக்கையில் எனக்கு சட்டென புரிந்தது, அவர் தனது ஓட்டை படகை, கப்பல் என்று,  இத்தனைக் காலம் கருதி வந்தது.  கேட்கலாம் என்று நினைக்கையில், அவர் கிழிந்த தன் வரலாற்று பக்கங்களை, மின்னும் குடுவையில் இருந்த திரவம் கொண்டு, ஒட்ட வைக்க முயன்று கொண்டிருந்தார்.  நான் பார்த்தவுடன் பக்கங்களை சுருட்டி கொண்டு வந்திருந்த பையில் திணித்து எவ்வளவு கவனமாக இருந்தாலும் பக்கங்கள் இப்படி கிழிந்து விடுகின்றன என்றார்.

அவர்  "தனிமையை மின்னும் குடுவையில் வைத்து இறைப்பது"  ஒரு கலை என்றும்  வெகு காலம் இத்தீவில் இதற்கான பயிற்சி நடைபெற்று வருகிறது என்றும் பயிற்சி காலத்தை உபயோகமாக கழிக்கும்படியும் எனக்கு அறிவுரை வழங்கினார். 

"இறைக்கும் நீரில் ஏன் சார் இத்தனை வேறுபாடு ..மின்னும் குடுவைகளில் ஏன் இத்தனை நிறங்கள்? " என்று நான் கேட்டேன் 

"நீரிலும் இரத்தத்திலும் கண்ணீரிலும் வியர்வையிலும்  தனிமையிலும்  வேறுபாடு கிடையாது என்று கூறி மின்னும் குடுவை முனை கொண்டு இருவர் கைகளிலும் கீறினார். வெளி வரும் தனிமையின் நீரை பருகும்படி கோபமாக கட்டளை இட்டார்
சிறிது இளகி  வேறுபாடு உண்டு என்றும் நீ தான் வேறுபாட்டை தாண்ட வேண்டும் என்றும்  இறைஞ்சி கண்ணீர் உகுத்தார். சிறிது கண்ணீரை விண்டு எனக்கு அளித்து  சிறிது கரித்தாலும் இந்த தீவில் கண்ணீரின் சுவை அபாரமாக இருக்கும் என்றார்.

தீவில் இல்லாதவர்கள் குறித்த முறைப்பாடு தேவையற்றது என்று கூறிய அதே தருணத்தில் தனது காதலியின் முகம் நினைவுக்கு வருவதாக கூறி என் கன்னத்தில் எச்சில் நிறைந்த அற்புத முத்தம் ஒன்றை வைத்து " இந்த ஒட்டு மொத்த தீவிற்கான முத்தம்" என்றார்.

ஓட்டை படகின் மின்னும் குடுவைகள் நிரம்பியபடி இருந்தன.

தீவில் இருந்தவன் கேட்ட பழைய முடிவுரை 

"நீரின்றி அமையாது உலகு 
ய ஏ॒வம் வேத॑
யோ॑பாமா॒யத॑னம்॒ வேத॑
ஆ॒யத॑னவான் பவதி".
 


No comments: