Thursday, December 26, 2024

விஷ்ணு வந்தார்

விஷ்ணு வந்தார் சிறுகதை தொகுப்பு வாசித்து முடித்தேன். ஏற்கனவே தனித்தனியாக அனைத்து கதைகளையும், விஷ்ணு வந்தார் , ஒத்திசைவு கதைகளை தவிர மீதி கதைகளை வாசித்து இருந்தேன். நேற்று மொத்த தொகுதியையும் ஒரு சேர வாசித்தேன். கதைகள் மிகவும் நன்று.



பெரும்பாலான கதைகளின் முடிவில் அமைதி கூடி வருவதாகவே உணர்ந்தேன். ஒருவர் பிறந்த பின் இந்த வாழ்வை கடக்க, ஆற்றுப்படுத்த, நுண்மையாக உணர, அனுபவங்களின் போதாமையை நிரப்ப, முன்னோர் காட்டும் வழி முக்கியமானதாக இருக்கிறது. 

முன்னோர் கையளித்த சடங்குகள், அவர்கள் விட்டு சென்ற கதைகள், அவர் தம் அறிவியல், முன்னோரின் தெளிந்த வாழ்வியல் தேர்வுகள் இவற்றை ஒன்றோடு ஒன்று பிணைத்து நாம் இயற்கையை, நமது வாழ்வை புரிந்து கொள்கிறோம். அனைத்து வாசல்களையும் திறந்து அறிபவனுக்கு இயற்கை என்றும் ஒரு முடிவிலா ஆச்சரியம் தான். அறிதல் சட்டகங்கள் பல, பல்லுயிர் நோக்கி அறிய, வெளியும் கடலும் அறிய, நம் உடலை அறிய, எண்ணங்களை அறிய, உறவுகளை அறிய எத்தனை எத்தனை வழிகள்.

கதைகள் பெரும்பாலும் ஆசிரியரின் தேடல் பயணத்தின் ஆக்கங்கள், அவர் தேடிப் பெற்றவை,  அவற்றை சற்றே விண்டு வாசகனுக்கு அளித்திருக்கும் முயற்சி, இன்னும் கொஞ்சம் மௌடிகம், குறைவான சொற்கள், கதைகளின் கலைத் தன்மையை புதிர் தன்மையை கூட்டியிருக்கும். ஆனால் மேலதிக சொற்களே இக்கதைகளை நெருங்கி வர உதவியது. 

விஷ்ணு வந்தார் கதையில் பித்ரு ஸ்தானத்தில் உள்ளவரை பித்ருவாகவே  கண்டு  சொன்னது,   நீர்பதுமராகம் கதையில் பூச்சிகள் தாவரங்கள் வரலாற்று குறித்த தகவல்களை ஆசிரியரின் தேர்வு வழி பிணைத்து  இயற்கையின் சமனை குறிப்பதன் மூலம்,அது நீ குறிக்கும் Suffering ன் நீக்க முடியாத தன்மை பற்றிய பகுதி,எண்ணங்களை  எண்ணும்  அலகை சாமியார் உணர்த்தும் இடங்கள் - நவம் - இவ்வாறு பொதுவில் அறிவியல் வழி அறியும் இடங்களை நம் சடங்குகளும் கதைகளும் தொடும், இணையும், ஒன்றை ஒன்று நிரப்பும் இடங்களை கொண்ட கதைகள் இவை.

உணவிற்கு உள்ளது போல் சொற்களுக்கும் வயிறு உள்ளது இல்லையா - மேலும் மேலும் என்று கேட்டுக்கொண்டே இருக்கும் தன்மையிலான வயிறு. நல்ல எழுத்தாளர்கள் அளிக்கும் செறிவான உணவை உண்பதற்கு வாசகர் சார்பிலும் தேடலும் சிறிது மௌனமும் அவசியம்.

ஓம் ப॒⁴த்³ர-ங்கர்ணே॑பி⁴-ஶ்ஶ்ருணு॒யாம॑ தே³வா: । ப॒⁴த்³ர-ம்ப॑ஶ்யேமா॒க்ஷபி॒⁴-ர்யஜ॑த்ரா: । ஸ்தி॒²ரைரங்கை᳚³ஸ்துஷ்டு॒வாக்³ம் ஸ॑ஸ்த॒னூபி॑⁴: । வ்யஶே॑ம தே॒³வஹி॑தம்॒ யதா³யு:॑ । ஸ்வ॒ஸ்தி ந॒ இன்த்³ரோ॑ வ்ரு॒த்³த⁴ஶ்ர॑வா: । ஸ்வ॒ஸ்தி ந:॑ பூ॒ஷா வி॒ஶ்வவே॑தா³: । ஸ்வ॒ஸ்தி ந॒ஸ்தார்க்ஷ்யோ॒ அரி॑ஷ்டனேமி: । ஸ்வ॒ஸ்தி நோ॒ ப்³ருஹ॒ஸ்பதி॑-ர்த³தா⁴து ॥

ஓம் ஶான்தி॒-ஶ்ஶான்தி॒-ஶ்ஶான்தி:॑

No comments: