Sunday, April 13, 2025

பிருதிவிராஜனின் குதிரை

கடந்து விட்ட பழையன குறித்த வியப்பு, பெருமை, ஏக்கம் வெளிப்படும் அழகியல் அமைந்த கதைகள் இந்த தொகுப்பில் உள்ளன. 

இந்தியாவை ஆங்கிலேயர்கள் விட்டு சென்று, ஜமீன்தார்கள் விட்டும் விடாமலும் இருந்து கொண்டிருந்த கால கட்டத்தில் அமைந்த கதைகள் இவை.



தனிப்பட்ட ஆசை உணர்வுகள் ஏக்கம் குறித்த அளவில் அமைந்த கதைகள் வாசிக்க சுவாரஸ்யமாக இருந்தாலும் அவை மேலதிகமாக நினைவு கூரத்தக்கதாக இல்லை. 

அரசியல் தளத்தில் அமைந்த கதைகளில் இந்தியாவில் அன்று நிலவி வந்த மன்னராட்சியும் இல்லாத மக்களாட்சியும் அமையாத குழப்பமான சூழ்நிலை பதிவாகியிருக்கிறது. ஆனால் குறிப்பிடத்தக்க கதைகளாக அமையவில்லை. 

இப்பதிவினை எழுத தூண்டுதலாக அமைந்த கதைகள் நான்கு , புத்தக தலைப்பு கதையான "பிருதிவிராஜனின் குதிரை" , நீரில் மூழ்கிய பள்ளத்தாக்கு", "நிர்வாணம்" மற்றும் "முதலையின் மனைவி" ஆகிய கதைகளே அவை.

நான்கு கதைகளுமே வேறு வேறு தளங்களில் மிகவும் நன்றாக அமைந்து விட்ட கதைகள் - கிட்டத்தட்ட படிமங்களாகவே நினைவு கொள்ளும் படி அமைந்து விட்ட கதைகள். 

பழையது குறித்து பல்வேறு பரிணாமங்களை "பிருதிவிராஜனின் குதிரை" மிக கச்சிதமாக தொட்டு செல்கிறது. அடைத்து வைக்கப்பட்ட ஏக்கமும் பெருமிதமும் கதையின் மைய சரடு.

நீரில் மூழ்கிய பள்ளத்தாக்கு - நவீன இந்தியாவின் பொருளாதார சுய சார்பு வளர்ச்சி பாதையின் துவக்கத்தில் நடந்த கதை, வளர்ச்சி கொண்டு வரும் மாற்றங்கள் குறித்த பல இடங்களை தொட்டு செல்லும் கதை.

"நிர்வாணம்" கதை நம் இந்திய இறை நம்பிக்கையின் ஊற்றையும் தற்செயல் நிகழ்வுகளையும் நுட்பமாக இணைக்கும் கதை.

"முதலையின் மனைவி" கதை மேலை கீழை வாழ்க்கை பார்வைகளை குறித்த நாட்டார் கதைகளின் சாயல் கொண்ட கதை.

நான்கு கதைகளும் எளிதில் நினைவில் கொள்ளத்தக்கவை.இன்னொருவருக்கு திரும்ப கூறுகையில் மனதிற்கு மகிழ்ச்சியையும் உவகையையும் அளிப்பவை.

பெரும்பாலான கதைகளில், கதை மாந்தர்கள் தெய்வமாக பேயாக மிருகமாக உருமாற்றம் அடைவதும், நடந்த நிகழ்வுகள், நிகழாத பிரமைகள் மற்றும் கனவுகள் ஒன்றோடு ஒன்று இணைவதும் கதையின் மையப் புள்ளிக்கு வலு சேர்க்கின்றன.

Saturday, March 22, 2025

காண கண் கோடி வேண்டும்

சின்ன அண்ணாமலை அவர்களின் பயண நினைவுக் குறிப்புகள் அடங்கிய நூல் 



எட்டயபுரம் பாரதி நினைவு மண்டபம் திறப்பு, 

நவாப் ராஜாமணிக்கம் அவர்களின் அய்யப்பன் நாடகம்,

சங்கரன் கோவில் ஆலய பிரேவேசம்,

நெல்லையப்பர் கோவில் ஆலய பிரவேசம்,

கல்கத்தா தமிழ் சங்க நிகழ்ச்சிகள்,

சாந்திநிகேதன் நிகழ்ச்சிகள்,

இந்தியா சுதந்திரம் அடைந்த நாளின் கல்கத்தா நகர மற்றும் ஆளுநர் மாளிகை காட்சிகள்.

நகைச்சுவையுடன் மிகுந்த உணர்வு பூர்வமாக மேற்கண்ட நிகழ்ச்சிகள் விவரிக்க பட்டிருக்கும் பயண நூல் இவை. இந்திய வரலாற்று தருணங்களின் நேரடி சாட்சியாக அமைந்திருக்கும் நூல்.




Sunday, March 02, 2025

இந்தியா 1944-48



குடும்ப விஷயங்களில் உடலை புறந்தள்ளி, கணவன்-மனைவி, அம்மா, சகோதரர், சுற்றம் இவர்களின் மன ஓட்டத்திற்கு மதிப்பளிக்கும் அம்மதிப்புகளின் வழி உருவாகும்  இன்ப லாகிரிகளை மேம்படுத்திக் கூறும் படைப்பு. 

குறியீட்டு ரீதியாக சுதந்திர இந்தியாவின் நிலையை புரிந்து கொள்ளும் விதமாக, இந்தியாவில் ஒரு கால் , வெளிநாட்டில் மறு கால் என்னும் இன்றிருக்கும் நிலையின் பூர்வ வடிவமாய் கதையின் மைய முடிச்சு இருக்கிறது.அந்நிய நிதியை, அந்நிய விஷயங்களை ஏற்றுக் கொள்ள அந்நாட்களில்  உண்டான தயக்கம், குற்றவுணர்வு,  வெறுப்பு குறித்த கோணங்களையும் நாவலை வாசிக்கையில் நாம் உணரலாம்.

இந்த சஞ்சலங்களுக்கு அப்பால் உள்ள உலகில் இருவர் நாவலில் இடம் பெறுகின்றனர். ஒரு வேளை அவ்விருவரும் தான் இந்தியா என்றவுடன் மனதில் தோன்றும் படிமங்களாக நாம் கருத வாய்ப்புள்ளவர்கள். சளைக்காத கிருஹஸ்தனும் சிரித்துக் கொண்டே இருக்கும் சந்நியாசியுமே அவ்விருவர்கள்.

Wednesday, January 22, 2025

பெரிய மனிதன் - க.நா.சு.

 


அக்கரை சேர பணம் அவசியம் என்பது ஒருவாறு புரிந்து தான் இருக்கிறது, இடையில் வரும் சஞ்சலங்களும் லட்சியங்களும் தீர்வுகளும் பணம் குறித்து அறிந்து கொள்ள உதவுகின்றன.

தனி மனிதன் தொடங்கி மகா பெரிய நாடுகள் வரை பொத்தி பதுக்கி வைக்கப்படும் பணம் அதன் போக்கில் இன்னொரு வழி கண்டு தண்ணீராக ஓடுவதை நாம் பார்த்துக்கொண்டே வருகிறோம். 

பணம் பற்றிய நம் தத்துவ விசாரங்கள் சற்று கலங்கலாகவே இருக்கிறது, பணம் என்றவுடன் நம் மனதில் தோன்றுவது நமது உடனடி தேவைகள், நமது கடன்கள், கூடவே பணம் இருந்தால் நாம் செய்திருக்க கூடிய உதவிகள், பணம் இன்றி நாம் முழுங்கிய அவமானங்கள், பணம் பெற்று தரும் வசதிகள், பணம் என்ற விஷயம் கால ஓட்டத்தில் ஆளுமையாகவோ சொத்தாகவோ பொறுப்பாகவோ அக்கறையாகவோ அன்பாகவோ வெளிப்பட கூடிய பகல் கனவு சாத்தியங்கள், இவை அனைத்தும் ஒன்றோடு ஒன்று முண்டியடித்து நம் எண்ணங்களை பாதிப்பதால் நம் விசாரம் கலங்கலில் முடிகிறது.

பணம் ஈட்ட நாம் மேற்கொள்ளும் முயற்சிகள் பல நேரங்களில் சஞ்சல நிழல்களை தோற்றுவிக்கும் - அப்படியான ஒரு சஞ்சலத்தின் கோட்டு வரைபடம் இந்த குறுநாவல். சஞ்சலம் தீரும் விதமே நாவலின் இறுதிப் புள்ளி. 

நாயகனின் மன சஞ்சலத்தில் தொடங்கி எண்ண கலங்கலின் வழி நாம் பயணித்து இறுதியாக அவரது சஞ்சலம் தீரும்படியாக நாவல் முடிகிறது. சஞ்சலம் உதிர்ந்து தீரும் விதம் வாசகனுக்கு ஏற்க முடியாத ஒன்றாக இருக்கலாம் ஆனால் அவற்றில் இருக்கும் உண்மை கசப்பாகவே இருக்கிறது. நாயகன் மட்டுமல்ல வாசகர்களாகிய நாமும் இவ்வகை தீர்வுகளை சில நேரங்களில் அடைந்திருப்பதே நாம் உணரும் கசப்பிற்கு முக்கியமான காரணம்.

Monday, January 20, 2025

வாராணசி - எம் டி வாசுதேவன் நாயர்

காசியின் செறிவான சில படிமங்களை இணைத்து அமைக்கப்பட்டிருக்கும் நாவல்.  


தனிப்பட்ட மீட்சிக்காக ஏங்கும் கதாநாயகனின் வார்த்தைகளில் அவனது வாழ்க்கை வரலாறு விரிகிறது. தன் செயல்களுக்கு பொறுப்பு ஏற்றும் ஏற்காமலும் தனிமையில் தவிக்கும் நாயகனின் நிலை - நிலை கொள்ளா தொடர் யாத்திரை மேற்கொள்ளும் அவன் ஒரு பார்வையாளனுக்கான இடத்தைப் பெறுகிறான். காமத்தின் குன்றாத தீயின் இயல்பை நெருங்கி அறிந்தவன் இவன். 

மனதில் நிற்கும் இணை கதைகளே காசியின் மொத்த விரிவை நமக்குக் காட்டி தருகிறது. முக்தி பவனின் மேலாளர் ஆகும் ஓம் பிரகாஷ், காசியின் நவீன கால ராஜாவாகும் ராம்லால், புத்தக சுவர்களிடையே தன் வாழ்வை அமைத்துக் கொண்ட நூலகர் சந்திரமௌலி , ஆராய்ச்சியாளர் சுமிதா இவர்களின் இணை கதைகள் என்றும் உள்ள காசியின் நவீன முகங்களாக இந்த நாவலில் அமைந்துள்ளன.

திவோதமன் கதையும் காசிராஜனின் கதைகளும் புராண காசியின் தெய்வக்கதைகளும் காமக்கதைகளும் நாவலுக்கு அழகு சேர்க்கின்றன.

மரணத்தை இயல்பாக்கிய காசி காமத்தையும் அவ்வாறே கருதுகிறது என கொள்ளலாம். 

தத்தளிப்பவர்களுக்கு ஒரு விதமாகவும் தன்னறம் உணர்ந்தவர்களுக்கு வேறு மாதிரியும் காட்சி அளிக்கும் காசி. 

ஆட்டக்காரர்களுக்கு ஒரு மாதிரியும் பார்வையாளர்களுக்கு வேறு விதமாகவும் காட்சி தரும் காசி. 

வெளி உலகத்திற்கு மர்மமும் புதிரும் நிரம்பிய காசி

உள்ளவர்களின் துன்பத்தை ஆற்றுப்படுத்தும் காசி 

பிறவி வாழ்வெனும் துன்பத்தை முடித்து வைக்கும் காசி 

அறிவெனும் அலகால் அளக்க முடியா காசி 

கதைகளும் புராணங்களும் கூறியதில் எஞ்சும் காசி

--

கதையின் வீச்சு குறைவெனினும் சுருங்க சொல்லி இத்தனை வாழ்க்கைகளை பற்றி கூற முடிந்திருப்பதே நாவலின் வெற்றி.

சிற்பி அவர்களின் நல்ல மொழிபெயர்ப்பு.

Wednesday, January 15, 2025

நினைவுகளின் ஊர்வலம்



காசு கஞ்சி குப்பாயம் கள் காமம் என பிரித்து எழுதப்பட்ட சுயசரிதை நினைவு குறிப்புகள். இவ்வாறு பிரித்து இருப்பது நல்லது என்று படுகிறது . ஒன்றின் வழி இன்னொன்று வரும் என்றாலும் அடிப்படையில் இவை வெவ்வேறானவை, ஒன்றை இன்னொன்று நிரப்ப முயன்றாலும் நிரம்பாத ஒன்று நிரம்பாது நிற்கும். 

எம் டி இவற்றை அணுகிய விதத்தில்  நாம் கற்று கொள்ள வேண்டியவை,

- கடும் பற்றாக்குறை நிலவிய தருணங்களில் நாம் வெளிபடுத்த வேண்டிய பெருந்தன்மை, 

-மிஞ்சி கிடைப்பவற்றுள் அமைந்த தேர்வும் ரசனையும் நாமே அமைக்க வேண்டிய பாதையாக தான் இருக்க வேண்டும், 

-மிக குறைவான தேவைகளுடன் நாம் வாழ்ந்து விட முடியும், நாம் செய்ய நினைக்கும் செயலின் ஊக்கத்தில்  முழுகியிருப்பது மட்டுமே நாம் செய்ய வேண்டியது - ஏனையவை காலத்தின் கைகளில் இருக்கும்.கிடைத்த அறைகளில் தங்கி எழுதி கொண்டிருக்கும் எம் டி யின் சித்திரம் என்றும் மனதில் நிற்கும்.

காமம் குறித்த நினைவு குறிப்புகள் இந்த புத்தகத்தில் அநேகம் இல்லை.

2025

 



ஆதிக்குடிமக்களும் ஆல்கஹாலும் (பாகம் 1) - பிரபு தர்மராஜ் 

கெத்சமனி  - பிரிம்யா கிராஸ்வின் 

நினைவுகளின் ஊர்வலம் - எம் டி வாசுதேவன் நாயர் சுயசரிதை குறிப்புகள் - தமிழில் டி எம் ரகுராம் 

வாரணசி - எம் டி வாசுதேவன் நாயர் 

பெரிய மனிதன் - க.நா.சு.

சார்வாகன் கதைகள்

இந்தியா 1944-48 - அசோகமித்திரன்

காண கண் கோடி வேண்டும் - சின்ன அண்ணாமலை

பிருதிவிராஜனின் குதிரை - மனோஜ் தாஸ் , தமிழில் இளம்பாரதி