பழங்கனவின் உண்மை
லட்சிய உணர்வுடன் கூடிய இந்த கனவை நீங்களும் கண்டிருக்கக் கூடும் , இயற்கை கேடில்லாத சூழல் , வாஞ்சையான சுற்றம், உடல் உழைப்புடன் கூடிய ஒரு தொழில் , பெரிய கனவுகள் இடம்பெறாத சீரான, ஆதியிலிருந்து இப்படி தான் வாழ்ந்து வருகிறோம் என்ற எண்ணத் தொடர்ச்சியில் மாறாத காலத்தில் இயற்கையுடன் கலந்து இருக்கும் ஒரு கனவு வாழ்வு , கதையின் நாயகன் நாச்சப்பன் கிட்டத்தட்ட இந்த கனவின் அருகில் வாழ்ந்து வருபவன். அந்த கனவு வாழ்வின் அசலில் ஜாதி உண்டு சுரண்டல் உண்டு, அந்த கனவின் சுவடை அழிக்க வல்ல எல்லாம் உண்டு என்றாலும் அந்த கனவிலும் ஒரு நியாயம் உண்டு, நவீனத்தின் ,இயந்திரத்தின் வேகம் அறிய வைக்கும் காலக் கண்ணாடியாகவும் அந்த கனவு தொடர்ந்து கொண்டே இருக்கிறது, நவீன உலகத்தின் பதட்டத்தில் இருந்து விடுபட ஆசையாக அந்தக் கண்ணாடியை எடுத்து நாம் கண்டு அக்கனவினை மீட்டி மகிழலாம்.இந்த தொடர்ச்சியான கனவு வாழ்வில் நவீனமும், இயந்திரமும், வாங்கிக் குவிக்கும் பண்பாடும்,குறுக்கிடுகையில் ஏற்படும் மாற்றங்களை குறித்து,இயல்பான தொனியில் எந்த வித மட்டையடி கருத்துக்களுமின்றி, நாம் அறிந்து கொள்ள இந்நாவலை வாசிக்கலாம்.
தீர்க்கதரிசனம்
இது யதார்த்த பாணி நாவல். நாவல் நடக்கும் காலத்திற்கும் இப்போதைய காலகட்டத்திற்கும் இடையே எழுபது ஆண்டுகள் இடைவெளி. நாவலின் இறுதியில் கதை மாந்தர் எடுக்கும் முடிவுகளாக ஆசிரியர் அமைத்து இருக்கும் விஷயங்கள் தீர்கதரிசனமாக அமைந்து விட்டது , அவ்விஷயங்கள் கொங்கு வட்டாரத்தின் தொழில் முனைப்பிற்கு சான்றாக அமைந்திருக்கிறது. அதே நேரத்தில் அம்முனைப்பின் வெறியின் நிழலில் உள்ள இன்றைய சூழலியல் யதார்த்தம் முகத்தில் அறைகிறது.
நேரம் குறித்த பிரக்ஞை
மெதுவாக நகர்ந்து செல்லும் காலத்திற்கு கொடுக்கப்பட்ட சாட்டையடி மணிக்கூண்டுகள் எனக் கூறலாம், நொடிக்கு நொடி மக்கள் வாழ்வின் நேரம் குறித்த பிரக்ஞை வளர்வதற்கு நவீனம் தான் காரணமாக இருந்திருக்கிறது, நேரமும் அது குறித்த பதட்டமும் நவீனத்தின் கூடப் பிறந்த குழந்தையாகவே இருக்கிறது, இந்த நேரம் குறித்த பிரக்ஞை இந்த நாவலில் மில் சங்கின் அலறல் என்ற வகையில் பதிவாகி இருக்கிறது, சங்கொலியை தொடர்ந்து சாரை சாரையாக மக்கள் வெளிவரும் அல்லது மில்லுக்கு உள்ளே செல்லும் சித்திரம் மாடர்ன் டைம்ஸ் படத்தில் கண்ட சித்திரம், அப்படம் குறித்து ஒரு திரையிடல் போது ஒருவர் கேட்டார், "படம் வந்து நூறாண்டுகள் ஆகிவிட்டது , அப்போது இருந்ததை விட இப்போது இயந்திர மயம் அதிகமாகி விட்டதே என்று ? "
முதலாளித்துவத்தின் கேள்விகள்
உடல் உழைப்பையும் முதலையும் ஒரு கணித சமன்படாக கருத துவங்கியத்தில் முதலாளிக்கு ம் தொழிலாளிக்கும் எதிர்பாராத சவால்கள் ஏற்பட்டு விட்டன , தொழிலாளியும் இயந்திரமும் ஒன்றாகியதில் ஒருவருக்கொருவர் முடிவுறாத யுத்தம் தொடங்கி நடைபெற்று வருகிறது, முதலாளியின் தன்முனைப்பும் தொழில் ஆர்வமும் வெறும் பணத்தாசையாய் சுருக்கும் உரையாடல் தொழிற்சங்கங்களின் நங்கூரமென ஆகிவிட்டது, மில்லின் அலகாக சேரும் தொழிலாளிக்கு எதிர்வினை ஆற்றும் வாய்ப்பாக அமையும் வாய்ப்புகள் குறித்து சற்று அறியலாம், ஒன்று இடையறாத அந்த கணக்கு குறித்து முதலாளிகளுடன் பேரம் பேசும் தொழிற்சங்க பிரதிநிதி, இரண்டு அத்தொழிலை பயின்று தானே ஒரு முதலாளி ஆவது, இவ்விரு வாய்ப்புகளின் வார்ப்பாக கருபண்ணனும் கிட்டப்பனும் வருகிறார்கள்.
வரிசை
கநாசு இட்ட நவீன இலக்கிய வரிசையில் ஆர் சண்முகசுந்தரம் அவர்களின் பெயர் இருந்தது, இன்று நவீன இலக்கியம் குறித்து விமர்சகர் எவரும் வரிசை இடுகையில் சண்முகசுந்தரத்தின் பெயர் விடுபடுவதற்கு வாய்ப்பிருக்கிறது, எழுத்தாளர் எஸ் செந்தில்குமார் கூறி வரும் " பொதுக் குரல் சாதியத்திலிருந்து வராது" என்னும் வரியை நினைவுக்கு கொண்டு வருகிறேன், எளிய புற காட்சிகளோடு சாதி தவிர்த்து சமூகத்தின் குறுக்கு வெட்டு தோற்றத்தை விவரிக்கும் படைப்புகளை இக்காலத்தில் எவரும் விரும்புவதில்லை, மனம் உறவு சிக்கல் குறித்த தீவிரமான படைப்புகள் , சாதி வட்டார படைப்புகள், வரலாற்று படைப்புகள் முதலியவையே வாசகன் மத்தியில் அதிக கவனம் பெறுகின்றன. சிக்கல் இல்லாத ஆனால் சாதாரண வாழ்வின் கணங்கள் அவதனிப்புகள் தற்கால இலக்கியத்தில் மிகவும் அரிதாகவே இடம் பெறுகின்றன, "தனி வழி" அப்படிபட்ட பொதுப்படைப்பாக அமைந்துள்ளது.