Sunday, June 21, 2020

மனம் - பெரியசாமி தூரன்

அறிமுக நூல்களை படிக்கையில் அடுத்து அடுத்து புதிய கலைச்சொற்கள் தோன்றியபடி இருந்து வாசிப்பவர் மலைத்து போவும் விதமாக அமைந்து இருக்கும் ஆனால் தூரன் அவர்கள் நூல்களில் குறைவான அளவே புதிது புதிதாக கலைச்சொற்கள் வருகின்றன,அதே நேரத்தில் மீண்டும் மீண்டும் அந்த ஒரு கலை சொல் குறித்த விளக்கம் வெவ்வேறு இடங்களில் வந்தபடியே இருக்கிறது. இந்த நடைத்தேர்வின் மூலம் விஷயங்களின் அடிப்படை குறித்த தெளிவான புரிதல் கிடைக்கிறது. 


எளிமையான விளக்கங்களின் இன்னொரு ஆபத்து சிக்கலான நுட்பமான இடங்களை எவ்வாறு விவரிப்பது என்பது ? அத்தகைய இடங்களில் தூரன் விஷயங்கள் அவ்வளவு எளிமை அல்ல என்று வெளிப்படையாக ஒப்பு கொள்கிறார், அதே நேரத்தில் பல்வேறு கோணங்களில் அவ்விஷயம் எவ்வாறு பார்க்கப்படுகிறது என்பதை விவரிக்கிறார், " என்று கூறுவாறும் உண்டு" , என்று கூறுவாறும் உண்டு"  என பல்வேறு ஆராய்ச்சிகளின் முடிவுகளை கோடிட்டு காட்டி  விஷயத்தின் நுட்பங்களை எடுத்துரைக்கிறார்.

விஷயத்தின் தோற்று வாய் குறித்து தொடங்கி மேலும் விவரிக்க அவ்விஷயம் தொடர்ந்து எப்படி பயணப்பட்டு வருகிறது என்பதை கவனமாக பதிவு செய்கிறார் , குறிப்பிட்ட நபரையோ, சாராம்சத்தையோ தூக்கிப் பிடிக்காது, அவ்விஷயம் குறித்த புரிதலில் ஏற்பட்டுள்ள கால வாரியான மாறுதல்கள்,  அவ்விஷயம் குறித்த வெவ்வேறு நபர்களின்  பார்வைகளை குறித்து கூறி அவ்விஷயத்தை முழுமையாக புரிந்து கொள்ள உதவுகிறார்.

எப்படி  மன ஆராய்ச்சி துறையில் ஒரு சிறிய புரிதலை அடைய தொடர் ஆராய்ச்சிகளும், தரவுகள் சேகரித்தலும், பல்வேறு நபர்களின் பங்களிப்பும் கூடி வருகிறது என்பது இந்நூலை வாசிக்கையில் புலனாகிறது.
________

கநாசு " பிராய்ட் கும்பல்" என்று எழுதியதை வாசித்தது நினைவில் இருக்கிறது , இது மனதில் எப்படியோ தங்கி விட்டது, பிராய்ட் குறித்த விட்டேத்தியான மனநிலையை தோற்றுவித்துவிட்டது, தொடர்ந்து டாக்டர் ஷாலினி கூறி வரும் விளக்கங்கள் என்னுள் ஒரு வித ஒவ்வாமையை ஏற்படுத்தியது,  இந்நிலையில் தான் பிராய்ட் கூறிய பெரும்பாலான கருத்துக்கள் தாங்கிய பெ தூரன் அவர்கள் எழுதிய மனம் குறித்த நூல்களை வாசிக்க நேரிட்டது ,இந்த ஒவ்வாமை பாலுணர்வு சார்ந்தது , அனைத்து மன சிக்கல்களுக்கும் பாலுணர்வே அடிப்படை என்பது பிராய்ட் சித்தாந்தம், இங்கே ஒரு சிறிய பெயில் விண்ணப்பம் உண்டு, பாலுணர்வு என்பது காமம் சார்ந்தது மட்டுமல்ல அன்பும் சேர்ந்தது தான் அது என்று பிராய்ட் கூறியதாக தூரன் எழுதி இருப்பது. எனது இந்த ஒவ்வாமை க்கு  வலு சேர்க்கும் விதமாக எந்த அறிவியல் தரப்பு இருப்பதாக நான் முன்னர் அறிந்தத்தில்லை ஆனால் தூரனின் நூல்கள் வழி அட்லெர் மற்றும் யுங் பரிச்சயம் ஆகிறார்கள், archetype யுங் என்று அரைகுறையாக தெரிந்திருந்தாலும் பிராய்ட் அவர்களின் தொடர்ச்சியாய் அட்லெர் மற்றும் யுங் வருகிறார்கள் என்பது இந்நூல் வழியே தெரியவந்தது, பிராய்ட் பாலுணர்வை இன்னொரு வகையில் லிபிடோ என்றும் இத் Id என்றும் கூறுகிறார். யுங் லிபிடோ காம இச்சைகள் மட்டும் நிறைந்த இடம் கிடையாது என்றும் மூதாதையர் சரடு மற்றும் ஆற்றலின் உறைவிடம் என்றும் கருதினார் , இப்படி புரிந்து கொண்டேன் காமம் அல்லாத நடவடிக்கைகள் மூலம் நாம் லிபிடோ வை ஆற்றுப்படுத்த முடியும் இத் ன் இச்சைகளை ஆற்று படுத்த முடியும், 

இவ்விடங்களில் இரு இலக்கிய துணுக்குகள் , தி ஜானகிராமனின் "சக்தி வைத்தியம்" சிறுகதை , சில நாடுகளில் தாயை கண்டே பிள்ளைகள் பாலுணர்வை அறிந்து கொள்ள துவங்குவது குறித்து நான் எங்கோ படித்த ஞாபகம். .இரண்டும் இரு எல்லைகள்.யுங் மற்றும் பிராய்ட் குறித்து புரிந்து கொள்ள இவை உதவும். சக்தி வைத்தியம் கதையில் அடங்காது கத்தி கொண்டே இருக்கும் சிறுவனுக்கு ஓவியத்தை பரிந்துரைத்து லிபிடோவை ஆற்றுப்படுத்தும்  திறமையான ஆசிரியரை , அவரது தாய், ஆசிரியர்த்தனத்தை கணக்கில் கொள்ளாது அவருக்கு சமைக்க தெரியாது என்ற புள்ளியின் வழி எடைபோடுவார் , ஆற்றலின் சக்தியின் வழியை அறியும் வண்ணம் அமைந்த கதை. யுங் இந்தியாவிற்கு வந்திருக்கறார், யோகம் குறித்து அறிந்திருக்கிறார்.

அட்லெர் தாழ்வு மனப்பான்மை என்ற புள்ளியில் இருந்து துவங்குகிறார், வாழ்நாள் தொடங்கிய நாள் முதல் பெற்று கொண்டே இருக்கும் குழந்தை திருப்பி கொடுக்க நினைக்கும் எண்ணத்தை உயர்வு உந்துதல் என்று கூறுகிறார், மனம் கொடுக்கும் உயர்வான இடத்தை விரும்பிகிறது, இவ்விஷயம் குறித்து தூரன் இந்நூலில்  பெரிதாக விளக்கவில்லை ஆனால் அட்லெர் குறித்து தாழ்வு மனப்பான்மை என்னும் நூலை எழுதியுள்ளார்.

அதீத அகத்தை  (Super Ego) என்னும் மனதின் ஒரு பகுதியை போலீஸ் ஆசிரியர்  லட்சியம் என்கிற இடத்தில் வைக்கிறார், லிபிடோவை இத்தை (Id)மிருகங்கள் இடத்திலும் அகத்தை (Ego) நடைமுறை மனதின் இடத்திலும் வைக்கிறார், கூத்தாடும் இத்தும் கண்டிக்கும் அதீத அகமும் அகத்தை ஒரு வழி பண்ணுகின்றன. 

Trance திரைப்படம் இக்கோட்பாடுகளை தொட்டு செல்வதாக திரை விமர்சகர் சுதிஷ் காமத் கூறுகிறார் 

சதா நம் மிருக இச்சைகளை மட்டுமே நினைவுபடுத்தி கொண்டிருக்கும் மன பகுப்பாய்வு முறை  அவை சார்ந்த கலைப்படைப்புகள், உலக நிகழ்வுகள் குறித்த குற்ற உணர்வை தூண்டியபடி இருக்கும் அதீத அகம் என்கிற பிணைப்பு நம் காலத்தில் எப்படியோ அமைந்து விட்டது, இவ்விடத்தில் நாம் நம் மூதாதையர் விதித்துள்ள லட்சியம் குறித்து பேச வேண்டி இருக்கிறது, புலனடக்கம் மன ஓட்டத்தை நிறுத்தும் ஆற்றல் இவையே பூமியில் பிறந்தவர்க்கு இலக்காக லட்சியமாக பெரும்பாலும் கிழக்கில் கூறப்படுகிறது
இச்சைகளை ஆற்றுப்படுத்தி குறைத்து, ஆதி பயம், கவலை , நடைமுறை பொய் மூன்றும் பூச்சியமாகி இருக்கும் இடம் தான் லட்சியமான யோக நிலையா என்று அறிய ஆவலாக உள்ளது.

அடிமனம் மற்றும் மனமும் அதன் விளக்கமும் என்கிற இரு நூல்கள் குறித்த மனப்பதிவு இந்தக்கட்டுரை.

No comments: