Saturday, June 13, 2020

புட்டன்ப்ரூக்ஸ்


சிதைவின் கதை- புட்டன்புரூக்ஸ் 

https://www.jeyamohan.in/133508/



அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம் 

புட்டன்ப்ரூக்ஸ் - எழுதப்பட்டு நூறாண்டுகள் கடந்து விட்டது - கதையின் காலகட்டம் இன்றிலிருந்து ஏறத்தாழ நூற்றைம்பது ஆண்டுகள் பிந்தையது - தங்கள் தளத்தில் வந்த கட்டுரையே இந்த நாவலை வாசிக்க தூண்டியது .

வாசித்து முடிக்கையில் ஒரு வித சோகமான சோர்வான மனநிலையை அடைந்தேன், பெரிதாக திருப்பங்கள் எதுவும் இல்லை  , நாடகீய தருணங்கள் சிறிதளவு  கூட இல்லை, கண் முன்னே ஒரு எழுபதாண்டு காலம் நடைபெறுகிறது , கால பிரவாகத்தை, விதியின் கோலத்தை,  ஆசிரியரின் சிறிய அழகிய சொற்றொடர்கள் வழி அடிக்குறிப்புகள் போல் சொல்லியபடி வாசித்து முடித்தேன், வாசித்து முடிக்கையில் இறுதிப்பகுதி மிகவும் பூடகமாகவும் மொத்த நாவலின் மவுடீகத்தை சற்றே நீக்கி வெளிச்சம் பாய்ச்சுவது போலவும் இருந்தது .

தாத்தா தொடங்கி, மகன் பேரன் கொள்ளுப்பேரன் காலம் வரை செல்லும் இந்த நாவல் எந்த ஒரு தனி மனிதனின் தோற்றத்தை விவரிக்க வெகுவாக மெனக்கெடுகிறது , சிறிய ஆடை மடிப்புகள் தொடங்கி , அணிந்திருக்கும் அங்கியின் தரம் என்ன என்பது வரை நிறைய மெனக்கெடல்கள் , மீண்டும் மீண்டும் உடை குறித்து விவரணைகள் வந்த வண்ணம் இருந்தது , புகைப்படம் குறித்தோ , உருவப்படம் குறித்தோ பெரிய குறிப்புகள் இல்லை 

ஏன் இப்படி இக்குடும்பத்தின் வளமை குன்றுகிறது என்ற கேள்விக்கு பதிலாக நாவலின் காலகட்டத்தில் நிகழும் அரசியல் மாற்றம் , இப்பெரும் குடும்பம் அவ்வரசியல் மாற்றத்தை பெருமளவு சரியாக புரிந்த கொள்ளவில்லையோ என்று ஒரு இழை , வழி வழியாக வியாபாரம் செய்து வரும் ஜேர்மன் குடும்பங்கள் யூதர்களுக்கோ இன்னபிற வணிக குடும்பங்களின் ஆதிக்கத்தில் எப்படி சரிந்தன என்று ஒரு இழை, தாத்தாவின் ஆளுமை மகனுக்கு இல்லை , பேரன் அப்பாவை போல் இருந்தாலும் சிறிய பிசிறு , கொள்ளுப்பேரன் முற்றிலும் வேறு வார்ப்பு என்னும் ஆளுமை சிக்கல்கள் என்று ஒரு இழை , விதிவசத்தால் வீட்டின் பெண்கள் துயரறுகையில் குடும்பம் எவ்வாறு சிறிது சிறிதாக வளமை குன்றியதாக ஆகிறது என்னும் ஒரு இழை , 

அனைத்தும் மிகவும் மௌடீகமாகவே சொல்லப்படுகிறது , ஆனால் இரு விஷயங்கள் கொஞ்சம் அடிக்கோடிட்டு சொல்லப்படுகிறது - தாமஸ் - கெர்டா இருவரின் ஆளுமை வேறுபாடுகள் ,தாமஸ் எனக்கு மிகவும் பிடித்த கதாப்பாத்திரம் , தன் ஆளுமையின் எல்லையை உணர்ந்திருந்தான் , கெர்டா உடனான ஆளுமை வேறுபாடுகள் எவற்றையும் சரி செய்ய கூடிய காலம் கடந்தமையை உணர்கிறான், தன் எல்லைக்குட்பட்டதை செய்து முடிக்கிறான் , கெர்டாவின் இசை ஆளுமை கூட மீண்டும் மீண்டும் பயில்விக்கப்பட்ட ஒரு விஷயம் போல எந்திர தன்மையானதாக இருக்கிறது - குட்டி யோஹான் தன் சுபாவம் வழி தந்தையை மறுதலிக்கிறான் , இசை ஆளுமை வழி தன் தாயையும் மறுதலிக்கிறான் - எடுத்தியம்ப இயலாததான துயரத்தை இசை வழி வெளிப்படுத்துகிறான் - நாவலின் மௌடீகம் இந்த இடத்தில சற்றே கலைகிறது

எது வீழ்ச்சி ஒரு எளிய உயிரின் தவிப்பை உணர முடியாத இயந்திரமாக வணிகமும் இசையும் மாறிவிட்டதா ? இயந்திரமும் இசையும் என்ற  புள்ளியில் இருந்தே நாம் குட்டி யோஹனின் பள்ளிக்கூட நாளை அணுக வேண்டும் ஒரு நாள் பள்ளி வகுப்புகளின் அட்டகாசமான விவரிப்புகளுடன் அமைந்துள்ள இப்பகுதி ஒரு அறைகூவல் -  தற்போது வெளிவந்த "சைக்கோ" திரைப்படத்தில் இந்த நாவலின் தாக்கத்தை காணலாம் , 

மதம் தன் பிடிமானத்தை இறுக்குகையில் , அறிவியல் இயந்திரம் எந்த அளவில் கல்வியின் கூறுகளை மாற்றியமைத்திருக்கிறது என்று எண்ணுகையில் மதமும் அறிவியலும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என புலனாகிறது  , பரஸ்பர விடைகள் முரண்கள் இருந்தும்  , ஒரு வித நிச்சயத்தை சார்பாக வைத்து இரண்டுமே வளர்கின்றன , இந்த நிச்சயம் மதம் வழி கல்வி விஷயத்திலும் , அதே நிச்சயம் அறிவியல்  இயந்திரத்தின் அலகாக கல்வியை ஆக்குகிறது , இங்கே குட்டி யோஹான் போன்ற குழந்தையின் அழுகை செசெமி டீச்சரின் குரல் கேட்டவுடன் அடங்குகிறது .நூற்றைம்பது ஆண்டுகள் தாண்டி அத்தனை இசை இயந்திரர்களையும் தாண்டி யோஹனின் குரல் பீத்தோவன் இசை வழி நம்மை வந்தடைகிறது.

இயந்திரங்களின் ஒத்திசைவு மனிதனை ஒரு அலகாக்குகிறது, இசையின் ஒத்திசைவு அம்மனிதனின் வெறுமையை, கண்ணீரை ஓரளவேனும் ஆற்றுப்படுத்துகிறது.

அன்புடன்,
மணிகண்டன் 

No comments: