Wednesday, June 17, 2020

நவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - சி மோகன்





அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,

வணக்கம்

தங்களின் மேற்கண்ட நூலை வாசித்தேன் மிக மிக சிறப்பான அறிமுகமாக இருந்தது. இந்த புத்தகம் கட்டமைந்திருக்கும் விதம் அருமை. முன்பு கூறியவற்றையே அடுத்த அத்தியாயங்களில் சேர்த்து சேர்த்து கூறியிருக்கும் விதம், நவீன ஓவியத்தின் அறிமுக சித்திரம் வாசிப்பவர் மனதில் நன்கு பதிகிறது. இப்போது நான் கூட நவீன ஓவியங்கள் குறித்து நண்பர்களிடம் உதார் விட முடியும் நிற்க. கலைக்கும் கலை தோன்றும் ஊற்றுக்கண் குறித்தும் நீங்கள் அழகாக வரலாற்று பின்புலத்துடன் இணைத்து எழுதியுள்ளீர்கள் .

புகைப்படத்தின் சவாலை எதிர் கொண்டு உள்முகமாக பயணம் தொடங்கினாலும் அது வரை நடந்த புற நிகழ்வுகளையும் கருத்தில் கொண்டு நவீன ஓவியம் பயணப்பட்டு இருக்கிறது - எளிமையான புறப்பொருள் , இயற்கை, மன எழுச்சி, தொன்மங்கள் , சமகால நிகழ்விற்கு எதிர்வினை ,கூட்டு நனவிலி, கனவு,அரூபம் என அகத்தில் தொடங்கி புறத்திற்கு எதிர்வினை ஆற்றி மீண்டும் ஆழ்மனதில் அத்தனை கேள்விகளுக்கும் விடை தேட முயல்கிறது.

ஜாக்சன் பொலாக் இன்று ஒரு நவீன மனிதன் நிற்கும் இடம் என்று நினைக்கிறேன் அப்பெரிய ஆளுமைக்கு வெளிப்பாடு சாத்தியமாகி இருக்கிறது ,சரியாக வெளிப்படுத்த தெரியாத இயலாத நவீன மனிதன் என்ன செய்வான் ?

ஜாக்சன் பொலாக் குறித்து எனக்கு முன்பே தெரியாது. ஆனால் ஏதோ ஒரு வகையில் பழைய விஷயங்களை அறவே தவிர்த்து தனி மனிதன் மட்டும் மதிப்பிடப்படும்  புதிய உலகை நிர்மாணம் செய்த, செய்து கொண்டிருக்கும் அமெரிக்காவின் சித்திரம் வந்தது. கூட்டம் கூட்டமாய் வாழ்ந்த, வாழ்ந்து வரும் நம் சமூகம் தனி மனிதன்  என்ற இந்த கோட்பாட்டிற்கு அளிக்கும் எதிர்வினையே நம் சமகால வரலாறு என்று புரிந்து கொள்ள முயல்கிறேன்.

இங்கே உதாரண புருஷர்கள் குறித்து சொல்லப்படுகிறது வில்லன்கள் குறித்து கூறப்பட்டு வருகிறது ஆனால் அனைவரும் கிட்டத்தட்ட ஒன்று தான் என எந்திரமும் சொல்கிறது அத்வைதமும் சொல்கிறது. இரண்டுக்கும் இடையில் ரசனையான வாழ்வு இருக்கிறது. ஷங்கர் ராமசுப்ரமணியன் சொல்வது போல "கடைசிக்கு முந்திய ஸ்டாப்பில்" இறங்கத் தெரிய வேண்டும் . 

சிறப்பான நூல் - நீங்கள் கூறியிருப்பது போல படிக்கும் வாசகன் மேலும் முன்னெடுத்து செல்ல வேண்டும். நீங்கள் வழிகாட்டியுள்ளீர்கள்.

அன்புடன்,
மணிகண்டன்

No comments: